மலங்கழிப்பது தொடர்பான பிரச்சனைகள் பற்றி நாம் பேசத் தயங்குவோம்.நமக்கு தலைவலியோ வயிற்று வலியோ இருந்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் பேசுவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, இதுவே இரண்டு நாளாக மலம் கழிக்கவில்லை, வயிறு பலூன் போல் ஊதிக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்க்கொள்ளுங்கள், அதைப் பற்றி நாம் மற்றவர்களிடம் பேச முடியுமா என்ன!
அதற்காக மலச்சிக்கலை அப்படியே விட்டுவிடக் கூடாது, இதைப் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம், ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சரிசெய்து மீண்டும் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து, சில வழிமுறைகளை முயற்சி செய்ய வேண்டும்.
மலச்சிக்கலைத் தீர்ப்பது பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மலங்கழிப்பதைப் பொறுத்த வரையில், எத்தனை முறை மலங்கழித்தால் அது இயல்பானது என்பது ஒவ்வொருவருக்கும் மாறும். ஒரு சிலர் ஒரு நாளுக்கு மூன்று முறை மலங்கழிக்கலாம், இன்னும் சிலர் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே மலங்கழிப்பார்கள். ஒரு நாள் மலங்கழிக்காமல் விட்டுவிட்டால், அதற்காக அதிகம் பயப்பட வேண்டாம்.
தவிடு, முழு தானிய பிரெட், பசளிக்கீரை போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உள்ளடக்கிய சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளவும்.
தினமும் ஒவ்வொரு வேளையும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட அதே நேரத்தில் தினமும் உணவு உட்கொண்டால், மலங்கழிக்கும் செயலும் சரியாக நடக்கும்.
காலையில் காபியோ தேனீரோ அருந்தினால் மலங்கழிய உதவியாக இருக்கலாம். ஆனால் காஃபின் உடலில் நீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. இது குடலில் இருந்து அதிக நீரை வெளியேற்றிவிடும் இதனால் மலம் கடினமாகிவிடும். ஆகவே, காஃபின் உள்ள பொருள்களை குறைந்தபட்சமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
திரவ உணவு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும், இதனால் உடலில் நீர்ச்சத்து நிறைந்திருக்கும். தினமும் காலை எழுந்ததும், லேசான வெதுவெதுப்பான நீரை அருந்துவது மிகவும் நல்லது.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மலம் சரியான முறையில் கழிய உதவும்.
தொந்தரவின்றி தேவையான போது கழிப்பறைக்குச் சென்று வருவதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது ஒருபோதும் அதை உதாசீனப்படுத்தக்கூடாது.
உங்கள் பிரச்சனை தீராமல் தொடர்ந்தா, உங்கள் மருத்துவரைச் சந்தித்து மலச்சிக்கலின் காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கேற்ற ஆலோசனை பெறவும். பெரும்பாலும், மலச்சிக்கலுக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம்.