ஒரு பெண், ஆணோடு பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நல்ல நட்பாகவும் இருக்கலாம்.
ஆனால் அந்த நட்பின் இலக்கணம் தெரிந்தவர்களுடன், எல்லை மீறல் நடக்காத வகையில் பழக வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் நட்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பழகிவிட்டு, தன்னைத்தானே ஆபத்தில் சிக்கவைத்துக்கொள்கிறது.
வேலைக்காக வெளியே செல்லும் பெண்கள் இது போன்ற நட்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நட்பு என்பது எதுவரை என்ற எல்லைக் கோட்டை அவர்கள்தான் வகுக்க வேண்டும். நட்பு என்ற பெயரில் சுற்றித் திரிந்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் விடுதிக்கு திரும்புவது கூடாது. நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் கண்விழித்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
சுற்றி நின்று பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகவும், விவகாரமாகவும் ஆகும் அளவுக்கு நட்பு வைக்கக் கூடாது. இப்படிப்பட்ட நட்பைப் பற்றி, நமக்கு பின்னால் மற்றவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுயநலத்திற்காக ஆழமாக பழகிவிட்டு இது வெறும் நட்புதான் என்று சொல்லிவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதுதான் ஆண்களின் மனதை அதிகம் பாதிக்கச் செய்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகாத சம்பவங்களுக்கு இதுவும் ஒருவகையில் மூல காரணமாகி விடுகிறது.
எப்படிப் பார்த்தாலும் இந்த வகை நட்பு வாழ்க்கையில் எந்த பலனையும் தராது. சலசலப்பு வந்ததும் துண்டித்துக் கொள்ளும் இந்த நட்பு ஒரு சந்தர்ப்பவாத நட்பு. நல்ல புரிதல் இல்லாத நட்பு, தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல நட்பு என்பது ஆபத்தில் உதவுவது, ஆனந்தம் தருவது, மற்றவர் கவுரவத்தை காப்பது போன்றவைதான்.
ஆனால் மனதில் உள்ளதை மறைத்து, ஆசையைத் தூண்டி வளர்க்கும் நட்பு கடைசியில் கற்பையும், உயிரையும் பலிவாங்கி விடுவது உண்டு. நம்மை காத்துக் கொள்ள நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். பெண்கள் ஆண்களை அலைக்கழிப்பதும், ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதும் ஒரு சமூக சீர்கேடு. நட்பு என்ற உன்னத உறவு சமூகத்திற்கு அவசியம். நட்பு என்ற போர்வையில் போலிநட்பு கூடாது. அது அவமானங்களையும், அபத்தங்களையுமே தேடித்தரும்.
மொத்தத்தில் நட்பு என்பது இனிக்கும் உறவு, எல்லை மீறும் கட்டத்தில் அது கசந்துவிடுகிறது.