கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா தவறா என்பதைப் பற்றி எப்போதும் பலவிதமான கருத்துகளும் விவாதங்களும் இருந்துவருகின்றன.ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், இயல்பாக ஒரு கேள்வி எழும். “கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?” என்பதுதான் அந்தக் கேள்வி.
பதில் இதுதான், கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் எவ்வளவு அடிக்கடி வைத்துக்கொள்ளலாம் என்பது கருவின் வயதுக்கேற்ப மாறும், பொதுவாக கருவின் வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த உடலுறவின் இடைவெளி அதிகரிக்க வேண்டும்.
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதா?
கர்ப்பம் இயல்பாக இருக்கும்பட்சத்தில், கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதுதான். குறைப்பிரசவ ஆபத்து உள்ளவர்கள் அல்லது பிளாசெண்டா பரீவியா (நஞ்சுக்கொடி கருப்பையின் அடிப்புறத்தில் பதிந்திருத்தல்) சிக்கலின் காரணத்தால் பெரிநாட்டல் (குழந்தை பிறப்பிற்கு சமீப முந்தைய காலம் மற்றும் பிறந்த பிறகுள்ள சமீப காலத்தில் ஏற்படும்) இரத்தப்போக்கு போன்ற ஆபத்து உள்ளவர்கள் கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதல்ல.
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் ஏற்படுமா?
பல தம்பதிகள் கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் ஏற்படுமோ என்று கவலைப்படுவதுண்டு, ஆபத்துகள் குறைவான கர்ப்பமாக இருந்தால், அவர்கள் உடலுறவில் ஈடுபடலாம்.
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குழந்தைக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுமா?
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குழந்தைக்கு தீங்கு எதுவும் ஏற்படாது. குழந்தை கருப்பைக்குள் பாதுகாப்பாக வளருகிறது, அதனைச் சுற்றி பனிக்குட நீர் சூழ்ந்துள்ளது, அது வளரும் குழந்தைக்கு ஒரு குஷன் போல செயல்பட்டு பாதுகாக்கிறது.
கர்ப்பத்தின்போது உடலுறவில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?
கர்ப்பத்தின்போது உடலுறவில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படலாம் என்று பெரும்பாலான தம்பதிகள் கவலைப்பட்டாலும், அதற்கு உண்மையான காரணம் உடலுறவல்ல. கருச்சிதைவுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது சரியாக கரு வளராமல் இருப்பதே.
கர்ப்பத்தின்போது உடலுறவில் ஈடுபட நல்ல உடல் நிலையமைப்புகள் (பொசிஷன்) எவை?
உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் எந்த உடல் நிலையமைப்பும் நல்லதே. பக்கவாட்டில் படுத்துக்கொள்வது, துணையின் மேல் படுத்துக்கொள்வது அல்லது வேறு நிலைகளிலும் உடலுறவு கொள்ளலாம், அது இருவருக்கும் சவுகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை என்றால்?
நல்லது! உங்கள் துணைவருடன் இதுபற்றிப் பேசுங்கள், உங்கள் உணர்வுகளையும் தேவையையும் அவருக்குச் சொல்லுங்கள்.அன்பையும் பாசத்தையும் பிற வழிகளிலும் வெளிப்படுத்த முடியும்! குமட்டல், ஆர்வமின்மை, களைப்பு, உடலில் அசவுகரியம் அல்லது சோர்வின் காரணமாக உடலுறவில் ஈடுபடும் விருப்பம் குறையலாம்.
குழந்தை பிறந்து எவ்வளவு நாட்களுக்குப் பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?
குழந்தை பிறந்தபிறகு பெண்ணின் உடல் எந்த அளவுக்கு சவுகரியமாக உள்ளது மற்றும் எந்த அளவுக்கு குணமடைந்து மீண்டுள்ளது என்பதைப் பொறுத்து தகுந்த நாட்களுக்குப் பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும், அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்திருந்தால் அல்லது இயல்பான பிரசவத்தில் குழந்தை பிறந்திருந்தால், குழந்தை பிறந்த 4-6 வாரத்தில் அல்லது மருத்துவர் அறிவுரைக்கும் கால இடைவெளிக்குப் பிறகு உடலுறவில் மீண்டும் ஈடுபடத் தொடங்கலாம். இந்தக் கால இடைவெளி, பெண்ணின் உடலில் ஏற்பட்ட கிழிசல் காயங்கள் ஆறவும், கருப்பை வாய் மூடவும் பிறப்புக்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால் அது நிற்கவும் போதுமான அவகாசமளிக்கும். உடலுறவுக்குத் தயாரானதும் தகுந்த கருத்தடை முறையைப் பின்பற்றவும்.
பின்வரும் சூழ்நிலைகளில் கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வது பாதுகாப்பல்ல:
பின்வரும் சூழ்நிலைகளில் கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம்:
இதற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், அல்லது கருச்சிதைவுக்கான அபாயம் இருந்தால்
இதற்கு முன்பு குறைப்பிரசவம் நடந்திருந்தால்
பிறப்புறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக இரத்தப்போக்கு ஏற்பட்டால், பிடிப்பு வலி இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் திரவங்கள் வெளியேறினால்
பனிக்குட நீர் கசிந்தால்
பிளாசெண்டா பரீவியா: நஞ்சுக்கொடி கருப்பையின் அடிப்புறத்தில் பதிந்திருந்து கருப்பை வாய்ப்பகுதியை மூடியிருத்தல்
ஒரே கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்
கிளாமிடியா, அக்கி (ஹெர்ப்ஸ்), HIV போன்ற பால்வினை நோய்கள் இருப்பது தெரியவந்தால்
சிலசமயம் மருத்துவர்கள் கர்ப்பகாலத்தின்போது வாய்வழி பாலுறவு அல்லது குதவழி பாலுறவைத் தவிர்க்குமாறு கூறலாம். வாய்வழிப் புணர்ச்சியின் போது, பெண்ணுறுப்பில் ஆண் காற்றை ஊதுவதால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படலாம், அது தாய் மற்றும் சேயின் உயிருக்கே ஆபத்தாகலாம். பெண்ணுக்கு, கர்ப்பத்தின்போது உண்டாகும் மூல நோய் இருந்தால், குதவழி பாலுறவு சிரமமாக இருக்கலாம்.
எச்சரிக்கை
கர்ப்பத்தின் போது உடலுறவு கொள்வது பற்றி உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகவும்.கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும்போது, வழக்கத்திற்கு மாறான வலி, பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுதல் அல்லது இரத்தம் கசிதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறவும்