நியூயார்க்: கருத்தடை சாதனமாக விளங்கும் ஆணுறைக்கு பதிலாக மாற்று வழியை மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பாலுறவு தொடர்பான நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கும் சாதனங்களில் ஆணுறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனினும், இந்த ஆணுறைகளால் முழுமையான பயன் கிடைப்பதில்லை என்றும், அதனை பயன்படுத்தினாலும் 18% கர்ப்பம் உருவாகிவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வின் இறுதியில், புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கினர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதனை முயல்களுக்கு கொடுத்து சோதனையிட்டு போது, மருந்து வெற்றிகரமாக செயல்பட்டதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது. இதனால் அந்த ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாத நிலை உண்டாகும். இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு ஓராண்டு வரை நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய பேராசிரியர் ரொனால்ட் கூறும்போது, இதை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம். முயல்களுக்கு கொடுத்து பரிசோதித்த போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயனை கொடுத்தது என்றார்.