முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்புக்குள்ளான குழந்தைகள், குறைமாத குழந்தைகளாக பிறக்கின்றன.
முதல் பிரசவத்தில் தாய்க்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுதல் ஆகியவற்றால் இரண்டாவது பிரசவம் குறைபிரசவமாக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, கருவை சுமந்திருக்கும் தாய், அவரது தாயின் வயிற்றில் வளர்ந்தபோது ஏதாவது கோளாறுகள் இருந்திருந்தாலும், குறைபிரவத்திற்கு வாய்ப்புண்டு.
முதல் பிரசவத்தில் குறைமாத குழந்தை பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவமும், அதேபோல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எனினும் காரணமே இல்லாமல் குறைமாதத்தில் குழந்தைகள் பிறப்பதுதான் அதிகமாக நடக்கிறது. குறைபிரசவத்தை எளிதில் தடுக்க முடியாது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைப்பதால் பிரசவ நாட்களை தள்ளிப்போட முடியும். குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலும் சரியான சிகிக்சையளித்தால் பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்ற முடியும்.
நுரையீரல் முதிர்ச்சியடையாமை, நோய்கிருமித் தாக்கம், மூளையில் ரத்த கசிவு, போன்றவையே, குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறக்க காரணமாகின்றன.