Home சூடான செய்திகள் மன உளைச்சல் கணவன் மனைவி உறவை பாதிக்கலாம்

மன உளைச்சல் கணவன் மனைவி உறவை பாதிக்கலாம்

37

பிறப்பு முதல் இறப்பு வரை விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனச் சொல்லியே வளர்க்கப்படுகிற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே மந்திரச் சொல்லாகத் தொடர்கிறது. வயதுக்கேற்றபடி  இயற்கையின் நிகழ்வு களை சந்திக்கிற பெண் உடல், அதனால் பெறுவதைவிட, இழப்பதே அதிகம். வயதோ, திருமண நிலைப்பாடோ ஆண்களை எந்த வகையிலும் பாதிப்பதில்லை. ஆனால், அத்தனை பாதிப்புகளையும் பெண்கள் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு பெண் உடல் தளர்ச்சியடைவதும், மாற்றங்களை சந்திப்பதும் இயல்பான நிகழ்வுகள். குறிப்பாக அந்தரங்க உறவில் திருப்தி என்பதில் குழந்தை பெறுவதற்கு முன்பும், குழந்தை பெற்ற பிறகும் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கிறார்கள் பலரும். கணவரிடம்கூட மனம் விட்டுப் பகிர முடியாத இந்தப் பிரச்னைக்கு இதுநாள் வரை அவர்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையே தொடர்ந்தது.

சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் தீபா கணேஷ், இதற்குத் தீர்வு கண்டுபிடித்து பெண்குலத்தின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் USA certified காஸ்மெட்டிக் கைனகாலஜிஸ்ட் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. “என்னோட மருத்துவத் துறை அனுபவத்துல நான் சந்திச்ச நிறைய பெண்கள் குழந்தைப் பிறப்புக்குப் பிறகும், எடை அதிகரிச்சதாலயும், வயதான காரணத்தினாலயும் அந்தரங்க உறவுல முழு திருப்தி கிடைக்கிறதில்லைங்கிற உண்மையை வருத்தத்தோட பகிர்ந்துகிட்டிருக்காங்க.

அப்படி கவலைப்படுற பெண்களுக்கு பிறப்புறுப்புத் தசைகளை டைட் ஆக்கற கெகல் பயிற்சிகளைத் (Kegels) தவிர வேற தீர்வுகள் இல்லாத நிலை என்னை யோசிக்க வச்சது. இந்தப் பிரச்னைக்கு ஏதாவது செய்ய முடியுமானு ஆராய்ச்சிகள் செய்தேன். ஹாலிவுட், பெவர்லி ஹில்ஸுக்கு போய், லேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்காவுல காஸ்மெடிக் கைனகாலஜியில பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன். அந்த சிகிச்சையை இப்போ சென்னையில ஆரம்பிச்சிருக்கேன்… காஸ்மெடிக் கைனகாலஜிங்கிற பிரிவு, நம்மூருக்குத்தான் புதுசு.

இந்த சிகிச்சை 2002ம் வருஷத்துலேருந்து அமெரிக்காவுல ரொம்பப் பிரபலமா இருக்கு…’’என்கிற டாக்டர் தீபா, காஸ்மெடிக் கைனகாலஜியின் கீழ் லேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன், டிசைனர் லேசர் வெஜைனோபிளாஸ்ட்டி மற்றும் ஜி ஷாட் என மூன்று முக்கிய சிகிச்சைகள் வருவதையும் குறிப்பிடுகிறார். “தாம்பத்திய உறவு முன்ன மாதிரி இல்லை…ங்கிற பெரும்பாலான பெண்களோட பிரச்னைக்கான தீர்வு இந்த சிகிச்சை. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படற உறுப்புத் தளர்வு, அதன் விளைவா உறவுல உணர்ச்சியற்ற நிலை பத்தியெல்லாம் நம்மூர் பெண்கள், லேடி டாக்டர்கிட்ட கூட பேசத் தயங்கறாங்க.

