பனிக்காலம் தொடங்கிவிட்டாலே முகம், கை, கால் என உடல் முழுக்க பனிப்பற்றும், வெடிப்புகளும் நம்மை பாடாய்ப் படுத்தும். நம்முடைய சருமத்தைப் பார்க்க நமக்கே எரிச்சல் உண்டாகும். இதற்கு நல்ல தீர்வு ஆயில் மசாஜ் தான். ஆனால் ஒவ்வொரு ஆயிலையும் நாம் பயன்படுத்துகிற முறை வேறு.
பனிகாலத்திலும் அளவுக்கதிகமான குளிரிலும் நம்முடைய சருமம் அதிகமான வறட்சியை சந்திக்கும். அரிப்பு உண்டாகும். சருமத்தில் வெள்ளை வெள்ளையாக பனி வெடிப்பு உண்டாகும். ஆனால் அதே சருமத்தை நாம் முயற்சித்தால் பட்டுபோல் மிருதுவாக்க முடியும்.
சில எண்ணெய்கள் நம்முடைய சருமத்தை மென்மையாக்கும். அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும்?
ஆலிவ் ஆயிலை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சில துளிகள் சேர்த்து, குளிக்கலாம். இது சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராக செயல்படும். இதிலுள்ள ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஈ தோல் வறட்சியைத் தடுக்கும்.
கடுகு எண்ணெய் தோலில் வெள்ளை வெள்ளையாகப் படிந்திருந்திருக்கும் பனிப்பற்றியை நீக்கும். சில துளிகள் கடுகு எண்ணெயை எடுத்து முகம் மற்றும் கை கால்களில் நன்கு தேய்த்து, சில நிமிடங்கள் கழித்து கழுவினால் பனி காலங்களிலும் சருமம் மென்மையாக இருக்கும்.
தோல்களில் உண்டாகும் வறட்சிக்குச் சிறந்த தீர்வு தேங்காய் எண்ணெயும் உப்பும் தான். ஒரு ஸ்பூன் உப்புடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கலந்து சருமத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சன்பிளவர் ஆயில் சமையலலில் மட்டுமல்லாது, அழகு விஷயத்திலும் உங்களுக்குக் கைக்கொடுக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சில துளிகள் சூரியகாந்தி எண்ணெயை சருமத்தில் தேய்த்து வந்தால், சருமத்தில் தேவையில்லாத அலர்ஜி உண்டாகாது. குழந்தைகளுக்கு இதைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்யலாம்.