Home உறவு-காதல் காதல் முக்கியமா? காதலி முக்கியமா?

காதல் முக்கியமா? காதலி முக்கியமா?

33

காதல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று: அது தெய்வீகமானது, காலத்தால் அழியாதது, மரணத்தால் மறந்துவிடாதது, பிறவிக்குப் பிறவி தொடர்ந்து வருவது. இது காதலர்களின் பார்வை. இரண்டு: அது பொய்யானது. இளம் மனங்களை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் ஒரு மாயை அது. பெரும் துன்பத்தையும் பேரழிவையும் தரவல்லது. இது பெற்றோரது பார்வை. உண்மையில் இவை இரண்டுமே தவறான பார்வைகள்.

காதல் என்று அழைக்கப்படும் இந்த உணர்வு மிகவும் வலிமை வாய்ந்த ஆழ்மனச் சக்தி. மனிதன் வளர்ந்துகொண்டிருக்கிறான். அவனுடைய பரிணாம வளர்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் உணர்வு இந்த அக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறப்பைப் போன்றது இது. மனித மனத்தில் தன்னுணர்வு தீவிரம் அடைந்து சுயம் விழித்தெழும் முறைபாட்டில் இந்த உணர்வு பெரும் முக்கியத்துவம் கொண்டது. இந்த வலிமை மிகுந்த சக்தியின் ஆதிக்கத்திற்கு இளையவர்கள் ஆட்படும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் வல்லமை இன்றிக் குழப்பத் திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் ஏதோ பெரும் தவறு செய்வதாகக் கருதி அதை ஆட்சேபிக்கி றார்கள்.

காதல் வயப்பட்ட நிலையில் ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும் மகிழ்ச்சியும், மறுபுறம் ஆழமான வேதனையும் மாறி மாறி அலைக் கழிக்கும் போது இளை ஞர்கள் தத்தளிக் கிறார்கள். சமூகப் பொறுப்பு சிறிதும் இல்லாமல், வெறும் வியாபாரம் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள திரைப்படங்களும், வியாபாரப் பத்திரிகைகளும் காதலை ஒரு வணிகச் சாதனமாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் காதலின் உண்மையான முக்கியத்துவம் அறிந்துகொள்ளப்படாமல் போகிறது. அக வளர்ச்சியில் காதல் வகிக்கும் பங்கு பற்றி இப்போது இருக்கும் புரிதல் முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது. இந்த விஷயம் பற்றிய புதிய சிந்தனைக்கு இது வழிவகுக்கும்.

வாசகர் கேள்விகளுக்கான பதில்கள்

1. நான் 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். இந்த வயதில் வருவது காதல் இல்லை ஒருவித Attraction னு சொல்லுவாங்க. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் என்னாலயும் காதல் பண்ணாமல் இருக்க முடியலை. நான் பத்தாவது படிக்கும்போது என்னுடன் படிக்கும் பெண்ணை காதலித்து ஏமாந்தவன். பிரச்சனை என்னவென்றால், நான் மீண்டும் என்னுடன் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அக்காதலை தவிர்க்க நினைக்கின்றேன். ஆனால் என்னால் இயலவில்லை. எனது பள்ளி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக இருக்கும் அக்காதலை தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

காதல் என்னும் உணர்வு அன்பின் ஒரு விதமான வெளிப்பாடு. நமக்கு நம் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது முக்கியம். நம்மை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதபோதுதான் இன்னொருவர் நம்மை ஏற்றுக்கொள்வது முக்கியமாகப் போய்விடுகிறது. உங்களை உங்கள் குற்றம் குறைகளோடு உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? அன்பு செலுத்த முடிகிறதா? முடிகிறது என்றால் உங்களால் அந்தப் பெண் இல்லாமல் வாழ முடியும். நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக்கொள்ளாததை வேறு யார் கொடுத்து விட முடியும்? உங்கள் மீது நிபந்தனைகள் அற்ற அன்பு செலுத்துங்கள். பிரச்னை தீரும்.

2. எனக்கு 24 வயது ஆகிறது. என்னுடைய பழைய காதல் முறிந்து ஒரு வருடம் ஆகிறது. அந்தக் காதல் முறிவு ஏற்படுத்திய காயத்தால் மறுபடியும் எப்போதும் காதலிக்கவே கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன். ஆனால், இப்போது என் பணியிடத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், அவளுக்கும் ஏற்கெனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. அதை அவள் என்னிடம் சொல்லியதில் இருந்தே அவள் மீதான என் காதல் தொலைந்துவிட்டதைப் போல் உணர்கிறேன். அவளைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் இந்த உணர்வு என்னை விட்டு மறையாது என்று தோன்றுகிறது. அவளை மறந்துவிடுவதா, இல்லை என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள்.

உங்களுக்குக் காதலைவிடக் காதலி முக்கியம் என்று படுகிறது. இந்த மனப்பாங்கு மனத்தில் முரண்பாட்டையும் சிக்கலையுமே விளைவிக்கும். காதல் திருமணங்கள் மணமுறிவுக்கு உள்ளாவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

நீங்கள் இப்போது இருக்கும் மனநிலை இரட்டைக் கட்டு (double bind) என்னும் ஒரு மனநிலை. இருந்தாலும் தொல்லை, விட்டாலும் வேதனை என்பது போன்ற நிலை இது. சிந்தனையளவில் இந்த இரட்டைக் கட்டு நிலைக்குத் தீர்வு கிடையாது, மனத்தை ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று செருகிவிடக்கூடிய ஆபத்து இதில் இருக்கிறது.

உண்மையில் உங்களுக்குள் நீங்களே அறியாமல் நடந்துகொண்டிருப்பது இதுதான். உங்கள் மனத்தில் ‘காதலி’ என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. அதை அனுபவம் கொள்வதற்கு வெளியுலகில் ஒரு பெண் தேவை. அந்த பிம்பம் உங்கள் சுயமனப் படத்தின் பகுதியாகும். ’காதலி’ என்னும் அந்தப் பிம்பம் இல்லாமல் உங்கள் சுயமனப் படம் முழுமையற்றதாகிவிடும். அதனால் உங்களுக்கு ஒரு காதலி தேவை என்று ஆகிவிடுகிறது. இந்த மனநிலையில் இருந்து விடுபடாத வரையில் ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழும் வாழ்க்கை முரண்பாடு நிறைந்ததாகவே இருக்கும்.

இப்போது உங்களுடன் பணிபுரியும் அந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என்பதல்ல விஷயம். உங்கள் மனச் சிக்கலில் இருந்து நீங்கள் விடுபடாமல் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் மனத்தளவில் அந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் இருவரின் வாழ்க்கையும் வேதனை நிறைந்ததாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

திருமணம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் உளவியல் ஆலோசகர் ஒருவரை நீங்கள் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று படுகிறது.