Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளை கலங்கடிக்கும் கருச்சிதைவு- கருவை காத்துக்கொள்ளும் எளிய வழிமுறைகள்

கர்ப்பிணிகளை கலங்கடிக்கும் கருச்சிதைவு- கருவை காத்துக்கொள்ளும் எளிய வழிமுறைகள்

76

இன்றைய அவசரகதி உலகத்தில் கருவுரும் தாய்மார்களில் இரண்டில் ஒருவருக்கு கருச்சிதைவு எனும் அவலம் நேர்ந்துவிடுகிறது. ஆசைஆசையாக கருத்தரித்து அழகிய குழந்தை பெற்றெடுக்கும் கனவில் இருக்கும் இளம்பெண்களின் கனவு கருவுற்ற சில வாரங்களில் தகர்ந்துவிடுகிறது.

கருச்சிதைவு நிகழ்வதற்கு முன்பாக தோன்றும் சில அறிகுறிகளை அறிந்துவைத்துக் கொண்டால் கருச்சிதைவை தடுக்கலாம் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருவுற்று 20 வாரங்களுக்குள் ஏதோவொரு காரணத்துக்காக கர்ப்பபைக்குள் இருக்கும் கரு தானாகவே கலைந்துவிடுவதுதான் கருச்சிதைவு ஆகும். இதில் ஆபார்ஷன் அடங்காது.

சில பெண்களுக்கு தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பது தெரிவதற்கு முன்பேயும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடக்கூடும் என்று சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில், கருவுற்றது தெரிந்தபிறகு சுமார் 15 முதல் 25 சதவீதப் பெண்களுக்கு கருச்சிதைவு நிகழ்ந்து விடுகிறது.

80 சதவீத கருச்சிதைவு கருவுற்ற முதல் 3 மாதங்களுக்குள் நிகழ்வதால் அந்த சமயங்களில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பொதுவாக 20 வாரங்கள் நிறைவடைந்த பிறகு கருச்சிதைவு ஏற்படுவது அரிது என்றாலும் அவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.

கருச்சிதைவுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
அவை:

பெண்ணுறுப்பில் பொட்டுப்பொட்டாக ரத்தக்கசிவில் தொடங்கக்கூடும்.

தொடர்ந்து ரத்தக்கசிவு அதிகரிக்கும்.

கடுமையான தசைப்பிடிப்பு, கால் தசை பிடிப்பு

அடிவயிற்றில் வலி

காய்ச்சல்

சோர்வு, அயர்ச்சி, ஆயாசமாக வருதல், சக்தியே இல்லாதது போல உணர்தல்

முதுகு வலி

மேலே கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உஷாராகி உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும். அவசர சிகிச்சை அவசியம்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

பரம்பரை மரபணுக் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு நிகழக்கூடும். இந்த வகை கருச்சிதைவுக்கு தாயை பழி சொல்லக்கூடாது.

இதுதவிர வேறுகாரணங்களாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. அவை:
நோய்த்தொற்று

கர்ப்பிணித் தாய்க்கு இருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு,

தைராய்டு பிரச்னை

நாளச்சுரப்பி எனப்படும் ஹார்மோன் கோளாறு

நோய் எதிர்ப்புத்தன்மை குறைபாடுகள்

தாயின் பிற உடலியல் சார்ந்த பிரச்னைகள்

சிறுநீர்ப்பை கோளாறுகள்

ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

இது தவிர,

35 வயதை கடந்த கர்ப்பிணிகள் நீரிழிவு, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மூன்று முறை அல்லது அதற்கு மேல் கருச்சிதைவுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

வலுவற்ற கர்ப்பப்பையினால் கருவை தாங்க முடியாது போகலாம். இந்தப் பிரச்னை உடையவர்களுக்கு பெரும்பாலும் 4-6 மாத காலத்தில் கருச்சிதைவு நிகழ வாய்ப்பு உண்டு.

வலுவிழந்த கர்ப்பப்பை உள்ள கர்ப்பிணிகளுக்கு உடலில் திடீரென ஓர் அழுத்தம் உண்டாகி பனிக்குடம் உடைந்து கருச்சிதைவு நிகழக்கூடும்.

இதுபோன்ற பிரச்னையை சந்தித்த தாய்மார்களுக்கு அவர்கள் மீண்டும் கருவுறும்நிலையில் கர்ப்பப்பையின் வாயை தையல் மூலம் மகப்பேறு நல மருத்துவர் மூடிவிடுவர்.

இதனால் கர்ப்பப்பையில் இருக்கும் கரு பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக கருவுற்ற 3 மாதத்துக்குப் பிறகே இந்த நடைமுறையை மருத்துவர்கள் மேற்கொள்வர்

பிரசவ நேரத்தில் அந்தத் தையலை மருத்துவர்கள் பிரித்து பிரசவம் பார்ப்பார்கள்.

வருமுன் காப்போம் என்று சொல்வது போல கருச்சிதைவு அறிகுறிகளை தாய்மார்கள் அறிந்து கொண்டிருந்தாலே போதும் சுகப்பிரசவத்திலேயே முடியும் உங்கள் விருப்பம்!