Home பாலியல் ஆண் பெண்கள் தொடர்பான பாலியல் முடிவுகள் எடுப்பது எப்படி?

ஆண் பெண்கள் தொடர்பான பாலியல் முடிவுகள் எடுப்பது எப்படி?

33

இளைஞர்கள் பாலியல் குறித்து யோசிப்பதும், அது குறித்த தங்கள் உணர்வுகளை ஆராய்வதும், தனது பாலியல் குறித்து யோசித்துக்கொண்டே இருப்பதும் வழக்கமான செயல்கள். பாலியல் உறவில் ஈடுபடுவதைப் பற்றி முடிவெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் இதில் உங்கள் உடல் மட்டுமின்றி உங்கள் உணர்வுகளும் சம்பந்தப்பட்டுள்ளன. உங்கள் முடிவு குறித்து நீங்கள் மிகவும் திட்டவட்டமாக இருக்க வேண்டியது முக்கியம். இதுகுறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு விஷயங்கள் குறித்து நன்கு யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது, இவற்றைப் பற்றி முடிவெடுக்கும்போது பிறரோ, உங்கள் இணையரோ அல்லது நண்பர்களோ அழுத்தம் கொடுத்து, அதனால் முடிவு எடுப்பதாக இருக்கக்கூடாது.

பாலியல் உறவில் ஈடுபடுவது என்று நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையையும் பிற உறவுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடியது, மாற்றக்கூடியது. அது நீங்கள் உணரும் விதத்தையே மாறக்கூடும், இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டியிருக்கும். பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியானால் நீங்கள் பாலியல் உறவுக்குத் தயார் என்று கருதலாம்:

நீங்களும் உங்கள் இணையரும் ஒருவரை ஒருவர் முழுவதுமாக நம்புபவராக இருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் நல்ல பேச்சு, கருத்துப்பரிமாற்றம் இருக்க வேண்டும், இருவரும் ஒருவரிடம் ஒருவர் எதைப் பற்றியும் எவ்விதத் தயக்கமும், முரண்பாடும் இல்லாமல் பேச முடிய வேண்டும்.
உங்களுக்கோ, உங்கள் இணையருக்கோ பால்வினை நோய்கள் இருந்தால் அவற்றைப் பற்றி பொறுப்புடன் பேசிக்கொள்ள வேண்டும், அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான தகுந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், கருத்தடை குறித்த ஒருவரது கருத்துக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும்.
பின்வரும் அடையாளங்களில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும், நீங்களும் உங்கள் இணையரும் பாலியல் உறவைத் தவிர்க்க வேண்டும்:

உங்கள் இனையர் உங்களிடம் மிக அதிக பொசசிவாக இருந்தால், எப்போதும் நீங்கள் அவருக்காகவே எப்போதும் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புபவராக இருந்தால், தன்னைத்தவிர வேறு யாருடனும் நேரம் செலவழிக்க விடாமல் தடுத்தால், அல்லது எப்போதும் உங்கள் மேல் சந்தேகப்பட்டு கண்காணித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்குள் பாலியல் உறவைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் விருப்பத்தை மீறி உங்கள் இணையர் பாலியல் உறவுக்கு உங்களை வற்புறுத்தினால், அதைத் தவிர்க்க வேண்டும்.
தனது ஆசை ஈடேறியதும் உங்களை உணர்வுரீதியாக பயமுறுத்தினால் அவ்வுறவைத் தவிர்க்க வேண்டும்.
இதுதான் நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது முதல் முறை எனில், நீங்கள் பாலியல் உறவுக்குத் தயாராகிவிட்டீர்களா என்று தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் பாலியல் உறவை விரும்புகிறீர்களா அல்லது வேறு யாரேனும் அல்லது உங்கள் இணையர் அழுத்தம் கொடுப்பதால் அதில் ஈடுபடத் தொடங்குகிறீர்களா?பாலியல் உறவில் ஈடுபடுவது ஒருவரது விருப்பத்திற்குட்பட்டது. எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற ஃபேஷனோ நாகரீகமோ அல்ல.
நிலைமை வன்முறையாக மாறினால் உங்களால் சூழ்நிலையை சமாளிக்க முடியுமா? அல்லது எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட்டால் அதை அகற்ற முடியுமா?
பால்வினை நோய்களால் ஏற்படும் உடல்நல கெடுதல்கள், எதிர்பாராத கர்ப்பம் ஏற்படும் அபாயம் போன்றவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமா?
பாதுகாப்பான உடலுறவு என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப்பற்றி போதுமான அளவு தெரிந்துவைத்துள்ளீர்களா?
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பற்றி உங்கள் இணையரிடம் பேசினீர்களா?பாதுகாப்பான உடலுறவு பற்றித் தெரியாமல், அல்லது அதற்குத் தயார்படுத்திக்கொள்ளாமல் நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது பற்றி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
ஆண் ஆணுறை அணிந்துகொள்ளத் தவறக்கூடாது, ஆணுறையை எப்படி சரியாக அணிய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இணையர் ஏதேனும் காரணத்திற்காக ஆணுறை பயன்படுத்த மறுத்தால், விட்டுக்கொடுக்காதீர்கள், உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள், அதற்கான காரணங்களை அவருக்குத் தெளிவாக விளக்கிக் கூறுங்கள். தேவைப்பட்டால் பாலியல் உறவைத் தவிர்த்து விடுங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளை இணையர் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் ஈடுபட வேண்டாம்.
உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிடுங்கள், இதனால் பிறகு தவறான புரிதலால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம், உடலுறவு மகிழ்ச்சியைவிட, பாதுகாப்பான உடலுறவு என்பது மிக முக்கியம்.
மது அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள் எடுத்துக்கொண்டு போதையில் உடலுறவில் ஈடுபடாதீர்கள், இது உங்கள் சிந்தனைத் திறனை மழுங்கடித்து, பாதுகாப்பான உடலுறவு குறித்த உங்கள் விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் தகர்த்துவிடக்கூடும்.
உங்கள் இணையருடன் உடலுறவு செய்கைகளில் ஈடுபடும் முன்பு, நீங்கள் தெளிவாகப் பேசிக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பேசுவது முக்கியம். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிம்மதியடைய அது உதவும், அதுமட்டுமின்றி ஒருவரின் உணர்வுகள் மற்றும் கருத்துகளை மற்றொருவர் புரிந்துகொள்ள உதவும், அவை தன் கருத்துகள் மற்றும் உணர்வுகளுடன் ஒத்துப்போகிறதா அல்லது முரண்படுகிறதா என்று கண்டுகொள்ள முடியும்.

