Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பயமா?

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பயமா?

39

ஒவ்வொரு பெண்ணுக்கும், தாயாவது பற்றிய கனவு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அந்த அற்புத அனுபவத்திற்காகக் காத்திருக்கிறார் என்பது உண்மைதான். இருப்பினும், சில பெண்களுக்கு கர்ப்பமடைவது பற்றியும் குழந்தை பிறப்பு பற்றியும் பயம் இருக்கலாம், இதுபோன்ற எண்ணங்கள் வருவதும் சகஜமே.

ஆனால், ஒரு சிலருக்கு குழந்தைப் பெற்றுக்கொள்வது குறித்து குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். உதாரணமாக பிரசவ வலி, ஊசி, இரத்தம் போன்றவை பற்றி நினைத்து அதிகம் பயப்படுவார்கள். இன்னும் சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே சில அச்சங்கள் இருக்கும், உதாரணமாக மருத்துவமனை பற்றி பயம், தன்னை பிறர் நிர்வாணமாகப் பார்ப்பார்களே என்கிற பயம், தனக்கோ, குழந்தைக்கோ காயம் பட்டுவிடுமோ அல்லது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம். இது போன்ற எண்ணங்கள் தொடர்ந்து இருந்தால் அது பெண்ணின் மனதை அலைக்கழித்து மனக்கலக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும். எனினும் சில பெண்கள், அவர்களின் குடும்பம் அல்லது நண்பர்களின் ஆதரவின் துணைகொண்டு இந்த பயத்தை வென்றுவிடுகிறார்கள். இது போன்ற ஆதரவு கிடைக்காதவர்கள் அல்லது இத்தகைய அச்சங்களைச் சமாளிக்க முடியாதவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளவோ கர்ப்பத்தைத் தள்ளிப்போடவோ சில சமயம் முற்றிலும் தவிர்க்கவோ முடிவெடுப்பதும் நடக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி ஏற்படும் இந்தப் பயத்தை “டோக்கோஃபோபியா” என்கிறோம்.”டோக்கோ” என்றால் குழந்தைப் பிறப்பு, “ஃபோபியா” என்றால் பயம்.
டோக்கோஃபோபியாவின் வரையறை: மனக்கலக்கம், மன அழுத்தம் மற்றும் (தாக்கத்திற்கு) நிகழவுக்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தக் கோளாறுகளுடன் கூடிய மன அழுத்தம் சார்ந்த உளவியல் நோய்.
வகைகள்:
a) முதல் நிலை டோக்கோஃபோபியா:
இதற்கு முன்பு கர்ப்பமடைந்த அனுபவம் இல்லாத பெண்களுக்கு, குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி ஏற்படும் பயம்.

பெண்கள் பிரசவம் குறித்த தங்கள் பயத்தைப் பற்றிக் கூறிக் கவலைப்படுவார்கள்.
வளரும் பருவத்தில் அல்லது குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் பயம் உருவாகத் தொடங்கியிருக்கலாம்.
b) இரண்டாம் நிலை டோக்கோஃபோபியா:
முந்தைய கர்ப்பத்தின்போது அதிக வலி அல்லது சிரமத்தை எதிர்கொண்ட பெண்களுக்கு இந்த வகை டோக்கோஃபோபியா காணப்படலாம்.
பொதுவாக கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், குழந்தை இறந்து பிறந்தால் அல்லது கருக்கலைப்பு செய்திருந்தால் இந்த வகை டோக்கோஃபோபியா வரலாம்.
டோக்கோஃபோபியாவின் விளைவுகள்:
டோக்கோஃபோபியாவால் பெண்களின் உணர்வுரீதியான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
கர்ப்பத்தைத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்திலேயே அவர் இருக்கலாம்.
கர்ப்பமே வேண்டாம், அதற்குப் பதில் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் முடிவு செய்யலாம்.

அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கலாம்.
கல்வி மற்றும் ஆலோசனை:
டோக்கோஃபோபியாவிற்கு சிகிச்சையளிக்க முடியும்.ஆகவே, முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் உங்கள் பயத்தை வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் சுகாதார சேவையாளரிடம் உங்கள் பயம் பற்றிப் பேசுங்கள், அப்போது கர்ப்பமாக இருக்கும் காலகட்டம் முழுதும், உங்கள் பிரசவத்தின்போதும் உங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும்.
ஒரு முறை குழந்தைப் பிறப்பில் துரதிருஷ்டவசமான அனுபவம் பெற்ற ஒரு பெண்ணுக்கு, அடுத்த கர்ப்பத்தின் போது டோக்கோஃபோபியா ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.என்ன தவறாகிப் போனது, ஏன் தவறாகிப் போனது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உங்கள் எதிர்மறை எண்ணங்களையும் அந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தின் மோசமான நினைவுகளையும் குறைக்க உதவும்.
ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளைச் செய்யுங்கள், ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மனதை ஆசுவாசமாக வைத்திருக்கலாம்.
மனக் கலக்கத்தை எப்படி நிர்வகிப்பது என்று அறிந்துகொள்ள ஓர் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
கர்ப்பம் சம்பந்தப்பட்ட மனதைப் பாதிக்கக்கூடிய (எமர்ஜென்சி) காட்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
டோக்கோஃபோபியாவிற்கு சிகிச்சையளிக்க முடியும், அதற்குத் தீர்வுள்ளது.உங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க, நீங்கள் தான் முதல் படியெடுத்து செயல்பட வேண்டும்!