Home ஆரோக்கியம் மனஅழுத்தத்தை போக்கும் ‘சைக்கிளிங்’

மனஅழுத்தத்தை போக்கும் ‘சைக்கிளிங்’

64

சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

ஒரு கட்டத்தில் மவுசு குறையும் எதுவும் பிறிதொரு காலகட்டத்தில் எழுச்சி பெறும் என்பதற்கு உதாரணமாக மக்களின் ‘சைக்கிளிங்’ ஆர்வத்தைக் கூறலாம்.

உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நலம் பயக்கிறது.

சுவாரசியமான, அதிக கஷ்டமில்லாத உடற்பயிற்சியாக இருக்கிறது.

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நாம் வேலையையும் உடற்பயிற்சியையும் ஒன்றிணைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் சைக்கிளிலேயே கல்லூரி அல்லது அலுவலகம் சென்றுவிடலாம்.

இவை மட்டுமல்ல, மேலும் பல நன்மைகளும் இருக்கின்றன. அவை…

சைக்கிள் ஓட்டம், மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது. பிற உடற்பயிற்சி சாதனங்களுடன் ஒப்பிடும்போது இதில் காயமடையும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறது.

உடம்பின் கீழ்ப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.

நமது ஒட்டுமொத்த சக்தியையும் வலுவையும் அதிகரிக் கிறது.

உடம்பின் சீர்நிலை, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்து கிறது.

மனஅழுத்தத்தைத் துரத்த உதவுகிறது.

நமது உயிர்க்கடிகாரத்தைப் பராமரிப்பதன் மூலம் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோனாகிய ‘கார்ட்டி சோலின்’ அளவைக் குறைக்கிறது.

உடல் பருமனுக்குத் தடை போடுகிறது.

மூட்டு பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது.

சைக்கிள் ஓட்டுவதை சுவாரசியமாக்க…

வெளிப்புற, உட்புற ‘சைக்கிளிங்’ என்று மாற்றி மாற்றி ஈடுபடலாம். கூட சேர்ந்து சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு நண்பரை ஏற்படுத்திக்கொள்ளலாம். மலையேற்ற சைக்கிள் சவாரி, சற்று நீண்டதூர சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டுப் பார்க்கலாம்.

வீட்டுக்குள்தான் ‘சைக்கிளிங்’கில் ஈடுபட வேண்டும் என்றால், புகழ்பெற்ற சைக்கிள் பயண சாலைக் காட்சிகளை கண் முன்னே விரியச் செய்யும் மென் பொருளை பயன்படுத்தலாம்.

சைக்கிள் ஓட்டத்தின் மூலம் கூடுதல் உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

சைக்கிள் ஓட்டும்போது அணியவேண்டியவை:

சைக்கிளிங்குக்கு என்று உள்ள ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும்.

சைக்கிள் வேகத்துக்குத் தடையாகும், இடையூறாகும் தொளதொள ஆடைகளைத் தவிர்த்து, உடம்பைப் பிடித்த ஆடைகளை அணிய வேண்டும்.

பெண்கள் கூந்தல் மாசடையாமல் தடுக்க, அதைப் பறக்கவிடாமல், ஜடை அல்லது குதிரைவால் கொண்டை போட்டுக்கொள்ளலாம்.

தண்ணீர் பாட்டிலை அதற்குரிய ‘கிளிப்’பில் பொருத்தி எடுத்துச் செல்லலாம்.

சைக்கிள் ஓட்டுவதால் நம்மைத் தாண்டி நாம் செய்யும் பொது நன்மை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது!