Home பாலியல் சிறப்பாகப் பலனளிக்கும் விதத்தில் ஆணுறைகளைப் பயன்படுத்துவது எப்படி

சிறப்பாகப் பலனளிக்கும் விதத்தில் ஆணுறைகளைப் பயன்படுத்துவது எப்படி

44

கருத்தடை உறை என்பது விந்து கரு முட்டையை (சினை முட்டை) அடையாமல் தடுக்க உதவும் கருத்தடை சாதனமாகும். பால்வினை நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்கவும் இவை பயன்படுகின்றன. ஆண்கள் ஆணுறுப்பில் அணிந்துகொள்ளும் ஆணுறைகள், பெண்கள் பிறப்புறுப்பிற்குள் அணிந்துகொள்ளும் பெண்ணுறைகள் என்று இரண்டு வகையான கருத்தடை உறைகள் உள்ளன.

ஆணுறை என்பது என்ன? (What is the male condom?)

ஆணுறுப்பின் மீது அணிந்துகொள்ளப்படும் மெல்லிய உறையே ஆணுறை. இது பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் விந்து செல்லாமல் தடுக்குகிறது. பொதுவாக விற்கப்படும் ஆணுறைகள் லேட்டக்ஸ் இரப்பரால் செய்யப்பட்டவை. லேட்டக்சால் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும் நபர்கள் பாலியூரித்தேனால் தயாரிக்கப்படும் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்.

இயல்பான உடலுறவின்போது, ஆணுறையை முறையாகப் பயன்படுத்தினால், அது கர்ப்பத்தையும் பால் வினை நோய்த்தொற்றுகளையும் தடுக்க உதவும். வாய்வழிப் புணர்ச்சி அல்லது குதவழிப் புணர்ச்சியின் போது ஆணுறையை சரியாகப் பயன்படுத்துவது பால்வினை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.

வழவழப்புப் பொருள் சேர்க்கப்பட்ட ஆணுறைகளும் கிடைக்கின்றன அவை இல்லாமலும் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பினால் சௌகரியத்திற்காக, ஆணுறையில் நீரை அடிப்படை உருவாக்கப் பொருளாகக் கொணடு தயாரிக்கப்பட்ட வழவழப்புப் பொருள்கள்களைப் பயன்படுத்தலாம், ஆனால் எண்ணெய், வாசலின் அல்லது பாடி லோஷன் போன்றவை ஆணுறைகளை பலவீனமாக்கி கிழியச் செய்யலாம் என்பதால், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

ஆணுறைகளின் செயல்திறன் (Effectiveness of male condoms)

சரியான முறையிலும், தொடர்ச்சியாகவும் ஆணுறைகளைப் பயன்படுத்தி வந்தால், அவை 98% பலனளிப்பவையாக இருக்கும், அதாவது ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தியும், ஒரு வருடத்திற்கு, 100 பேரில் 2 பெண்கள் மட்டுமே கர்ப்பமடைவார்கள். தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், சரியான முறையில் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு வருடத்தில் 18 பேர் கர்ப்பமடைவார்கள்.

ஆணுறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? (How to use a male condom?)

ஆணுறையின் பேக் கிழியாமல், திறக்காமல் உள்ளதா என்றும், காலாவதி தேதி முடியாமல் உள்ளதா என்றும் பார்க்கவும்.
பேக்கின் மீது குறிக்கப்பட்டுள்ள ஓரத்தில் கிழித்து, ஆணுறையை கவனமாக வெளியே எடுக்கவும். பேக்கை பற்களால் கடித்தோ, கூரான பொருள்களைக் கொண்டோ கிழித்துப் பிரிக்க வேண்டாம், கொஞ்சம் கவனமாக இல்லாமல் போனால், ஆணுறையில் துளைகள் ஏற்படலாம்.
ஆண்குறி விறைத்த பிறகு, பெண்ணுடலில் ஆண்குறியை வைக்கும் முன்பே ஆணுறையை அணியவும். ஏனெனில் உடலுறவின் ஆரம்பத்தில் ஆண் குறியில் இருந்து வெளியேறும் திரவங்கள் கர்ப்பமடையச் செய்யலாம், பால்வினை நோய்த்தொற்றுகளை உண்டாக்கலாம்.
ஆணுறையின் வட்ட வடிவ விளிம்பை விறைத்த ஆண்குறியின் முனைக்கு மேல் வைக்கவும்.
ஆணுறையின் முனையை (முலை போல் நீண்டிருக்கும் பகுதி) கட்டைவிரலாலும் இன்னொரு விரலாலும் பிடித்து அழுத்தி, அதிலுள்ள காற்றை வெளியேற்றவும்.
ஆணுறையின் முனையைப் பிடித்த படியே, இன்னொரு கையால் அதனை ஆண் குறியின் அடிப்பகுதி வரை முழு நீளத்திற்கும் பிரித்துவிட்டு மூடவும்.
உடலுறவின்போது ஆணுறை சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும்.
விந்து வெளியேறிய பிறகு, ஆண்குறி விறைப்பு நீங்கி தளரும் முன்பே ஆண்குறியை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுக்கவும். ஆண்குறியை வெளியே எடுத்த பிறகே ஆணுறையை ஆண்குறியில் இருந்து கழற்ற வேண்டும்.
ஆண் குறியோ, பயன்படுத்திய ஆணுறையோ பெண்ணுறுப்பில் இருந்து தள்ளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பெண்ணின் மீது விந்து படாமல் கவனமாக இருக்கவும்.
ஆணுறையை கவனமாக சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தவும்.
மீண்டும் உடலுறவில் ஈடுபட்டால், புதிய ஆணுறையைப் பயன்படுத்தவும்.
உடலுறவின்போது ஆணுறை நழுவிக் கழன்றுவிட்டால், உடலுறவில் தொடர்ந்து ஈடுபடும் முன்பு, புதிய ஆணுறையை அணிந்துகொள்ளவும் (இந்நிலையில் உடலுறவுக்குப் பிறகு 72 மணி நேரத்திற்குள், பெண் மருத்துவரைச் சந்தித்து அவசரநிலை கருத்தடை பற்றி ஆலோசனை பெற வேண்டும் (24 மணி நேரத்திற்குள் சந்திப்பது நல்லது).
ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகள் (Advantages of male condoms)

மருத்துவர் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எளிதில் கிடைக்கும், யாரும் கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ள முடியும்.
எளிதாகப் பயன்படுத்தலாம், பாதுகாப்பானது.
இயல்பான உடலுறவுக்கும், வாய்வழி அல்லது குதவழி உடலுறவுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
சரியாகவும் தொடர்ச்சியாகவும் ஆணுறைகளைப் பயன்படுத்தினால், கர்ப்பத்தைத் தடுப்பதில் இவை அதிக பலனளிப்பவையாக உள்ளன.
லேட்டக்ஸ் மற்றும் பாலியூரித்தேனால் தயாரிக்கப்பட்ட ஆணுறைகள் பால்வினை நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுத்துப் பாதுகாக்கின்றன.
ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் (Disadvantages of male condoms)

சிலர் ஆணுறையைப் பயன்படுத்துவது உடலுறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
உடலுறவின்போது இன்பத்தையும், உணர்வையும் ஆணுறைகள் குறைப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.
சிலருக்கு லேட்டக்ஸ் ஒவ்வாமை இருப்பதுண்டு. அவர்கள் பாலியூரித்தேன் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்.
விந்து வெளியேறிய பிறகு, ஆண்குறி விறைப்பு குறைந்து தளர்வதற்கு முன்பே, பெண்ணுறுப்பில் இருந்து ஆண்குறியை ஆணுறையுடன் சேர்த்து வெளியே எடுக்க வேண்டும்.
ஆணுறைகளை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அவை நழுவிக் கழன்றுவிடலாம் அல்லது கிழிந்துவிடலாம்.