Home குழந்தை நலம் சரியாகச் சாப்பிடாத குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக 7 உணவுக் குறிப்புகள்

சரியாகச் சாப்பிடாத குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக 7 உணவுக் குறிப்புகள்

21

குழந்தைகளை ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவைப்பது பெரிய சவலாக இருக்கலாம். இப்போதெல்லாம் நினைத்தவுடன் நொறுக்குத் தீனி ஜங்க் ஃபுட் கிடைக்கிறது, அதுமட்டுமின்றி குழந்தைகள் இதுதான் சாப்பிடுவேன் அதுதான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள், அதுவும் இததற்கு ஒரு காரணம். அவர்களுக்கான உணவு வகைகளில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க, சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அவர்களின் மன ஆரோக்கியத்திலும் மனநிலையிலும் கூட நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். நல்ல உணவுப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தினால் அவர்கள் அதைத் தொடர்ந்து பின்பற்ற வாய்ப்பு அதிகமுள்ளது. குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதே போராட்டம் என்ற நிலையை மாற்ற, இதோ உங்களுக்காக உணவுப் பழக்கம் தொடர்பான 7 குறிப்புகள்.

ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்க வையுங்கள்

தர்ப்பூசணித் துண்டும், சிப்ஸ் பாக்கெட்டும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தால், உங்கள் குழந்தை எதை எடுக்கும் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்! ஆம், சிப்ஸ் பாக்கெட்டைத் தான் எடுப்பார்கள். ஆனால், சிப்ஸ் பாக்கெட்டே இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இந்தப் பிரச்சனை தானாகத் தீர்ந்துவிடும்.அவர்களுக்கு தர்ப்பூசணி பிடிக்கவில்லை என்றால், ரெசிபியில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். சுவையான சாபேயாகவோ (ஐஸ் ஜூஸ் வகை) அல்லது வாட்டர்மேலான் ஸ்மூதியாகவோ செய்துகொடுத்துப் பாருங்கள். ஆரோக்கியமான உணவுப்பொருள் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்

நீங்கள் சீஸ் பர்கரைச் சாப்பிடுவதையும் பானங்களைக் குடிப்பதையும் அவர்கள் பார்த்தால் நீங்கள் அவர்களை ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்த முடியாது, அது பலனளிக்கவும் செய்யாது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது போன்றவற்றை முதலில் நீங்கள் முன்மாதிரியாக இருந்து பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தையும் உங்களைப் பார்த்துப் பின்பற்ற வாய்ப்புகள் அதிகமுள்ளது.இதற்கு கொஞ்ச காலமாகலாம், இருப்பினும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது குடும்பம் முழுவதுமே ஒன்றாகச் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டிய ஒரு விஷயம்.

குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்

குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது உண்மைதான். சாப்பிடும் நேரம், மகிழ்ச்சியாகவும், புன்னகை நிறைந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், நல்லபடியாகப் பேசிக்கொண்டே சாப்பிடுங்கள். சாப்பிடும் நேரம் மகிழ்ச்சியான நேரம் என்று குழந்தைகள் மனதில் பதிந்துவிட்டால் அவர்கள் சாப்பிடுவதை சந்தோஷமாக நினைப்பார்கள். இதனால், அவர்கள் மெதுவாகச் சாப்பிடுவார்கள், தட்டில் வைத்த உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

அவர்களை குட்டி செஃபாக மாற்றுங்கள்

இது எளிதான தத்துவம் தான். உங்கள் குழந்தைகள் உணவைத் தயார் செய்வதில் ஈடுபட்டால், அவர்களுக்கு சாப்பிடுவதிலும் ஆர்வம் வர அதிக வாய்ப்புள்ளது. எப்போதும், நாம் சொல்வதைத்தான் குழந்தைகள் கேட்கவேண்டும் என்ற நிலை இருக்கிறதே என அவர்கள் மனதில் ஆதங்கம் இருக்கும். ஆகவே அவர்களே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யட்டும் என்று விடும்போது, நாமும் முக்கியமானவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு வரும். இது எந்த அளவுக்குப் பலன்கொடுக்கும் என்பது குழந்தைகளின் வயதுக்கேற்ப மாறுபடும். இருப்பினும் சமையல் என்பதை மகிழ்ச்சி நிறைந்த செயலாக மாற்றுவதால் வீட்டிலுள்ள குழந்தைகள் எல்லோருமே சந்தோஷமாக ஈடுபடுவார்கள்.

அவர்கள் அவ்வப்போது விருந்து சாப்பிடட்டும்

எப்போதாவது விருப்பம்போல் விருந்து சாப்பிட்டு மகிழ அவர்களை அனுமதிக்க வேண்டும். மிகக் கண்டிப்பாக இருந்தீர்களானால், உங்கள் குழந்தைகள் எதிர்த்துக் கலகம் செய்ய ஆரம்பித்துவிடலாம். வாரத்திற்கு ஓரிரு முறை அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை விருப்பம்போல சாப்பிட அனுமதித்தால் அவர்கள் மன நிறைவும் சமநிலையில் இருக்கும், எல்லோருக்கும் சந்தோஷமாகவும் இருக்கும்.

பல்வேறு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவும்

பீட்டா ப்ரெட், ஹம்முஸ், சுவையான சட்னி வகைகளுடன் கேரட், பூசணி மஃபின் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் சாப்பிட்டுப் பழக வேண்டும். பார்க்க அழகாக இருக்கும்படி அவர்களுக்குக் கொடுத்தீர்களானால் நிச்சயம் அவர்கள் ஆசையாகச் சாப்பிடுவார்கள்.

வீட்டில் சமைக்கவும்

பெரும்பாலும் குடும்பமாகச் சாப்பிடும்போது வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். வெளியே அடிக்கடி சாப்பிடுவது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள் உடல் எடையும் கூடலாம். வீட்டிலேயே சுவைமிகுந்த உணவு வகைகளைத் தயாரிக்க, உங்கள் சமையல் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்!

சிறு வயதில் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பின்னாளில் அவர்களின் உணவுப் பழக்கத்தைப் பாதிக்கலாம். ஆகவே கூடிய விரைவில் நல்ல உணவுப்பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே.உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.