Home பாலியல் மாத விடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

மாத விடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

42

மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் இயற்கையில் பெண்களுக்கு வயது கூடும் பொழுது ஏற்படும் `மாத விலக்கு’ நின்று விடுவதாகும். பெண்ணின் கருத்தரிக்கும் நிலை இனி இல்லை என்ற உடலின் வெளிப்படுத்தலே மாத விடாய் நிறுத்தம்.

இக்காலத்தில் பெண்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாக மருத்துவ உலகில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் சினைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். இத்துடன் சினைப்பை ஈஸ்ட்ரஜன், ப்ரோஜெட்டிரான் என்ற ஹார்மோன்களையும் சுரக்கும்.

இவை இரண்டும் நிற்கும் காலமே மாதவிடாய் நிறுத்தம். இது இயற்கை நிகழ்வு. செயற்கை நிகழ்வும் உண்டு. புற்று நோய் போன்ற சில காரணங்களுக்காக பெண்ணின் கருப்பை, சீனைப்பை போன்றவை உரிய காலத்திற்கு முன்னரே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இவ்வாறு செய்யும் பொழுதும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.

பொதுவில் 40 வயதிற்கு மேல் வரக்கூடிய இப்பருவம் சிலருக்கு 52 வயது வரையிலும் கூட நீடிக்கலாம். 40-க்கும் முன்பாகவே மிகவும் குறைந்த எண்ணிக்கையான பெண்களுக்கு மாத விடாய் நிறுத்தம் ஏற்படலாம். இதற்கு அவரது பரம்பரை, உடல் நோய்கள் போன்றவை காரணமாக இருக்கும். இவர்கள் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

`மாத விடாய் நிறுத்தம்’ கால அறிகுறிகள், சில உடல் உபாதைகள் போன்றவை இன்றைய கால கட்டத்தில் சற்று கூடுதலாகவே காணப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் அநேகருக்குரிய காலத்தில் தானே மறைந்து விடுகின்றன.

பலருக்கு `ஹார்மோன்’ சிகிச்சை போன்றவை தேவைப்படுகின்றது. இருப்பினும் அனைவரும் இக்கால கட்டத்தில் மார்பக புற்று நோய், கருப்பை புற்றுநோய், எலும்பின் அடர்த்தி ஆகிய பரிசோதனைகளை அவசியம் செய்ய வேண்டும்.