லேசர் வெஜைனல் ரீஜுவெனேஷன் என்ற அறுவை சிகிச்சை இதுக்கெல்லாம் தீர்வா அமையும். வெறும் ஒரு மணி நேரத்துல புறநோயாளியா வந்து இந்த சிகிச்சையை செய்துகிட்டுப் போயிடலாம். லேசர் தொழில்நுட்பத்துல செய்யப்படறதால, இதுல ரத்த இழப்பு இருக்காது. பக்க விளைவுகள் கிடையாது. சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடலாம். முக்கியமா அந்தரங்க உறுப்புத் தசைகளை இறுகச் செய்து, சிறுநீரை அடக்க முடியாத பிரச்னையையும் சரியாக்கி, உறவுல கணவன்மனைவியோட ஈடுபாட்டையும் திருப்தியையும் அதிகரிக்கும்.

அடுத்தது டிசைனர் லேசர் வெஜைனோ பிளாஸ்ட்டி. மூக்கு சரியில்லை, தாடை சரியில்லைனு சொல்லி, நமக்கு விருப்பமான வடிவத்தை மாத்திக்கிறோமில்லையா… அதே மாதிரியானதுதான் இதுவும். அந்தரங்க உறுப்பின் அமைப்புக்கான லேட்டஸ்ட் டெக்னாலஜி. மூணாவதா G Shot என்கிற ஸ்பெஷல் ஊசி. பெண்களோட உடம்புல பாலியல் இன்பத்தைத் தூண்டுகிற மிக முக்கியமான ஒரு பகுதியை G Spot னு சொல்றோம். அது 3 முதல் 5 மி.மீ. அளவே இருக்கும்.

உறவின் போது இந்தப் பகுதி பல பெண்களுக்கும் முறையா, முழுமையா தூண்டப்படறதில்லை. G Shot என்ற ஊசியின் மூலம் அந்தப் பகுதி, தற்காலிகமாக 7 முதல் 10 மி.மீ. அளவுக்கு விரிவாக்கப்படும். அதன் விளைவா அவங்களுக்கு உறவின் போதான உச்சக்கட்ட திருப்தியும் முழுமை உணர்வும் கிடைக்கும். வெறும் பத்தே நிமிடங்கள்ல போட்டுக் கொள்ளக்கூடியது இந்த ஊசி’’விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர்.

இந்த ஊசியின் பலன் 3 முதல் 5 மாதங்களுக்கு நீடிக்குமாம். இந்த சிகிச்சைகள் எல்லாம் ஏன் அவசியம் என்கிற கேள்வியையும் மருத்துவரின் முன் வைத்தோம். “தாம்பத்திய உறவும், அதுல அடையற திருப்தியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம். குழந்தை பிறந்ததாலயோ, வயசானதாலயோ, எடை கூடினதாலயோ பெண்ணோட உடல் அதுக்கு ஒத்துழைக்காமப் போறது, அவங்களுக்கே ஒருவித மன உளைச்சலைக் கொடுக்கும்.

அந்த மன உளைச்சல் கணவன் மனைவி உறவை பாதிக்கலாம். வாழ்க்கையில வேற வேற விஷயங்கள்ல பிரதிபலிக்கலாம். அதையெல்லாம் தவிர்க்கத்தான் இந்த சிகிச்சைகள். இந்தப் பிரச்னை தங்களோட ஆளுமையை பாதிக்கிறதா சொல்லி, ரகசியமா சிகிச்சைகள் எடுத்துக்கிட்டுப் போற பெண்களை அதிகம் பார்க்கறேன். இத்தனை வருஷங்களா இதைப் பத்தி டாக்டர்கிட்ட கூடப் பேசத் தயங்கின பெண்களுக்கு இப்ப தீர்வுகள் கிடைச்சிருக்கிறதுங்கிறது பெரிய விஷயம். இந்த விழிப்புணர்வு பெண்களுக்கு நிச்சயம் தேவை. இன்னும் 5 வருஷங்கள்ல இதுக்கான வரவேற்பு நிச்சயம் அதிகரிச்சிருக்கும்…’’நம்பிக்கையுடன் முடிக்கிறார்