கர்ப்பகாலத்தில் என்ன உணவு சாப்பிடலாம் என்பதைப்பற்றி பலரும் பலவிதமாக கூறுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களின் அட்வைஸ்க்கு அளவிருக்காது. எல்லாவற்றையும் கேட்டால் நமக்கு குழப்பம்தான் மிஞ்சும். குங்குமப்பூ சாப்பிடு குழந்தை சிவப்பா பிறக்கும், கருப்பு திராட்சை சாப்பிடாதே குழந்தை கருப்பாயிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இதெல்லாம் உண்மையில்லை மூடநம்பிக்கைதான் என்று கூறுகின்றனர்
மகப்பேறு மருத்துவர்கள்.கர்ப்பகாலத்தில் பழங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்து கண்டிப்பாக இருக்கிறது. கருப்புத் திராட்சை சாப்பிடுவது நல்லதுதான் என்று கூறும் மருத்துவர்கள் அதற்கான காரணத்தை முன்வைக்கின்றனர். கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ’ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த அச்சம் வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் பாலில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது இதுவும் உண்மையில்லையாம். குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு,ஜீன்களே முக்கிய காரணம்.
அதேசமயம் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும். ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.
மேலும் குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது