Home உறவு-காதல் மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்

மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்

26

அதிகாலை தூங்கி எழுந்ததும் அடுத்தடுத்த வேலைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்பவர்கள் பெண்கள். குடும்பத்திற்காகவே தினமும் பெரும்பாலான நேரத்தை செலவிடும் பெண்களுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் செலவிடும் நேரம் குறைவாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்கு செல்லும் கணவன் தனது மனைவியுடன் முகம் கொடுத்து பேசுவதற்கே நேரமில்லாத சூழ்நிலையில், “என் மேலே அவருக்கு அக்கறையே இல்லை” என்ற மனக்குறை பெண்களிடம் வெளிப்படும்.

தம்பதியருக்குள்ளே நடக்கும் ஐந்து நிமிட உரையாடல் மூலமாக கூட அன்றைய நாளை ஆனந்தமாக கழிக்கலாம். ஆனால் ஆவேசத்தில் ஒரு நிமிடத்தில் கொட்டிவிடும் வார்த்தைகள் அன்றைய பொழுதின் நிம்மதியை குலைத்துவிடும். எதுவும் பேசாமல் பாராமுகத்துடன் இருந்தாலும் மனஸ்தாபத்தை உண்டாக்கிவிடும். ஆதலால் உங்கள் துணையுடன் நேரத்தை எப்படி செலவிடுவது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. இருவருக்கும் பிடித்தமான பொதுவான விஷயங்களில் நேரத்தை செலவிடுவது சுலபமான வழி.

அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை இருவரும் தொடரும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி கொள்ளலாம். மனைவி வீட்டுவேலைகளில் திக்குமுக்காடி கொண்டிருக்கும்போது கணவன் ஒத்துழைப்பது அவசியம். அது வேலையை விரைவாக முடிக்க உதவுவதோடு இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்தும்.

வேலைக்கு செல்லும் தம்பதிகளாக இருந்தால் காலையிலும், மாலையிலும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் மனம் திறந்து பேசுவதற்காக ஒதுக்குங்கள். இரவில் சாப்பிட்ட பிறகு டி.வி.யிலோ, செல்போனிலோ முகத்தை பதித்துவிடாமல் துணையுடன் அன்றைய பொழுதில் நடந்த சம்பவங்களை பற்றி பேசலாம். நிறைய பேர் செல்போன் உலகுக்குள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வது குடும்ப உறவுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணைய தகவல்களை பற்றிகூட இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். அதற்கு சிறிது நேரத்தை ஒதுக்கிவிட்டு மற்ற விஷயங்களை பற்றி பேசலாம். அது நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதற்கு வழிவகுப்பதோடு இருவருக்கும் இடையே உரையாடும் நேரத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும். வார இறுதி நாட்களில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் சேர்ந்து விளையாடலாம்.

அதில் குடும்ப உறவினர்களும் பங்கு பெறும்போது எவரும் தனிமைப்படுத்தப்படும் சூழலை உணரமாட்டார்கள். ஒருசிலர் வார இறுதி நாட்களில் பெரும் பகுதியை வெளியிலேயே கழிக்க விரும்புவார்கள். துணையை தவிர்த்து விட்டு நண்பர்களுடனோ, மற்றவர்களுடனோ அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சகவாசங்களைக் குறைத்துவிட்டு வார இறுதி நாட்களை வீட்டில் செலவிடுவது துணைக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவை இனிமையாக்கும்.