உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவானாலும் பருவநிலை மாற்றங்களாலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோம். அப்படி காய்ச்சலால் அவதிப்படும்போது, வாய், நாக்கு எதுவுமே சாப்பிட முடியாமல் கசப்பாக இருப்பது போல் உணர்வோம். ஆனால் சில உணவுகளை காய்ச்சலாக இருந்தாலும் தாராளமாக சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
காய்ச்சல் நம்மை பாடாய்படுத்தும் போது சிலர் வெறும் கஞ்சி, ரசம் மட்டுமே சாப்பிடுவார்கள். வேறு ஏதேனும் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகரிக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால் சில உணவுகளை காய்ச்சல் அதிகமாக இருக்கும் வேளைகளிலும்கூட சாப்பிடலாம்.
ஆரஞ்சு, கொய்யாப்பழம், எலுமிச்சை போன்ற பழங்களை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றிலுள்ள வைட்டமின் சி நோய்த்தொற்றுகள் உண்டாகாமல் காக்கும்.
காய்ச்சலின் போது, வாய் சற்று புளிப்பாகவும் காரமாகவும் இருக்கும் உணவுகளை ருசிக்க நினைக்கும். அதனால் ஒரு கப் சிக்கன் சூப் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான புரதம் அதில் கிடைப்பதால் நோயெதிர்ப்பு ஆற்றலையும் அது அதிகரிக்கச் செய்யும்.
தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை தாராளமாக சாப்பிடலாம். சிலர் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பார்கள். அது முற்றிலும் தவறான கருத்து.
இஞ்சி மற்றும் பூண்டு அதிகமாக சேர்த்துக் கொண்டால் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். அது மிக வேகமாக காய்ச்சலைக் குணப்படுத்தும்.
காய்ச்சல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது, வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம்.
பசலைக்கீரையில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்சிடண்ட் உள்ளது. அது வைரஸ் காய்ச்சலை மிக விரைவாக குணப்படுத்தும்.
பருப்பு மற்றும் காய்கறிகள், அரிசி ஆகியவை சேர்த்து செய்யப்படும் கிச்சடி, பருப்பு சாதம் ஆகியவற்றை காய்ச்சல் உண்டான சமயங்களில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.