கணவன் மனைவி சண்டை திருமண உறவைப் பலப்படுத்தும் என்று சிலர் சொல்லுகின்றனர். அதாவது அவர்கள் சண்டையிடும் போது அவர்களின் மனதில் உள்ளவற்றை கொட்டி விடுவதால் அவர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு எளிதில் வந்து விட முடியும் என்பது அவர்களின் வாதம். சண்டை போடாமல் மனதிற்குள்ளேயே வைத்து இருந்தால் அது ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்பது அவர்களின் கருத்து. சிறு சிறு சண்டைகளாக இருந்தால் அது சரியாக வரும். பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது. மாறாக உறவை பெரிதும் பலவீனப்படுத்தி விடும் என்பது தான் உண்மை.
என்னைப் பொறுத்த மட்டில், கணவன் மனைவி இடையே சண்டையே வரக் கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? ரொம்ப எளிது. கணவனுக்கு மனைவிக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்று நன்றாகத் தெரியும். அதே போல் தான் மனைவிக்கும் கணவனுக்கு பிடித்தவை என்னென்ன பிடிக்காதவை என்னென்ன என்பது நன்றாகவேத் தெரியும். கணவன் மனைவிக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். பிடிக்காதவற்றை செய்யவே கூடாது. அதே போல் தான் மனைவியும் கணவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்ய வேண்டும். பிடிக்காதவைகளை செய்யக் கூடாது.
பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ, ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக் கூடாது.
இது பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றினாலும் நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல என்பது நிஜம். எந்த ஒரு வெற்றிக்கும் அல்லது சந்தோஷத்திற்கும் நாம் உழைத்தாக வேண்டும் அல்லவா? உங்களுக்கு உண்மையில் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு உயிருக்குயிராய் வாழ வேண்டும் என்று நினைத்தால் அதற்காக கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும்.
பிரச்சினை என்னவென்றால் எல்லோரும் தாங்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு மட்டும் தன் துணை எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேராசைப்படுவது தான்.
அப்படி கொஞ்சம் விட்டுக் கொடுத்து மட்டும் வாழப்பழகி விட்டால் வாழ்க்கை சொர்க்கமாகிப் போகும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. எப்படிபட்ட துன்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவர்களால் அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். எந்த நிலையிலும் அவர்களால் சந்தோஷமாக வாழ முடியும். அன்று தான் கல்யாணம் ஆனது போல் அன்னியோன்யமாக என்றும் வாழ முடியும்.