குழந்தைகளின் பல்வரிசை பார்க்கவே மிக அழகாக இருக்கும். அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டால் சிறிய வயதிலேயே சொத்தை பற்கள் உண்டாகிவிடும். பற்கள் மிக வேகமாகவே வலுவிழந்துவிடும். கீழ்கண்ட சில பராமரிப்புகளை மேற்கொண்டால் பற்களை பழுதடையாமல் ஆரோக்கியமாகப் பாதுகாக்க முடியும்.
குழந்தைகளின் பற்கள் பராமரிப்பில் பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். கைக்குழந்தையாக இருக்கும் போது, ஒவ்வொரு முறை பால் குடித்த பின்பும் அந்த பால் பற்களை மென்மையான துணி கொண்டு துடைத்துவிட வேண்டும்.
பால் பற்கள் முளைத்ததும் குழந்தைகளுக்கென விற்கும் மென்மையான டூத் பிரஷ் கொண்டு தினமும் காலை, இரவு என இருவேளையிலும் பல் துலக்கிவிடுங்கள்.
இரவு நேரங்களில் பல குழந்தைகளுக்கு பால் புட்டியை வாயில் வைத்தபடியே தூங்க வைத்துவிடுவார்கள். அதேபுால இரவு முழுக்க குழந்தைகளின் பற்களுக்குள் சாக்லேட், இனிப்பு போன்றவை ஒட்டிக்கொண்டு இருக்கும். இதனால் சிறுவயதிலேயே குழற்தைகளுக்குப் பற்கள் சொத்தை விழ வாய்ப்பு உண்டு.
அதனால் சாப்பிட்டு முடிததவுடன் வாய் கொப்பளித்தல், தண்ணீர் குடித்தல் ஆகியவற்றால் பற்களில் ஒட்டியிருக்கும் உணவுப்பொருளை எளிதில் சுத்தம் செய்துவிட முடியும்.
குழந்தைகளுக்கு 7 முதல் 12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். அதில் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிறு வயதிலேயே அதிகமாக சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றை சாப்பிட்டால் பல் பிரச்னைகள் வரும் என சில பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வார்கள். ஆனால் அவ்வளவு கட்டுப்பாடாக இல்லாமல் அளவாக சாப்பிட வலியுறுத்தலாம். அதேசமயம் சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களாகவே மறக்காமல் வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை மனதில் கொண்டு, பற்களைப் பற்றிய விழிப்புணர்வை பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவது அவசியம்.