உலகத்தில் நிகழும் விந்தைகள் எண்ணற்றவை. ஓர் உயிர் உருப் பெறுவதும் அப்படி ஆச்சரியமான ஒன்று. நமது வாழ்வே, உடல் உருவாவதில் தொடங்குகிறது. உடல் உருப்பெறும் செய்முறை, மரபுப் பொருளான டி.என்.ஏ.வில் பொதிந்துள்ளது. டி.என்.ஏ. (DNA) எனும் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலம் (Deoxyribo Nucleic Acid) நமது தலைமுறை மரபியல் செய்தி வரலாறு பதிவுப் பெட்டகம் ஆகும். இது நமது குரோமோசோமின் தலையாய பகுதி. நமது உடல் செல் நடுவே உள்ள செல் கருவில் (Nucleus) அமைந்துள்ளது.
டி.என்.ஏ. என்பது இரட்டை இழை சுருள் வடிவம் (Double Helix) உள்ள நீண்ட தொடர் மூலக்கூறு. டி.என்.ஏ. சுருள் அமைப்பு பிரியவும், சுருளவும் கூடியது. எனவே, செல் ஒவ்வொரு முறை புதிதாக உருவாகும்போதும் (Divide) டி.என்.ஏ. அதனை நகலெடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளது.
டி.என்.ஏ. மரபுப் பொருளில்தான், நாம் நாமாக வடிவம் பெறும் செய்முறை செய்திக்குறிப்புகள் அடங்கியுள்ளன. டி.என்.ஏ. எனும் இந்த நுண்ணுறுப்பில்தான், நமது தாயின் கருமுட்டை, தந்தையின் உயிர்ச்செல் இணைப்பால், கருவுற்று முட்டையாகி நமது உடல் வளர்ச்சி அடைவதற்கான குறிப்புகள் பதியப்பட்டுள்ளன.
டி.என்.ஏ. மூலக்கூறில் ஆயிரக்கணக்கான புரதங்களை உருவாக்கத் தேவையான குறிப்புகள் உள்ளன. மேலும், ஹார்மோன்கள் மற்றும் உயிர்வேதியங்கள் உருவாக்கத் தேவையான செய்முறைக் குறிப்புகளும் உள்ளன.
இந்த உயிரியல் வேதியங்கள் உடலில் பல பணிகளைச் செய்கின்றன. அவை: உடல் செல்களின் இயல்பான வளர்ச்சி, நோய்கள் குணமாக உதவுவது, இயல்பான இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துவது, நுண்ணுயிர் தொற்றை எதிர்த்துப் போராடுவது, புற்றுச் செல்களை அழிப்பது.
நமது உடல் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் சீராகச் செயல்படுவதற்கு டி.என்.ஏ.வின் நலம் இன்றியமையாதது. டி.என்.ஏ. உரிய ஊட்டச்சத்துகளைப் பெறும்போது உடல்நலம் சீராக இருக்கிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறையானால் உடல் முதிர்ச்சி மிக விரைவாக நிகழ்கிறது; உடல் நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
இத்தகைய சீர்கேடுகளுக்குக் காரணம் – உரிய ஊட்டச்சத்து இல்லாததால் டிஎன்ஏ சரியாகச் செயல்படாது, உடல் செல்கள் இயல்பாகச் செயல்பட தேவையான செய்முறைக் குறிப்புகளை உணர்த்துவது இல்லை. எ.கா: இதயம் மற்றும் சிறுநீரகங்கள் முதலிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீர்கெடுகின்றன.
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் டி.என்.ஏ. சிதைவுற்று, உடல் செல்களுக்கு தவறான கட்டளைகளை உணர்த்துகிறது. இதனால் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் அளவற்று பெருக, உடலில் புற்றுநோய் வேர்விடத் தொடங்குகிறது.டி.என்.ஏ, ஜீன்ஸ், குரோமோசோம் பற்றி தெரியுமா?ஜீன்கள், டி.என்.ஏ, குரோமோசோம் ஆகிய 3 சொற்களை பலர் பேசக் கேட்டிருப்பீர்கள்.
படித்திருப்பீர்கள். ஆனால், இவை நமது உடலில் எங்கே அமைந்துள்ளன? இவற்றின் தோற்றம் எப்படி இருக்கும்? உடலில் என்ன செய்கின்றன என்பன போன்ற நமது சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் கிடைப்பது சிரமம்.
