ஆண்-பெண் இருவரும் திருமணத்திற்குப் பின் பெற்றோர் என்ற நிலையை அடைவதை வாழ்க்கையின் முக்கியமான மாற்றமாக சமுதாயம் கருதுகிறது. எனவே திருமணமான சில மாதங்களிலேயே குழந்தைக்கான எதிர்பார்ப்பும் தம்பதியரிடையே அதிகமாகிவிடுகிறது. குழந்தை இல்லாமல் போனால் சில மாதங்களுக்குப் பின் சமூகத்தின் கேள்விகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அது தம்பதியரிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தை இன்மைக்கான சிகிச்சையில் ஈடுபடும்பொழுது சிகிச்சை குறித்த பயம், அது சரியாக அமையுமோ அமையாதோ போன்ற பயத்தினாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் குழந்தை இன்மை சிகிச்சையின் போது தம்பதியர் மன அழுத்தம் இன்றி இருத்தல் நலம் என்று கூறுகிறார் கருத்தரிப்பு ஆலோசகர் மருத்துவர் மதுப்ரியா. அது குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் இங்கே…
“இன்றைய துரித வாழ்க்கையில், கருவுறுதல் என்பது சமூகத்தின் பல்வேறு தளங்களில் மிக முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. மேலும் இது கருவுறுதலுக்கு உகந்த வயதுகளில் இருக்கும் 10-12% இந்திய ஜோடிகளை பாதிக்கின்றது என கணக்கிடப்பட்டிருக்கிறது.
கருவுற வேண்டுமென பலமுறை முயற்சித்தும், அது நடைபெறாமல் காலம் கடந்து போகும்போது, ஆண் பெண் இருவரிடமும் மனரீதியாக கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும், உளவியல்ரீதியிலான இந்த மனஅழுத்தம், அவர்களது உடலில் ஹார்மோன் குறைபாட்டுக்கு காரணமாகவும் அமைந்து இது அவர்களது கருத்தரிக்கும் திறன் மேலும் பலவீனமாவதற்கு வழிவகுக்கும்.
கருவுறாமை, அதை எதிர் கொள்ளத் தயாராக இல்லாத தம்பதியினரிடையே மன அழுத்தம் மற்றும் சமூக ரீதியாக அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது. கருவுற வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்யும் தம்பதிகள், சோகம், பயம், பதட்டம் அல்லது தங்களது வாழ்க்கையின் மீது ஒரு கட்டுப்பாடு இல்லாதது போல நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.
கருவுறுதலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது அச்சிகிச்சைகளின் வெற்றி விகிதம் நிச்சயமற்றவையாக இருக்கும்போது, தம்பதியினர் தங்களுக்கிடையே உறவு பலவீனமடைந்து வருவது போலவோ, சமூக பாகுபாடு உண்டாகியிருப்பது போலவோ, கருத்தரித்தலுக்கு குடும்பத்தினர் அளிக்கும் நெருக்கடி அதிகரிப்பது போலவோ நினைப்பதனால் உண்டாகும் மனரீதியிலான குழப்பங்களுக்கு மத்தியில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை
குறைந்தது ஒரு குழந்தையை பெற்றிருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்களில், அதிக அளவு மன அழுத்தம் தரும் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைவு, விந்தணு ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியே றுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.
கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துகொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.
மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது?
சிகிச்சை மேற்கொள்ளும் சமயத்தில் மன அழுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டியது மிக முக்கியம். மன அழுத்த அளவைக் குறைக்க உதவும் ஒரு சில ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கருத்தரிப்பின்மையின் தாக்கத்தை தடுக்க முடியும்.
போதுமான தூக்கம்
போதிய தூக்கம் இல்லாதிருத்தல் அல்லது அதீத தூக்கம் இரண்டுமே ஹார்மோனின் சமநிலையைப் பாதிக்கும். இதனால் நாளொன்றுக்கு 7-8 மணிநேர தூக்கம் மிக அவசியம்.
சமநிலை சத்துள்ள உணவுகள்
அதிக அளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் உள்ளிட்ட சமநிலையான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். கலரிங் ஏஜென்டுகள் மற்றும் ப்ரிசர்வேட்டிவ் கலந்த உணவுகள், அதிகப்படியான ஆல்கஹால், ஃபுட் சப்ளிமென்ட்ஸ், ஸ்டீராய்டுகள், செயல்திறன் அதிகரிக்கும் மருந்துகள் முதலியவற்றையும் தவிர்க்கவும்
உடற்பயிற்சி
உடல் பருமன் என்பது மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை சம்பந்தப்பட்ட மோசமான சுழற்சியின் ஒரு பகுதியாகும். அதனால் கருத்தரிப்பிற்கு எடைக்குறைப்பு மிக அவசியம். எனவே தினமும் போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தியானம் மற்றும் யோகா
தினமும் தியானம் செய்யுங்கள். இல்லையென்றால் இன்றிலிருந்து அதற்கான பயிற்சியை ஆரம்பியுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தினமும் யோகா செய்யுங்கள்.
