உங்களையும், என்னையும் சேர்த்து தான் இது…. நம்மில் பெரும்பாலானோர் தாம் செய்த தவறுகளுக்கு, நாம் செய்ய தவறிய கடமைகளுக்கு மற்றவரை குறைகூறியே பழகிவிட்டோம். அவன் அப்படி இருந்திருந்தால் நான் சாதித்திருப்பேன், எனது இந்த நிலைக்கு அவன் தான் காரணம் என… காரணம் பழி சொலி பேசி, பேசி நமது வாழ்க்கையை நாமே சீரழிந்து போக காரணியாகி விடுகிறோம். கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் இந்த தருணங்களை கடந்து வந்திருக்கலாம்…
கொழுப்பு! நீங்கன் உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு நாள் நீங்கள் உடல் பருமன் அதிகரித்தது பல கஷ்டங்களுக்கு ஆளாகி தான் நிற்பீர்கள். இப்படி தான் வாழ்க்கையும் உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ளாத வரை உங்கள் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லாது.
தோல்வி, ஏமாற்றம்! வெற்றி, தோல்வி, முன்னேற்றம், ஏமாற்றம் அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வுகள் இல்லையெனில் நமது இதயத்துடிப்பை கூட அறிய முடியாது. பிறகெப்படி வாழ்வினை அறிவது. தோல்வியும், ஏமாற்றமும் உங்களது மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, நாம் தான் பலவற்றை எதிர்பார்த்து நிம்மதியை தொலைத்துவிடுகிறோம்.
பழிச்சொல்! மார்க் சரியாக வரவில்லை என்றால், ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை, வேலை சரியாக செய்யவில்லை என்றால் மேனேஜர் பிரஷர் தருகிறார், இல்லறம் சரியாக அமையவில்லை என்றால் பெற்றோர், உறவினர்கள், மனைவி காரணம்… இன்னும் எத்தனை காரணங்கள், எத்தனை பழிச்சொல்… எத்தனை காலத்திற்கு சொல்லிக் கொண்டே இருக்க போகிறீர்கள். பழிச்சொல் உங்களை மேலும் தோல்வியடைய தான் செய்யும். நீங்களாக சிந்திக்க வேண்டும். காரணம் காட்டுவதை தவிர்த்து. தோல்விக்கான காரணங்களை தேட வேண்டும்.
வழி! வாழ்க்கை என்பது ஒரு கணக்கு. ஆனால், அனைவரின் வாழ்க்கையும் ஒரே கணக்கல்ல. நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் கேள்வித்தாள் வெவ்வேறு கணக்குகளை கொண்டுள்ளதாம். மற்றவர் பின்பற்றும் ஃபார்முலா கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு ஒத்துவராது. வெற்றிக்கான வழியை தேடாமல், உருவாக்க துவங்குங்கள். பழிச்சொல் கூறும் பழக்கம் குறையும். புகழ் சொல் உங்களை தேடிவரும்.
யாரையும் அனுமதிக்க வேண்டாம்! உங்கள் வாழ்க்கை எனும் சாம்ராஜியத்திற்கு நீங்கள் தான் அரசனாக இருக்க வேண்டும். மற்றவரை அரசாள வைத்தால், அதன் எதிர்மறை தாக்கத்தை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும். உங்கள் சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி என அனைத்திற்கும் நீங்கள் தான் காரணமாக முடியும். பொறுப்பு உங்களுடையது. பயன்படுத்தும் பொருளில் இருந்து, சேர்ந்து வாழும் நபர்கள் வரை தேர்வு செய்தது நீங்கள் தான். எனவே, அதனால் ஏற்படும் தாக்கத்திற்கு காரணமும் நீங்கள் தான்.
மனநிலை! சமைத்தது நான் தான் ஆனால், பொருளின் தரம் சரியில்லை அதனால் தான் ருசியாக இல்லை என நீங்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. ஏனெனில், தரமற்ற பொருட்களை வாங்கி சமைத்து யாருடைய குற்றம்? உங்களுடையது தானே! அப்படி தான், என் தோல்விக்கு மற்றவர் தான் குற்றம். அவர்கள் தான் என்னை ஏமாற்றிவிட்டனர், மோசமாக்கிவிட்டனர் என கூற முடியாது. அப்படிப்பட்ட நபர்களுடன் பழகியது யாருடைய குற்றம்? உங்களுடையது தானே! கண்டிப்பாக உங்களுடைய வெற்றிக்கு பலரது பங்களிப்பு இருக்கலாம். ஆனால், உங்களுடைய தோல்விக்கு நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பு. இந்த மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டாலே போதும். வாழ்வில் எப்படி சாதிக்க வேண்டும் என அறிந்துக்கொள்ளலாம்.