Home உறவு-காதல் உங்களுடைய காதலர் நல்லவரா? கெட்டவரா? ஒரு சுய பரிசோதனை

உங்களுடைய காதலர் நல்லவரா? கெட்டவரா? ஒரு சுய பரிசோதனை

268

காதல் உறவுகள்:நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். சரி.. பரிசோதனை தேர்வுக்குள் நுழையலாமா?

1. காதலர் உங்களை வேண்டுமென்றே காயப்படுத்துகிறாரா?

அ. எப்போதாவது காயப்படுத்துவார்.
ஆ. கடுமையாகப் பேசுவார், ஆனால் காரணம் இருக்கும்.
இ. அவ்வப்போது காயப்படுத்துவார்.
ஈ. அடிக்கடி கடுமையாக நடந்துகொள்கிறார்.

2. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பேசியிருக்கிறாரா?

அ. எப்போதும் காதலுடன் பேசுவார்.
ஆ. அவ்வப்போது சேர்ந்து வாழ்வது பற்றி பேசுவார்.
இ. பழகுகிறோம், ஆனால் சேருவது பற்றி பேசியதில்லை.
ஈ. பழக ஆரம்பித்தபோது மட்டும் பேசினார்.

3. காதலருக்கு எவ்வளவு கோபம் வரும்?

அ. செல்லக் கோபம் கொள்வார்.
ஆ. எப்போதாவது கோபம் வரும்.
இ. அடிக்கடி கோபப்படுவார்.
ஈ. கோபம்தான் அவரது அடையாளமே.

4. காதலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?

அ. கடுமையாகப் பேசுவார், பின்னர் இறங்கி வருவார்.
ஆ. பொருட்களை உடைப்பார், வண்டியை வேகமாக ஓட்டுவார்.
இ. பேசாமல் இருப்பார்.
ஈ. பல நாட்கள் தொடர்பு கொள்ளமாட்டார்.

5. பிரச்சினையின் போது முதலில் இறங்கி வருவது யார்?

அ. அவர்தான் இறங்கி வருவார்.
ஆ. நான்தான் பணிந்துசெல்ல வேண்டும்.
இ. எப்போதாவது பணிந்துபோவார்.
ஈ. விட்டுக் கொடுக்க மாட்டோம். தவறு யாருடையதோ அவர்தான் இறங்கி வர வேண்டும் என நினைப்போம்.

6. அவர் உங்களைச் சுற்றி வருவதை பற்றி..?

அ. அது ஒரு சுகமான அனுபவம். அவர் எனக்கு வேண்டும்.
ஆ. அவர் என்னை சுற்றி வருவது எனக்குப் பிடித்திருக்கிறது.
இ. காரணத்துடன்தான் சுற்றுகிறார் என தோன்றுகிறது.
ஈ. சுற்றி வருகிறார், எனக்குப் பிடிக்கவில்லை.

7. உங்கள் இருவரில் அதிகமாக எரிந்து விழுவது யார்?

அ. இருவரும் கோபத்தில் அப்படி நடந்து கொள்வோம்.
ஆ. நான்தான், அவர் கோபப்படமாட்டார்.
இ. அவர்தான் என்னைவிட கோபக்காரர்.
ஈ. கோபம் வந்தால் கண்மூடித்தனமாக எரிச்சலைக் கொட்டுவார்.

8. உங்களை ஈர்ப்பதற்காக, இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறாரா?

அ. இல்லை. எப்போதும்போலவே செயல்படுகிறார்.
ஆ. எப்போதாவது அப்படி நடந்துகொள்கிறார்.
இ. ஈர்ப்பதற்காக நடிக்கிறார்.
ஈ. நம்பிக்கை தரும் விதத்தில் அவரது நடத்தைகள் இல்லை.

9. உங்கள் ஆசைகளுக்கும், லட்சியங்களுக்கும் கைகொடுப்பாரா?