உணர்வுப்பூர்வமான ஆதரவு
மன அழுத்தத்தின் தாக்கம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அதற்கான சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்கை பெற வேண்டியது அவசியம். அதற்கு நண்பர்களிடமிருந்தும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் உணர்வுப்பூர்வமான ஆதரவைப் பெறுவதும் அவர்களுடன் தரமான நல்ல தருணங்களைச் செலவிடுவதும் முக்கியம்.
விருப்பமான செயல்கள்
நமக்கு விருப்பமான செயல்கள் நம் மன அழுத்தத்தை நம்மிடமிருந்து தள்ளி வைக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கும். ஆனால் பயணமே ஒரு பயங்கர அவஸ்தையாக இல்லாமல் பார்த்து கொள்வதும் முக்கியம்.
ஐவிஎஃப் சிகிச்சையின் அழுத்தத்தை சமாளித்தல்
ஐவிஎஃப் சிகிச்சை குறித்த சரியான திட்டமிடல், கருவுறும் வாய்ப்புகளை அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனம் மற்றும் திடமான உடல் ஆகிய இரண்டும் வெற்றிகரமான ஐவிஎஃப் சிகிச்சைகளுக்கு மிக அவசிய தேவையாகும். மனம் மற்றும் உடல்ரீதியாக தயாராவதை சிகிச்சைக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே தொடங்க வேண்டும். கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சையைத் தொடங்கும் முன், ஐவிஎஃப் சிகிச்சை என்றால் என்ன? சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? ஐவிஎஃப் மூலமான கருத்தரிப்பின் வெற்றி விகிதம் எவ்வளவு? என ஐவிஎஃப் தொடர்பான அனைத்து விவரங்களும் சிகிச்சைப் பெறவிருக்கும் தம்பதியினருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
கருத்தரிப்பின்மை சிகிச்சையின் செயல்முறை மற்றும் அதன் வெற்றி விகிதங்கள் பற்றிய முழுமையான புரிதல், சிகிச்சைப் பெறுபவர்களிடம் அச்சிகிச்சை குறித்த பயம் மற்றும் கவலைகளை குறைக்க உதவுகிறது. அதனால் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மன ரீதியாக அவர்களை தயார் செய்ய முறையாக திட்டமிடாமல் அந்த சிகிச்சையை தொடங்கக் கூடாது.
ஐவிஎஃப் மூலம் கருத்தரிப்பது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வு; ஆனால் சிகிச்சை வெற்றிபெறவில்லையெனில் அதனால் ஏமாற்றமடையவோ அல்லது மனச்சோர்வடையவோ கூடாது. சிகிச்சை வெற்றிப்பெறாத ஐவிஎஃப் சிகிச்சையின் பின்னணியை புரிந்துகொள்வது முக்கியம். மேலும் அடுத்த சிகிச்சை என்ன என்ற நேர்மறையான மனோபாவத்துடன் பார்ப்பதும் கூட சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
ஐவிஎஃப் சிகிச்சையின் முன்னும் சுழற்சி நிகழும்போது அதற்கு பின்னும் மேற்கொள்ளப்படும் முறையான மற்றும் திட்டமிடப்பட்ட உளவியல்ரீதியான கலந்தாலோசனைகளின் மூலம் மட்டுமே தம்பதியரின் மனநிலையை சீர்படுத்த முடியும். கருவுறாமையால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கோக்னைட்டிவ் பிஹேவியரல் தெரபி மிகவும் உதவியாக இருக்கும்.
சிறப்பு நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்கள் அளிக்கும் ப்ரோக்ரஸ்ஸிவ் மஸ்ஸில் ரிலாக்சேஷன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை மேம்பாடு ஆகியவை உள்ளடக்கிய ரிலாக்சேஷன் ரெஸ்பான்ஸ் டிரெயினிங் டெக்னிக்குகள் தம்பதியரிடையே மன அழுத்தத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது. ஐவிஎஃப் சிகிச்சை பெறும் ஒவ்வொரு தம்பதியினருக்கும், மன அழுத்தத்திற்கான நிவாரணம் மிகவும் அவசியம்.