கடந்தகால பாலியல் அனுபவங்கள்: உங்களது இணையரின் கடந்தகால பாலியல் அனுபவங்கள் பற்றிக் கேட்கத் தயங்காதீர்கள். பால்வினை நோய்கள் வருவது ஒரு முக்கியமான அபாயம், அவை வராமல் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். சிலர் இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகக் கூறாமல் மறைத்துவிடக்கூடும், உங்கள் பாலியல் உறவைத் தொடங்கும் முன்பு இருவரும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து பால்வினை நோய்கள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான உடலுறவு: பால்வினை நோய்களைத் தடுப்பதற்கு பாதுகாப்பான உடலுறவு அவசியம் என்பதைப் பற்றிப் பேசுங்கள், அதற்கு நீங்கள் என்ன வழிமுறையைப் பின்பற்றப்போகிறீர்கள் என்பது பற்றியும் பேசுங்கள்.
நேர்மை: உங்கள் கடந்த கால உறவுகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படையாகக் கூறிவிடுங்கள், அதேபோல் உங்கள் இணையரையும் கூறச்சொல்லுங்கள். எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் தடுக்கவும் இது உதவும், உங்கள் இணையருக்கு பால்வினை நோய்கள் வந்திருக்க வாய்ப்புள்ளதா என்று கணிக்கவும் இந்த விவரம் உதவும், ஒருவர் பாலியல் உறவு கொள்ளும் இணையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவருக்கு பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
மருத்துவரிடம் பேசுங்கள்: பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், ஆணுறைகள்/கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதல் போன்றவை பற்றி மருத்துவரிடம் பேசுங்கள். தற்காலத்தில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசிகள், பேட்ச்சஸ் போன்ற எண்ணற்ற கருத்தடை முறைகளும் சாதனங்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு எது சரிவரும் என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்யலாம்.
உடலுறவில் ஈடுபடுவது குறித்த முடிவு முற்றிலும் உங்களுடையது, உங்களுடையது மட்டுமே! ஈடுபடுவது என்று நீங்கள் முடிவெடுத்தால், பாதுகாப்பான உடலுறவு, கருத்தடை முறைகள் ஆகியவை பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உங்கள் உணர்வுகள் குறித்தும் உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சிகள் உள்ளன என்பது பற்றியும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். பால்வினை நோய்கள், எதிர்பாராத கர்ப்பம் ஆகிய அபாயங்கள் வராமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு முடிவு, ஆகவே நீங்கள் நம்பும் ஒருவரிடம் இதைப்பற்றி கலந்தாலோசனை செய்யத் தயங்க வேண்டாம். நீங்கள் பாலியல் உறவுக்குத் தயாராகாமல் இருந்தாலோ அல்லது சிறிதளவும் சந்தேகம் இருந்தாலோ, அதைத் தவிர்ப்பதே நல்லது!