விந்தகங்கள் குறைவான விந்தணுக்கள் அல்லது டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்யும் பிரச்சனையே இனப்பெருக்க இயக்கக் குறை எனப்படுகிறது. ஒரு சிலருக்கு பிறவியிலேயே இந்தப் பிரச்சனை இருக்கலாம் அல்லது அடிபடுவதால் அல்லது நோய்த்தொற்று காரணமாக பிற்காலத்திலும் ஏற்படலாம். இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சையானது, அதற்கான காரணம் மற்றும் எந்த காலகட்டத்தில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும்.
காரணங்கள் (Causes)
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கு சாத்தியமுள்ள காரணங்கள்:
விந்தகங்கள் பாதிக்கப்படுவது (விபத்து, கதிர்வீச்சு, விந்தகங்கள் அகற்றப்படுவது அலல்து கீமோதெரப்பி)
பிட்யூட்டரி அல்லது ஹைப்போதலாமஸில் கட்டி அல்லது நோய்
விந்தகங்கள் சம்பந்தப்பட்ட தாளம்மை (மம்ப்ஸ்) நோய்த்தொற்று
இணைப்புத்திசுப் புற்று (சார்கோயிடாசிஸ்), திசுச்செல் நோய் (ஹிஸ்டியோசைட்டோசிஸ்) மற்றும் காசநோய் போன்ற சில அழற்சி நோய்கள்
எச். ஐ. வி/எய்ட்ஸ்
அதிக உடல் எடை
கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது ஓபியேட் வலிநிவாரணி மருந்துகள் போன்ற சில மருந்துகள்
க்ளின்ஃபெல்டர் சின்ட்ரோம், கால்மான் சின்ட்ரோம், ப்ரேடர்-வில்லி சின்ட்ரோம் போன்ற மரபியல் பிரச்சனைகள்
அறிகுறிகள் (Symptoms)
ஆணுறுப்பு முழுமையாக வளராமல் இருப்பது
பருவமடையும்போது குரல் போதுமான அளவு தடிமனாகாமல் போவது
பாலியல் ஆசை மற்றும் செயல்பாடு குறைவாக இருப்பது
தன்னிச்சையான விறைப்பு குறைவாக இருப்பது
மார்பகம் பெரிதாவது அல்லது மார்பகத்தில் அசௌகரியம்
விந்தகங்கள் அல்லது ஆண்குறி வளர்ச்சி குறைவாக இருப்பது
எலும்பு நிறை இழப்பு
உடல் ரோமங்கள் இழக்கப்படுவது
தசைப் பருமனும் பலமும் குறைதல்
விந்தணுக்கள் குறைவாக இருப்பது அல்லது விந்தணுக்களே இல்லாமல் போவது
தெம்பு குறைவாக இருப்பது, சோர்வு
லேசானது முதல் மிதமானது வரையிலான மன இறுக்கம்
நோய் கண்டறிதல் (Diagnosis):
முதலில் மருத்துவர் உங்கள் உடலைப் பரிசோதிப்பார், இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் எவ்வளவு ரோமங்கள் உள்ளன என்று பார்ப்பார், தசை நிறை மற்றும் ஆணுறுப்பு மற்றும் விந்தகங்களின் அளவு ஆகியவற்றைப் பார்ப்பார், எல்லாம் உங்கள் வயதுக்கு ஏற்ற அளவில் உள்ளதா என்று பரிசோதிப்பார்.
பிறகு, இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் எவ்வளவு உள்ளது எனக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்படும். டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவகா இருப்பதாகத் தெரிந்தால், அவர்களுக்கு விடியற்காலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து எல்லா பரிசோதனை முடிவுகளிலும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதாகவே தெரிந்தால், பிற காரணிகளைப் பற்றி மதிப்பிடுவதற்காக பிட்யூட்டரி சுரப்பி செயல்பாட்டுக்கான சோதனை, விந்து பகுப்பாய்வு மற்றும் விந்தாக திசுப்பரிசோதனை போன்றவை செய்யப்படும்.
சிகிச்சை (Treatment)
ஹார்மோன் சிகிச்சை: விந்தகங்கள் செயல்படாத காரணத்தால் இனப்பெருக்க இயக்கக் குறை நோய் ஏற்பட்டிருந்தால், அதற்கு டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை (TRT) அளிக்கப்படும். இந்த சிகிச்சையால் பாலியல் செயல்பாடும் தசை நிறையும் மீட்டு நல்ல நிலைக்கு வரும், இது எலும்பு நிறை இழக்கப்படுவதையும் தடுக்கும். இளம் பருவ ஆண்களுக்கு, இந்த சிகிச்சையால் தாடி வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளில் ரோமங்களின் வளர்ச்சி மற்றும் ஆண்குறியின் வளர்ச்சி ஆகியவை தூண்டப்படும்.
TRT சிகிச்சை அளிக்கப்படும் வழிகள்:
தசைக்குள் ஊசி மூலம் செலுத்துதல்
சருமத்தில் பேட்ச் போடுதல்
சருமத்தில் ஜெல் அல்லது சொல்யூஷன் பூசுதல்
வாய்க்குள் அடக்கிக்கொள்ளும் மாத்திரைகள்
சருமத்திற்கு அடியில் சிறு பெல்லட்டுகள் பொருத்தப்படுதல்
எந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்பது, நபரின் விருப்பம் மற்றும் தாங்கும் திறனைப் பொருத்து முடிவு செய்யப்படும்.
உதவியுடனான இனப்பெருக்கம்: விந்தகங்களில் பிரச்சனை உள்ளதால் இந்நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களின் குழந்தை பெறும் திறனை மீண்டும் கொண்டு வர தற்போது பலனளிக்கும் சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை. ஆகவே, இவர்களுக்கு உதவியுடனான இனப்பெருக்கத் தொழில்நுட்பம் உதவக்கூடும்.
சிக்கல்கள் (Complications)
இந்தப் பிரச்சனையால் ஏற்படும் பிற சிக்கல்கள் வெவ்வேறு வயதில் வெவ்வேறாக இருக்கும்:
கருவில் வளரும்போது
குழந்தைக்கு பின்வரும் பிரச்சனைகள் இருக்கலாம்:
தெளிவற்ற இனப்பெருக்க உறுப்பு
வழக்கத்திற்கு மாறான இனப்பெருக்க உறுப்பு
பருவமடையும்போது
தாடி அல்லது உடல் ரோமங்கள் குறைவாக இருப்பது
ஆண்குறி மற்றும் விந்தகங்கள் வளர்ச்சி குறைவாக இருப்பது
மார்பகங்கள் பெரிதாக இருப்பது (கைனக்கோமாஸ்டியா)
பெரியவர்களுக்கு
குழந்தையின்மை
விறைப்பின்மை
களைப்பு
பாலியல் நாட்டம் குறைவு
தசை இழப்பு
மார்பகங்கள் பெரிதாவது
ஆஸ்டியோபோரோசிஸ்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
இனப்பெருக்க இயக்கக் குறையின் அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.