அ. ஆம்.. அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
ஆ. ஆசைகளை நிறைவேற்றுகிறார்.
இ. வாக்குறுதி தருவார், பின்னர் கண்டு கொள்வதில்லை.
ஈ. ஆசைகளை கைவிடச் சொல்வார்.

10. அவரது விருப்பத்தைத் தாண்டி நீங்கள் செயல்படும்போது என்ன செய்வார்?

அ. என் ஆசையை நிறைவேற்றுவார்.
ஆ. உன் விருப்பம் என்று விட்டுவிடுவார்.
இ. எதிர்ப்புத் தெரிவிப்பார்.
ஈ. என் விருப்பங்களுக்கு தடைவிதிப்பார்.

11. பொது இடங்களில் உங்களை தாக்கிப் பேசுவதும், திட்டுவதும் உண்டா?

அ. இல்லை. கோபத்தை அடக்கிக் கொள்வார்.
ஆ. அடக்கத்துடன் கோபத்தை காட்டுவார்.
இ. அடக்கமின்றி பேசுவார். அடிப்பதும் உண்டு.
ஈ. ஆபாசமாக பேசிவிட்டு, என்னை தனியாக விட்டுவிட்டு போய்விடுவார்.

12. உங்கள் தேவை நிறைவேறாதபோது..?

அ. சமாதானம் செய்வார். தேவையை நிறைவேற்ற வாக்குறுதியளிப்பார்.
ஆ. சமாளித்து நழுவிவிடுவார்.
இ. இருப்பதை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவார்.
ஈ. கண்டுகொள்ளமாட்டார்.

13. அவருடன் பழகுவது பற்றி உங்கள் தோழிகளும், உறவினர்களும் என்ன சொல்கிறார்கள்?

அ. நல்ல மனிதர், ஜோடி சேர வாழ்த்துவதாக கூறுவார்கள்.
ஆ. எதற்கும் எச்சரிக்கையாக பழகு என்பார்கள்.
இ. வேறுமாதிரி கேள்விப்பட்டதாக கூறுவார்கள்.
ஈ. தவறானவர், காதலை கைவிடவலியுறுத்துகிறார்கள்.

14. உங்கள் பழக்கம் வீட்டிற்குத் தெரியுமா?

அ. பெற்றோருக்குத் தெரியும்.
ஆ. சகோதரன் அல்லது சகோதரிக்கு மட்டும் தெரியும்.
இ. சொல்ல பயமாக இருக்கிறது.
ஈ. யாருக்கும் தெரியாது.

15. பழைய விஷயங்களை, தவறுகளை சொல்லிக்காட்டி பேசுகிறாரா?

அ. அப்படி பேசமாட்டார்.
ஆ. சில வேளைகளில் அப்படிச் சொல்லிக்காட்டுவார்.
இ. குத்திக் காட்டிப் பேசுவதாகத் தோன்றும்.
ஈ. குறைசொல்லிப் பேசுவார்.

16. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவாரா?

அ. இல்லை.
ஆ. சில நேரங்களில் ஒப்பீடுசெய்வார்.
இ. நடை, உடை, பாவனைகளில் சிலரைக் காட்டி ஒப்புமை செய்வதுண்டு.
ஈ. மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவார்.

17. அவரது நடத்தையைப் பற்றி மற்றவர்கள் குறைகூறி இருக்கிறார்களா?

அ. யாரும் குறைகூறியதில்லை.
ஆ. சில பழக்கவழக்கங்களை குறைசொல்வார்கள்.
இ. வேறு பெண்களுடனும் பழகுவதாக சொல்கிறார்கள்.
ஈ. வேண்டாத நடத்தை கொண்டவர் என்று எச்சரிக்கிறார்கள்.

18. உங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசியது உண்டா?

அ. நிறைய பேசுவோம். நிறைய திட்டமிட்டிருக்கிறோம்.
ஆ. அவ்வப்போது பேசுவோம்.
இ. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவோம்.
ஈ. அவ்வளவு பேசியதில்லை.

