Home குழந்தை நலம் குழந்தைகள்முன் உடை மாற்றுவது சரியா?… தவறா?..

குழந்தைகள்முன் உடை மாற்றுவது சரியா?… தவறா?..

29

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது.

குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது.

வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர்.

பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம்.

சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு உடை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும்.

ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை.

ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர்.

இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது.