காதல் உறவுகள்:💔 செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல்.
💔 இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல…பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது? விரிசலை ஏற்படுத்த காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எப்படி சுற்றி வளைத்துப் பார்த்தாலும் எல்லா காரணங்களும் பெரும்பாலும், இந்த பத்துக்குள் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியான பத்து காரணங்களை பார்க்கலாம்.
💔 1. ஈகோ (Ego)
குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ! அந்த வார்த்தைக்குள்ளேயே ‘கோ’ என்பது இருப்பதால், யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால், நிம்மதியை விரட்டிவிடும். நீ பெரியவனா… நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல, வாழ்க்கை. கணவனுக்கு தெரியாதது மனைவிக்கு தெரிந்திருக்கலாம்; மனைவிக்கு தெரியாதது கணவனுக்கு தெரிந்திருக்கலாம்; எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்னொரு பக்கம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இந்த ஈகோ அடிக்கடி வந்து போகும். அதனால் ஈகோவை தவிர்த்துவிடுவோம்.
💔 2. தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex)
இது எந்த நேரத்தில் மனிதனுக்குள் எட்டிப்பார்க்கும் என்பது தெரியாது. ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய், அதற்காக வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமாக கிண்டல் செய்தால் கூட, அது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அது நாளடைவில் அதிகமாகி தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்வார்கள். அந்த வட்டமே விரிசலாக மாறும். சமையல் தொடங்கி படிப்பு வரை இந்த தாழ்வுமனப்பான்மை எதற்காக வேண்டுமானாலும் வரலாம்.
💔 3. தவறான புரிதல் (Misunderstanding)
வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி… அப்பா பிள்ளை, அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது அவசியம். புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும். அதுமட்டும் இல்லாமல் போய்விட்டால், தொட்டதற்கெல்லாம் பிரச்னை எழ ஆரம்பித்துவிடும். ‘நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க…’ என்று எல்லோரிடமும் எரிந்து விழ ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவர்கள் எப்படி உங்களை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோல வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
💔 4. பொஸசிவ்னஸ் (Possessiveness)
‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்று என்ற பொஸசிவ்னஸ் நமக்கு இந்நாளில் பழக்கமாகிவிட்டது. அளவு கடந்த அன்புதான் இந்த பொஸசிவ்னஸ். கணவன் வேறு ஒரு பெண்ணிடமோ, மனைவி வேறு ஓர் ஆணிடமோ சாதாரணமாக பேசினால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த இடத்தில் அப்படியான ஒன்று நிகழ்ந்தால், ‘ஹேய் லூசு… அவளும் நீயும் ஒண்ணா…’ என அதே இடத்தில் சொல்லி உங்கள் துணையின் முக்கியத்துவத்தை புரியவைத்துவிட வேண்டும். அப்படியே அதை வளரவிட்டால், ஆபத்துதான். இது கல்யாணம் ஆனதும் வரலாம். 40 வயதிலும் வரலாம். எந்த நேரத்திலும் இது என்ட்ரி ஆகலாம்.
💔 5. சந்தேகம் (Suspicion)
பொஸசிவ்னஸுக்கும் இதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் இது. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய், வீட்டையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் துணையுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.
💔 6. மனம் விட்டுப் பேசாதது (Not being open about their feelings)
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும். ஆனால், அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது. அதேபோல குழந்தைகளாக இருந்தாலும் சரி… பெற்றோராக இருந்தாலும் சரி… அவரவர்களுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்கள் அதில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆளுக்கொரு விஷயத்தை மனசுக்குள் மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது. அது விரிசலில் மட்டுமே முடியும்.
💔 7. மூன்றாம் நபரின் தலையீடு (The intervention of a third person)
குறிப்பாக இது கணவன- மனைவி கவனிக்க வேண்டிய விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது. அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்கு மனைவியைவிடவும், மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது; நல்லது செய்யவும் முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.
💔 8. துன்புறுத்தல் (Harassment)
கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பாசம், குழந்தைகளின் வரவுக்குப்பின் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். அதுவும் 40 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகள் மீது அன்பையும் அக்கறையையும் காட்டிக் கொண்டு, கணவனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். கணவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போவார்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் துணைக்கு அரவணைப்பு முக்கியம். அடிப்பது, சண்டை போடுவது மட்டுமல்ல, விட்டு விலகிப்போவதும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அப்படியான ஒன்று நிகழும்போது இருவருக்கும் இடையில் விரிசல் தொடங்கியிருக்கும்.
வீட்டில் இருக்கும் குழந்தைகள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணித்தால், அவர்களைப் பொருத்தவரையில் அதுவும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அந்தத் திணிப்பு நாளடைவில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும்.
9. விட்டுக்கொடுக்காதது (Being Selfish)
குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப்போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார். ‘அடச்சே… இதுக்கா சண்டை போட்டோம்!’ என மறுநாள் உங்களுக்கே தோன்றலாம். அதேபோல குழந்தைகளிடமும் சில விஷயங்களில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். ’அவன் என்ன சின்ன குழந்தைதானே… நான் சொன்னால் கேட்க மாட்டானா?’ என்ற எண்ணம் வரவே கூடாது. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போக மாட்டான் என பெரியவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.
💔 10. சோசியல் மீடியா (Social Media)
இன்று பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது சோஷியல் மீடியாக்கள். பெரும்பாலானோர் அதிக நேரத்தை இங்கேதான் செலவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதை விட சோஷியல் மீடியாவுக்குள் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, அலுவலகம் செல்வதற்கு என எல்லாவற்றும் தனித்தனியாக நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நேரம் காலமில்லாமல் சோஷியல் மீடியா நம்மை ஆக்ரமித்துவிடுகிறது.
இதைக் கேட்டால் பிரச்னை தொடங்கிவிடுகிறது. அதேபோல் போன். உங்கள் கட்டுப்பாட்டில் போன் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது – முக்கியமாக படுக்கையறையில் – எந்தக் காரணத்துக்காகவும் போனை நோண்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் துணையை எரிச்சல்படுத்தும்.
இந்த பத்து காரணங்களை திரும்ப ஒருமுறை படியுங்கள். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதை சரி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!