சில சமயம், பாலூட்டும் தாய்மார்கள் சிலருக்கு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போகலாம். வழக்கமாக, தாய்ப்பாலூட்டும் ஆரம்ப காலத்தில் இந்தப் பிரச்சனை தோன்றும். பெரும்பாலான தாய்மார்களுக்கு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கும்.
எதனால் தாய்ப்பால் குறைகிறது?
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில:
தாய் சம்பந்தப்பட்ட காரணங்கள்
மார்பகம் அல்லது முலைக்காம்பின் வடிவத்தில் வேறுபாடு: மார்பகம் மற்றும் முலைக்காம்பின் வடிவமானது, குழந்தை தாயின் மார்பகத்தை கவ்விப் பிடிக்கும் செயலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
முலைக்காம்பில் வலி: சில தாய்மார்களுக்கு தாய்ப்பாலூட்டும்போது அதிக வலி ஏற்படலாம்.
வேறு சில காரணங்களும் இருக்கலாம், அவை: குறிப்பிட்ட சில மருந்துகளைப் பயன்படுத்துவது, ஹார்மோன் மாத்திரைகள், கர்ப்பத்தினால் உண்டான உயர் இரத்த அழுத்தம், தாயின் உடல் பருமன் போன்றவை.
குழந்தை சம்பந்தப்பட்ட காரணங்கள்
குழந்தை முலைக்காம்பை சரியாகப் பிடித்துக்கொள்ளாமல் போவது: குழந்தை தாயின் மார்பகத்தை எப்படிக் கவ்விப் பிடித்து, முலைக்காம்பைப் பற்றிக்கொள்கிறது என்பது குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைப்பதைப் பெருமளவு பாதிக்கும்.
உறிஞ்சும் திறனின்மை: சிலசமயம், குழந்தைக்கு தாய்ப்பாலை உறிஞ்சும் திறன் இல்லாமல் போகலாம். செவிலியர் பயிற்சியளிக்கும்போது குழந்தையால் தனது நாக்கையும் வாயையும் சரியான முறையில் பயன்படுத்த முடியாமல் போவதால் இது நேரலாம்.
நாக்கு ஒட்டியிருத்தல்: நாக்கு ஒட்டியிருக்கும் பிரச்சனை உள்ள குழந்தைகள் தாய்ப்பாலூட்டும்போது சரியான முறையில் நாக்கைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
பால் சுரப்பை அதிகரிக்கும் வழிகள்
குழந்தை முலைக்காம்பை சரியாகப் பற்றிக்கொள்ளுதல்: குழந்தை முலைக்காம்பை சரியாகப் பற்றிக்கொண்டு நன்கு உறிஞ்சி விழுங்குகிறதா எனப் பார்த்துக்கொள்ளவும். குழந்தையை சரியான நிலையில் பிடித்திருப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
நேரடி ஸ்பரிசம்: எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரடியாக குழந்தையைத் தொட்டுக்கொண்டிருக்கும் வகையில் பிடித்து பாலூட்ட வேண்டும். இப்படிச் செய்வதால், பால் சுரப்பதற்குத் தேவையான ஹார்மோன்கள் தாயின் உடலில் சுரக்கும், குழந்தையும் விழிப்புடன் இருக்க உதவும்.
அடிக்கடி பாலூட்டுதல்: 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பாலூட்ட வேண்டும்.
மார்பகங்களை மாற்றி மாற்றிப் பாலூட்ட வேண்டும்: குழந்தை தாய்ப்பால் அருந்தி களைப்படைந்திருப்பது போல் தெரியும்போது, அல்லது சரியாக பாலை விழுங்காமல் போகும்போது, மற்றொரு மார்பகத்தில் பாலூட்ட வேண்டும். இப்படிச் செய்வதால், இரண்டு மார்பகங்களிலும் இருந்து பால் சரியான அளவில் வெளியேறும்.
புட்டிப் பால் கொடுப்பதையும் அழாமல் இருப்பதற்காக இரப்பர் போன்றவற்றை வாயில் வைப்பதையும் தவிர்க்கவும்: குழந்தைக்கு சப்பும் உணர்வை நிறைவு செய்ய தாய்ப்பாலூட்டுவது மட்டுமே வழியாக இருக்க வேண்டும். இரப்பர் அல்லது புட்டிப்பால் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
பாலை வெளியேற்றுதல்: மார்பகங்களில் இருந்து பாலை அதிக அளவு வெளியேற்றுவதால் மார்பகங்களில் அடிக்கடி பால் தீர்ந்து போகும், இதனால் பால் சுரப்பது அதிகரிக்கும்.பால் மிகக் குறைவாக வரும்போது, சிறிது நேரம் மார்பகங்களை அழுத்தி பாலை வெளியே வரவழைத்தால் போதும்.
பால் சுரப்புக்கு உதவும் மருந்துகள்: பால் உற்பத்தியை அதிகரிக்கும் சில மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
ஊட்டச்சத்து: அதிகம் நீர் அருந்த வேண்டும், சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.
ஒய்வு: குழந்தை தூங்கும்போதெல்லாம் நீங்களும் தூங்க வேண்டும் அல்லது ஓய்வெடுக்க வேண்டும்.
மது அல்லது புகையிலையைத் தவிர்க்கவும்: புகைபிடிப்பதும் மது அருந்துவதும் பால் சுரப்பைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இறுதிக் கருத்து
இந்த வழிமுறைகள் எதுவும் பலனளிக்காவிட்டால், உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். அவர் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம், பால் சுரப்புக் குறைவைச் சரி செய்ய மேலும் வழிமுறைகளைக் கூறலாம்.