இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு தான் நமது மனநிறைவை குறைக்கிறது. அதிலும், இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு சில சமயம் உறவுகளையே சிதைத்துவிடும்.
இல்லறம் என்பது இருவரது மனமும் ஒத்துப்போய் நடக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போனாலும், ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்ள தான் வேண்டும். விட்டுக்கொடுத்து போக வேண்டியது மிகவும் அவசியம்.
பிரச்னை 1. “புரிந்து கொள்ளவில்லை”
உறவில் ஈடுபடும் போது தம்பதிகளுக்கு ஆசைகள் அதிகம் இருக்கும். ஆனால், அதே சமயம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியே பார்க்கும் படங்கள் அல்லது இணையத்தில் / புத்தகத்தில் படித்தது போன்றவற்றில் இருப்பது போன்று துணையிடம் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். படங்களில் காட்டப்படுவது வேறு உண்மை வேறு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா விஷயத்திற்கும் ஒத்துப்போக மாட்டார்கள். எனவே, கட்டாயப்படுத்திவிட்டு, அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என மனம் நோக வேண்டாம்.
பிரச்னை 2. ”பணத்தால் குலையும் ஒற்றுமை”
செலவு என்று வரும் போது ஆண்களின் கணக்கும், பெண்களின் கணக்கும் வேறுபடுவது சகஜம் தான். அதே போல தற்போதைய தம்பதிகள் மத்தியில் அவள் சம்பாதிக்கும் திமிரில் ஆடுகிறாள் என வசைப்பாட்டுகள் வரும். இதற்கான ஒரே தீர்வு, இருவரும் ஒன்றாக கணக்கு போட வேண்டும். முக்கியமாக யாராவது ஒருவர் புரிந்து விட்டுகொடுக்க வேண்டும்.
பிரச்னை 3. ”தாம்பத்தியம் சாதாரணமாக இல்லை”
அனைவரது மரபணு மட்டுமல்ல, வாழ்வியல், இல்லறம், உடல்நலம், மனநலம் எல்லாமே மாறுப்பட்டு தான் காணப்படும். இதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண் / பெண் தாம்பத்திய ரீதியாக ஒவ்வொரு மனப்பக்குவத்தில் இருப்பார்கள். ஒருவரது மனநிலை, மற்றும் உடல்நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. எனவே, மற்றவருடைய தாம்பத்திய வாழ்க்கையுடன் உங்கள் தாம்பத்திய வழக்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒருவேளை ஏதாவது பிரச்னை என்றால் அதற்கான நிபுணர்களிடம் சென்று ஆலோசனை செய்துக் கொள்ளுங்கள்.
பிரச்னை 4. “வீட்டு வேலைகள் என்றால் சண்டை உறுதி”
கௌரவ குறைச்சல், ஆண் ஆதிக்கம், அகம்பாவம், ஈகோ, பொம்பளைங்க சமாச்சாரம் என பல பெயர்கள் இதற்கு வைக்கலாம். அன்று ஆண்கள் வேலைக்கு சென்றனர், பெண்கள் வீட்டு வேலைகளை பார்த்தனர். இன்று இருவரும் வேலைக்கு செல்கிறார்கள், எனில், இருவரும் கௌரவக் குறைச்சல் பாராமல் அனைத்திலும் சரிப்பாதி வேலைகளை எடுத்து செய்ய வேண்டியது அவசியம் தான். எனவே, ஆண்களும் வீட்டு வேலைகளில் உதவி செய்வது உறவை பலப்படுத்தலாம்.
பிரச்னை 5. ’அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை”
பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனை இதுதான். பணம், வேலை என்று பம்பரமாய் சுழலும் இவர்கள், நாம் எதற்காக சுழலுகிறோம் என்பதை ஒரு நிமிடம் எண்ணினாலே, பிரச்சனைக்கு தீர்வுக் கண்டுவிடலாம்.
கணவன் – மனைவி ஆகிய இருவரும் சந்தோசமாக இருப்பதற்கு தானே பணம் தேவை. ஆனால், அந்த பணமே உங்கள் இருவரையும் ஒன்றாக இருக்க விடாமல் தடுக்கிறது எனில், நீங்கள் கொஞ்சம் நேரம் எடுத்து யோசிக்க வேண்டியது அவசியம். பணம், வரும் போகும். ஆனால், நல்ல உறவுகள் போனால் வராது. வந்தாலும், பழையது போல இருக்காது.