பெண்கள் கல்லூரி மற்றும் இருபாலர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பலருக்கும் லெகின்ஸ் அணிந்து வரக்கூடாது என பல கல்லூரிகள் தடை விதித்துள்ளது பற்றி அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம். இதற்கு பல கல்லூரி மாணவிகளும், பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் லெகின்ஸ் கிடைப்பதால் பல டாப்ஸூக்களுக்கு மேட்சாக அணிவதற்கும் நன்றாக இருப்பதாக பல பெண்கள் நினைக்கின்றனர். இப்படி லெகின்ஸை ஆர்வமாக அணிந்து வரும் பெண்கள், அதைச் சரியாக தேர்ந்தெடுத்தாலே போதும் மற்றவர்களின் பேச்சுக்கு நாம் ஆளாகத் தேவையில்லை. நாம் இப்போது இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன்பாக பெண்கள் அணியும் உடைகளில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. உள்ளாடைகள் முதற்கொண்டு வண்ணங்கள் வரை பல விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மகளிரியல் சிறப்பு மருத்துவர்கள். ஏனென்றால் இறுக்கமான லெகின்ஸ் அணிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாகவும், காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால் பெண்களுக்கு பல உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மகளிர் சிறப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை சரியாக அணிந்தாலே எந்த பிரச்னையும் வராது என்கின்றனர். லெகின்ஸைப் பொறுத்தவரை நிறைய வெரைட்டிகள் ஷோரூம்களில் கிடைக்கின்றன. லெகின்ஸ், லெஜீன்ஸ், பிரின்டட் லெகின்ஸ், லேஸ் வொர்க் லெகின்ஸ் என பல வெரைட்டிகள் கிடைக்கின்றன.
இதில் எந்த லெகின்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்த ஐடியாக்களைத் தருகிறார் சென்னை, சூளைமேடு ‘சராஸ் பொட்டீக்’கின் உரிமையாளர், ஃபேஷன் டிசைனர் சலீமா கமால்,
* குறைவான விலைகளில் கிடைக்கிறதே என மிகவும் மெல்லிதாக இருக்கும் லெகின்ஸை அணிவதை தவிர்ப்பது நல்லது. இது வெளிப்படையாக ஸ்கின் மற்றும் பாடி ஷேப் தெரியும்.
* இந்த கலர் லெகின்ஸ் இல்லை, மெட்டீரியல் நல்லதாக இருக்கிறது என சைஸ் பெரியதாகவோ, சின்னதாகவோ இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என எடுத்து அணிய வேண்டாம்.
* LYCRA 4 WAYS STRETCH (ஸ்போர்ட்ஸூக்கும் இதை பயன்படுத்துவார்கள்) மெட்டீரியல்கள் நிறைய கிடைக்கிறது.
* பெரும்பாலும் காட்டன் மெட்டீரியல் லெகின்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது.
* பிரான்டட் இல்லாத லெகின்ஸ் பெரும்பாலும் சாயம் போக வாய்ப்பிருக்கிறது.
* லெகின்ஸை விட தற்போது பலரும் லெஜீன்ஸை விரும்புகிறார்கள். அது பார்ப்பதற்கு ஜீன்ஸ் போன்றே இருப்பதால் அழகாக இருக்கும்.
* அவரவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு லெகின்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது.
* பெரும்பாலும் டார்க் வண்ணங்களை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு டாப்ஸ் லைட் கலரில் இருக்கலாம்.
* லெகின்ஸ் மட்டுமல்ல எந்த ஆடையாக இருந்தாலும் சரி, முதலில், தனியாக வாஷ் செய்து அணிவது நல்லது. ஏனென்றால், சில மெட்டீரியல்கள் சாயம் போகும் வாய்ப்பு உள்ளது.
* எலாஸ்டிக் மற்றும் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஆடைகளை வாஷிங் மிஷினில் போடாமல், கையில் வாஷ் செய்வது நல்லது. ஒவ்வொரு ஆடைகளிலுமே எதில் வாஷ் செய்யக் கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள்.