19. உங்கள் செயல்பாடுகளில் அவர் சந்தேகப்படுகிறாரா?

அ. இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
ஆ. சந்தேகப்படமாட்டார்.
இ. சில நேரங்களில் சந்தேகமடைகிறார்.
ஈ. அடிக்கடி சந்தேக கேள்விகளை எழுப்புகிறார்.

20. அவரது அன்பு முறிந்துவிடும் என நினைக்கிறீர்களா?

அ. ரொம்ப அன்பாக இருக்கிறார், அப்படித் தெரியவில்லை.
ஆ. கைவிடமாட்டார்.
இ. பாசமாக பழகுகிறார், நம்ப தயக்கமாக உள்ளது.
ஈ. கழற்றிவிட்டுவிடுவாரோ என்ற அச்சம் உண்டு.

இப்போது உங்கள் காதலை எடைபோடலாம். அ. பதில்களுக்கு 10 மதிப்பெண். ஆ. பதில்களுக்கு 5 மதிப்பெண். இ. பதில்களுக்கு 3 மதிப்பெண். ஈ. பதில்களுக்கு 1 மதிப்பெண் வழங்குங்கள். உங்கள் மொத்த மதிப்பெண்களை கூட்டிக் கொள்ளுங்கள்.

மதிப்பெண் 30 -க்குள் இருந்தால்..

உங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஏதேதோ ஆசைகளுடன் உங்களைச் சுற்றி வரலாம். நல்ல பண்புகள் அவரிடம் குறைவாகவே இருக்கிறது. அவருடைய காதலை ஏற்கத் தேவையில்லை. தேவையின்றி நட்பை வளர்க்காமல் நைசாக அவரை கழற்றி விட்டுவிடுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு விலகுங்கள்.

மதிப்பெண் 30-க்கு மேல் 90-க்குள் இருந்தால்…

நீங்கள் காதல்வசப்படவில்லை. உங்களை ஈர்ப்பதற்காக சுற்றிவரும் அவரது செய்கைகளை ரசிக்கிறீர்கள். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் உங்கள் நன்மதிப்பை பெறவில்லை. அவர் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பண்புநலன்களிலும் சராசரியானவராக காணப்படுகிறார். பருவ மயக்கத்தில் சுற்றும் அவரை உதாசீனப்படுத்தாமல் ஒதுங்கிச் செல்ல வையுங்கள். அவரிடம் இடைவெளியை உருவாக்காவிட்டால், அதுவே பின்னாளில் பிரச்சினையாகலாம். எனவே காதல் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒதுங்கிச் செல்லுங்கள். அவர், உங்கள் வாழ்க்கையில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதிப்பெண் 90-க்கு மேல் 150-க்குள் இருந்தால்…

நீங்கள் இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறீர்கள். பண்புகள், குணநலன்கள் இருவருக்கும் ஒத்துப்போகிறது. அவர் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால், சேர்ந்து வாழலாம் என்று கூறினால் பரி சீலிக்கலாம். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசி முடிவு செய்யுங்கள். இறுதி முடிவுக்கு முன்பு பெற்றோரிடம் கலந்து பேசுங்கள். எதிர்ப்புகள் இருக்குமென்றால் ஏற்ற இறக்கங்களை சமாளித்து எப்படி வாழ்வது என்பதையும் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். வெறும் ஆசை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம்.

மதிப்பெண் 150-க்கு மேல் 200-க்குள் இருந்தால்…

உங்கள் காதலர் இனிமையானவர். நீங்களும் அவரை விரும்புகிறீர்கள். பண்பு நலன்களில் சிறந்து விளங்கும் அவரது காதலை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்தகட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் ஆலோசிக்கலாம். பெற்றோரின் சம்மதம், பொருளாதார நலன், சமூக உறவு, எதிர்கால வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.