Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?

28

பெற்றோர் ஒரு நடத்தை தவறானது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், அதற்குப்பின் எல்லா சமயங்களிலும் அது தவறானதே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒழுக்கம் பற்றி பெற்றோர் தாம் சொன்ன கருத்தை எப்போதும் உறுதியாக கடைபிடிப்பது அவசியம்.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும் போது அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது-எது கெட்டது என்பதில் பெற்றோர் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதின் அடிப்படை விதிகள்.

இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள் நல்ல பழக்கங்களை பெற்றோரின் அறிவுறுத்தலுக்காக கடைபிடிக்கத் தொடங்குவர். அவர்களின் அறிவு வளர்ச்சி முழுமை பெறாத இக்கால கட்டத்தில் எதற்காக ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி அவர்களின் மனதில் தோன்றுவதில்லை.

காரணம் தெரியாமலேயே நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் வயது இது. ஒரு நல்ல நடத்தையால் என்ன நன்மை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் இச்சமயத்தில் சொல்லி கொடுத்தால் அந்நடத்தை அவர்களின் ஆளுமையில் வேறூன்றி ஆயுட்காலம் முழுமைக்கும் நிலைத்து நிற்கும்.

ஆறு வயதிற்கு மேற்பட்ட பதிமூன்று வயதிற்குப்பட்ட சில குழந்தைகள் அதிக அடாவடித்தனம் செய்வதும் சாதாரணமானதே. பள்ளியின் விதிமுறைகளை மீறி ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாவது அதிக குழந்தைகளிடம் தற்போது காணப்படுகிறது. பள்ளியின் மீது குழந்தைப் பருவத்தில் இருந்த பயம் குறைந்து போவதும், பள்ளி வாழ்க்கை அலுப்பைத் தருவதாக இருப்பதுவுமே இதற்குக் காரணம்.

நாளாக நாளாக இக்குழந்தைகள் தானாகவே சரியாகிவிடுவர். அதற்குள் பெற்றோர் பெரிய பிரச்சனையை உண்டாக்கி பெற்றோர்-குழந்தை உறவு பாதிக்கும் நிலைக்குப் போய்விடும். பெற்றோர் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொறுமை காப்பது நன்று. குழந்தைப் பருவத்தில் சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் கூட பெற்றோர் பொறுமையுடன் இருப்பது வாலிப பருவத்தில் அவர்கள் தங்கள் சொந்த அறிவின் துணைகொண்டு ஒழுக்கமானவர்களாக வளர உதவும்.