சுருக்கமாக, நமது உடலின் அனைத்து அமைப்புகளின் உயிரியல் செயல்பாடுகளுக்கும், செய்முறைக் கட்டளைகளை வழங்கும் மரபியல் அமைப்பு இவைதான். மரபுவழி இதய நோய், கண்களின் நிறம் உள்ளிட்ட உடல்நலம், மனநலம், அறிவு, பண்பு, நடத்தை என்று அத்தனையையும் தீர்மானிப்பது இவைதான். மரபியல் கூறுகளான இந்த 3 சொற்களின் மொத்த வடிவமைப்புதான் மனிதர்கள்.
நமது தோலை ஆற்றல் மிகுந்த எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்த்தால், செல்கள் கொத்தாக திசுக்கள் வடிவத்தில் காணப்படும். நமது உடலில் ஏறக்குறைய 100 டிரில்லியன் செல்கள் உள்ளன. அதாவது, 100x(10)12 செல்கள்; இதன் மொத்த செல்கள் எண்ணிக்கை 100 லட்சம் கோடி!உடல் செல்கள் ஒவ்வொன்றிலும் செல்லின் நடுவில் கரு அமைந்துள்ளது. உருப்பெருக்கி மூலம் நோக்கினால் செல் கருவில் 23 குரோமோசோம்கள் இணைகளாக உள்ளன.
அதாவது தனித்தனியே மொத்தமாக 46 குரோமோசோம்கள். இந்த குரோமோசோம்களில்தான் நமது உடலை வடிவமைக்கும் மரபியல் கட்டளைகள் சீராகப் பதிந்து உள்ளன.உடல் செல் ஒன்றில், செல் கருவில் உள்ள 46 குரோமோசோம்களும், 30 ஆயிரம் பகுதிகளாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள்தான் மரபணு ஆகும். மரபணுவில், புரதம் அல்லது என்சைம் உருவாக்கத் தேவையான செய்முறைக் குறிப்பு அடங்கியுள்ளது.
எ.கா: இந்த மரபியல் கட்டளைகள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக்கவும் அல்லது டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் உருவாக்கவும் அல்லது இதுபோல் வேறு பல செயல்களைச் செய்யவும் செய்முறைக் குறிப்புகளைக் கொண்டுள்ளன.மரபணுக்கள் டி.என்.ஏ.வின் இரட்டை இழைகளைக் கொண்டுள்ளன. டி.என்.ஏ. மரபியல் கட்டளை சொற்களை உருவாக்குகிறது. குறிப்பிட்ட வகை மரபணு ஒன்றில் ஏறத்தாழ 700 டி.என்.ஏ. சொற்கள் உள்ளன.
டி.என்.ஏ. இழைகளில் 4 சிறிய வேதியக் கூறுகள் உள்ளன; இவை நூக்ளியோடைடு பேஸ் எனப்படும் வேதியக் கூட்டுப் பொருள்கள். A – அடெனின் (Adenine), C -சைடோசின் (Cytosine), G -குவானின் (Guanine), T -தைமின் (Thymine). இந்த வேதியக் கூட்டுப் பொருள்கள், டி.என்.ஏ. வேதி எழுத்துகளை உருவாக்குகின்றன. நமது உடலில் உள்ள செல் ஒன்றில் மட்டும் 3 பில்லியன் டி.என்.ஏ. எழுத்துகள் உள்ளன. அதாவது 3×1012 = 3,000,000,000,000 எழுத்துகள்.
3 லட்சம் கோடி எழுத்துகள். சுமார் 300 பக்கங்கள் உள்ள 40 ஆயிரம் நூல்களைக் கூட்டினால் இத்தனை எழுத்துகள் வரும். கிட்டத்தட்ட ஒரு லைப்ரரி. இப்படி 100 லட்சம் கோடி லைப்ரரிகள் சேர்ந்ததே நாம்!
புரதம் ஒன்று அல்லது என்சைம் ஒன்றை டி.என்.ஏ. உருவாக்குவதற்கு ஆர்.என்.ஏ. (Ribonucleic Acid -RNA) இழை ஒன்றை வடிவமைக்கிறது. அடுத்து, டி.என்.ஏ. புரதம் அல்லது என்சைம் உருவாக்கச் செய்முறைக் குறிப்புகளை ஆர்.என்.ஏ. இழையில் பதிக்கிறது. ஆர்.என்.ஏ., செய்முறைக் குறிப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு, தேவையான புரதம் அல்லது என்சைம் உருவாக்குவதற்கு உரிய அமினோ அமிலங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் புரதங்கள் மற்றும் என்சைம்கள் எல்லாம் நமது உடலில், எண்ணற்ற உயிர்வேதியங்கள் உருவாக அடிப்படையாக உள்ளன. குறிப்பாக, நமது உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்கள் முதல் நியூரோ டிரான்ஸ் மிட்டர்கள் வரை உருவாக்கப்படுகின்றன.
(ரகசியம் அறிவோம்)
ச.சிவ வல்லாளன்