எவ்வித உறவானாலும் மற்றவர் மனம் புன்படும் படி நடந்து கொண்டால், நிச்சயம் அந்த உறவு சில காலத்திலேயே முறிந்து விடும். எப்போதும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, அன்பை பரிமாறி கொண்டால் தான் உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக நீடிக்கும்.
அவ்வாறு பெண்களை கடுப்படிக்கும் சிலவற்றை பற்றி இங்கு கெரிந்து கொள்ளுங்கள். இவற்றை தெரிந்து கொண்டு பெண் மனதை கடுப்படிக்காமல் பார்த்து கொண்டு உறவை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்..
* பெண்களுக்குரிய பொதுவான ஆசையும் ஒன்றே ஒன்றுதான். ‘காதலன் தன் மீது பிரியமாக இருக்க வேண்டும். காதல் ஒருபோதும் குறையாதிருக்கவேண்டும்’! நினைத்த நேரமெல்லாம் சந்திப்பு நிகழாவிட்டாலும், சந்திக்கிற நேரத்தில் அன்பைப் பொழிந்தாலே காதலிகள் சொக்கித்தான் போவார்கள்.
* ஆனால் காதலியை அருகில் வைத்துக் கொண்டு அடுத்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், சம்பந்தமில்லாமல் எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தாலும், போனை நோண்டிக் கொண்டிருந்தாலும் காதலி கடுப்பாகிவிடுவாள். செல்லக் கோபமாக வெளிப்படும் அதிருப்தி, சண்டையில் முடியவும் வாய்ப்பு உண்டு என்பதால் காதலிக்கான நேரத்தில் மற்றவற்றை கைவிடுங்கள்.
* காதலர்கள் மனந்திறந்து வெளிப்படையாக பேசவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால் காதலிகள் உங்கள் கவலைகளையும், தேவையற்ற எண்ணங்களையும் கொட்டும் குப்பைத் தொட்டிகளல்ல. சந்திக்கும் நேரங்களில் எல்லாம் தன்னுடைய கவலைகளையும், துயரங்களையும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இது சந்திப்பை மகிழ்ச்சியற்றதாக்குவதோடு, உங்களைப் பற்றியும் தவறாக எண்ண வைத்துவிடும். எனவே தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வதையும், ஆறுதல், அறிவுரை சொல்வதையும் கைவிடுங்கள். பெண்கள் நிஜத்தில் ஆண்களைவிட வலிமையானவர்கள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
* பெண்களுக்கு எளிதாக கோபத்தை தூண்டக்கூடியது, கேள்வி கேட்டு பதிலை பிடுங்கும் செயல். ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு காதலி சொல்லும் பதிலுக்கு செவி சாய்க்காமல் இருந்தால் அவள் உங்களைவிட்டு விலகுவதை தவிர்க்க முடியாது. எனவே அவள் பேசுவதை கவனிப்பது முக்கியமானது. காதலி சொல்வதை கூர்ந்து கவனித்து, பொறுப்பாக அவள் முகம் பார்த்து பேசினால் அவளது அன்பு மழையில் நனைந்திடலாம்.
* புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் புகழும்போது மற்றவரை ஒப்பிட்டு புகழ்வது பெண்களுக்குப் பிடிக்காது. குறிப்பாக ‘என் அம்மாவைப் போலவே நீ…’ அப்படியென்று தொடங்கினால் அது அவர்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும். உங்கள் வாழ்வில் அம்மா மிக உன்னதமானவராகவும், முக்கியமானவராகவும் இருக்கலாம். ஆனால் காதலியைப் பொருத்தவரையில் ஒரு ஆண் தனக்கே தனிஉரிமை தர வேண்டும் என்று விரும்புவாள். எனவே அவளிடம் அடிக்கடி ‘என் அம்மாவைப்போல’ என்ற புகழ்ச்சியையும், ஒப்பீட்டையும் செய்ய வேண்டாம். மாமியார், மருமகள் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட இதுபோன்ற ஒப்பிடல் கோபத்தையே வரவழைக்கும்.
* அன்புக்கு அடிமையாகிவிடுபவர்கள் பெண்கள். அதற்காக காதலி தும்மினாலும், இருமினாலும் துடித்துப்போய்விடுவதுபோல் அவளை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அது பெண்களுக்கு எரிச்சலை உருவாக்கி, நம்பகத்தன்மையை குறைத்து விடும். காதலி மீது அன்பையும், அக்கறையும் காட்ட வேண்டுமென்றால் அது அவளது கனவுக்கு துணை நிற்பதும், கலங்கி நிற்கும்போது அரவணைப்பதுமே ஆகும்.