Home ஆரோக்கியம் மூக்கைப் பிடிச்சுக்கிட்டே வாசியுங்க!

மூக்கைப் பிடிச்சுக்கிட்டே வாசியுங்க!

78

மூன்று அல்லது மூன்று பேருக்கு மேல் அமர்ந்திருக்கும் ஒரு இடத்தில், திடீரென்று ஒரு துர்நாற்றம் வீசினால், ‘யார் இதைச் செய்தது?’ என்பதுபோல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள், அதைச் செய்தவர் உட்பட!

வாயு வெளியேறுவது இயற்கைதான் என்றாலும், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதது. இதனால்தான், கொலை செய்ததை ஒப்புக்கொண்டாலும் ‘இதை’ செய்ததை மட்டும் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அடிக்கடி நம்மை அவமானப்படுத்தும் வாயுத் தொல்லைக்கான காரணங்கள் பற்றி நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால், கீழே தரப்பட்டுள்ள காரணங்களை அறிவீர்களா?

முள்ளங்கி சாப்பிடுபவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். முள்ளங்கியை வாங்கும்போதே ‘ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்’ என்ற கணக்கில், வாயுத் தொல்லையும் கூடவே இருக்கும். இதைப் பலரும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள்.

‘கேஸ்’ அடைக்கப்பட்ட சோடா வகையறாக்களை அதிகளவில் அருந்துபவர்கள், அதன் ‘பின்’விளைவாக வாயுத் தொல்லையால் அவதிப்படுவர். காபனேற்றம் செய்யப்பட்ட அந்தத் திரவத்தை அருந்துவதால், வயிற்றில் உள்ள வாயுக்கள் பிடிக்கப்பட்டு, பின்(பு) வெளியேறும். ஏப்பமாக வெளிவந்தால் உங்கள் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டி, முளைகட்டிய பயறு அல்லது கோவா உள்ளிட்ட காய்கறிகளால் ஆன சலட் வகைகளைச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவற்றில் உள்ள ஒரு வகை மாச்சத்தின் காரணமாக, அவற்றை உடனடியாக சீரணிக்க முடியாது போகும். இதனால் தேவையற்ற வாயுக்கள் உருவாகும். இதனால் அடிக்கடி நீங்கள் தனியிடம் நோக்கி ஓட நேர்ந்துவிடும்.

சாப்பாட்டில் மிகக் கவனமாக இருக்கும் சிலருக்கும் வாயுத் தொல்லை ஏற்படலாம். காரணம் பேசும்போதும், சிரிக்கும்போதும் அவர்களை அறியாமலேயே வாயுவை உள்ளனுப்பி விடுகிறார்கள். அது அளவுக்கு மீறியதும் தானாகவே விடுதலையாகி உங்களைக் குற்றவாளியாக்கும்.

நீரிழிவு நோயாளர்கள் மட்டுமன்றி, செயற்கை சீனியைப் பயன்படுத்துபவர்கள் தற்போது பெருகிவருகிறார்கள். இதை சீரணிக்க முடியாத நமது உடல், அதற்குப் பதிலாக வாயுக்களை உருவாக்கிவிடுகிறது. இதுவும் வாயுத் தொல்லைக்கு ஒரு காரணம்.

மன அழுத்தம் உங்கள் உடலை மட்டுமன்றி உங்கள் கௌரவத்தையும் பாதிக்கும். காரணம், நமது குடல், நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. மனம் அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, அந்த நரம்புகளின் தூண்டலால் வாயு வெளியேறுகிறது.

குழந்தை பெற்ற பெண்களின் உடல், வாயுக்களை உற்பத்தி செய்யும் ஒரு ‘மினி’ தொழிற்சாலையாகவே மாறிவிடும். இதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. காலம்தான் தீர்வளிக்கும்.

இன்றைய அவசரகதியான வாழ்க்கையில், அடிக்கடி நாம் கழிவறையைப் பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களை ஒத்திப் போட்டுக்கொண்டே செல்கிறோம். இதனால், உடலுக்குள் தேங்கும் கழிவுகளில் இருக்கும் வாயு, அடிக்கடி பிரித்து வெளியேற்றப்படும்.

வாயுத் தொல்லை உங்களுக்கும் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு சரிசெய்யுங்கள்!