Home ஆரோக்கியம் காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

34

உடல் உறுப்புகளில் அனைத்தும் முக்கியமானது என்றாலும் கழுத்துக்கு மேல் இருக்கும் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் வலியோ, வேதனையோ ஏற்பட்டால் அதை ஒருவர் பொறுத்துக்கொள்வது எளிதானது அல்ல. இவற்றிற்கு உடனடியாக சிகிச்சை செய்து நோயை குணப்படுத்த வேண்டும். ஆயுர்வேதத்தில் மூக்கு துவாரங்களின் வழியாக மருந்துகளை உள்ளே செலுத்துவதற்கு நஸ்யம் என்று பெயர்.

இதை நாவனம் என்றும், நஸ்ய கர்மம் எனவும் அழைப்பார்கள். கண், காது, மூக்கு, வாய், தொண்டை, பற்கள் மற்றும் மூளை நோய்களுக்கு இது முக்கிய சிகிச்சையாக கருதப்படுகிறது. நோயை தடுப்பதற்கும், பிராணனின் உள்வெளிப் பயணத்தை அல்லது இயக்கத்தைச் சீரமைப்பதற்கும் அனு தைலம் என்கிற மருந்தைத் தினமும் நஸ்யமாகச்செய்ய வேண்டும். இதனை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

நஸ்யத்தின் வகைகள் :

நஸ்யத்தின் வகைகளில் முதலாவது சொல்லப்படுவது விரேசன நஸ்யம். இது தலையில் அசுத்தமாகச் சேர்ந்திருக்கிற கபத்தை வெளியேற்றுவதாகும்.
அடுத்து பிரும்ஹண நஸ்யம்.

இது கழுத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் அல்லது மற்ற பகுதிகளில் உள்ள வாயுவின் சீர்கேட்டை மாற்றி பலத்தை அளிக்கிற சிகிச்சையாகும். சமனம் என்பதற்கு பித்தத்தை சீர் படுத்தச் செய்கிற சிகிச்சை என பொருள். விரேசன நஸ்யம் பொதுவாக கபம் சார்ந்த நோய்களுக்கு அளிக்கப்படுகிறது. மூக்கடைப்பு, மூளையில் நீர், பீனஸ நோய், கழுத்துப் பிடிமானம், காக்காய் வலிப்பு, மணம் அறிய இயலாமை, குரல்வளை நோய் போன்றவற்றிற்கும் விரேசன நஸ்யம் செய்யப்படுகிறது.

இதனை செய்தவற்கு சூரணங்கள், கஷாயங்கள், இலைகளின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மூக்கில் ரத்தம் வடிந்தால் ஆடாதோடாவின் இலைச் சாறும், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் மயக்க நிலைக்குத் தும்பைச் சாறும், மூக்கில் ஏற்படும் கட்டிகளுக்கு வெற்றிலைச் சாறு அல்லது நாயுருவி தைலயமும் பயன்படுத்தப்படுகின்றன.

மூக்குப்பொடியை வைத்து நஸ்யம் செய்தால், இதைப் பிரதமன நஸ்யம் என்பார்கள். இங்குத் திரிகடுகு, ராஸ்னாதி போன்ற சூர்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அதிநித்திரை எனும் அதிகமான தூக்கம் உண்டாகும் நிலை, கபம் சார்ந்த மனநோய்கள், தலையில் ஏற்படுகிற கிருமிகள், விஷத்தால் ஏற்படும் பாதிப்பு, நினைவின்மை போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது.

சாறுகளை வைத்து செய்கின்ற நஸ்யத்துக்கு அவபீடக நஸ்யம் என்று பெயர். துளசிச்சாறு, தும்பைச் சாறு போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சில சந்தர்ப்பங்களில் உப்புத் தூளைக் கொண்டோ, தேனைக் கொண்டோ நஸ்யம் செய்யலாம். பிரும்ஹண நஸ்யம் பொதுவாக வாத நோய்களுக்குச் செய்யப்படுகிறது. அர்தாவ பேதம், சூர்யாவர்தம் எனும் மைக்ரேன் வகைத் தலைவலிகள், கண் இமைகள் பலவீனமாகும் நோய், காதில் முழக்கம் கேட்கும் கர்ண நாதம், செவித்திறன் குறைவு, பக்கவாதத்தால் ஏற்படும் பேச்சுத்திறன் குறைவது, உறக்கமின்றி அவதிப்படுதல், கழுத்தெலும்பு தேய்மானம், நடுக்கவாதம் போன்றவற்றிற்கு பிரும்ஹண நஸ்யம் செய்யப்படுகிறது.

இதற்கு குறுந்தட்டி வேர், பால் சேர்ந்த ஷீரபலா தைலம், ஸஹசராதி தைலம், பால், மாம்ஸ ரஸம், கல்யாணககிருதம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

சமன நஸ்யம் :

சமன நஸ்யம் பித்தத்துக்குச் செய்யப்படுகிறது. முடி சார்ந்த நோய்கள், முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகள், மூக்கிலிருந்து வரும் ரத்தப் போக்கு போன்றவற்றுக்கு சமன நஸ்யம் செய்யப்படுகிறது. இதற்கு அனுத் தைலம், பால் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அனுத் தைலம் ஆயுர்வேத மருந்துவர்களால் நஸ்யத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். இதைத் தினமும் பயன்படுத்தலாம். நல்லெண்ணை, வெள்ளாட்டின் பால், கங்கோதகம் எனும் மழை நீர் மற்றும் பல மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்டது. இது முக்குற்றங்களைத் தணிப்பதாக இருந்தாலும், பித்தச் சமனம் எனும் குணமுடையது.

ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் இரண்டு துளிவீதம் இதனை ஒவ்வொரு மூக்கிலும் உள் செலுத்தலாம். இதற்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் நோயை குணமாக்கும் ஆற்றல் சற்று குறைவாகவே உள்ளது. பலரும் இதைப்பற்றி அறியாமல் நீர்கோவை போன்ற நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

நஸ்யத்தின் பிரிவுகள் பயன்படுத்தப்படும் அளவைப் பொறுத்து மர்சம் என்றும், பிரதிமர்சம் எனவும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மர்ச நஸ்யத்தில், பிரதிமர்ச நஸ்யத்தைவிட மருந்தின் அளவு கூடுதலாக பயன்படுத்தப்படும்.

பிரதிமர்சம் என்பது ஒவ்வொரு மூக்கிலும் ஒரு துளியோ, இரண்டு துளியோ தினசரி எண்ணெய் விடுவது போல போட வேண்டும். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், உடல் பலவீனமானவர்களுக்கும், மழைக் காலத்தில் கூட இதைப் பயன்படுத்தலாம். எப்பொழுதும் வாத பிரகோபம் உண்டாகிற ஒரு நிலை ஏற்பட்டாலும் அப்போதும் பிரதிமர்சம் செய்யலாம்.

காலை உணவுக்குப் பின், குளித்த பிறகு, மலம் கழித்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு, தூங்கி எழுந்த பிறகும் பிரதிமர்சம் செய்யலாம். ஆனால் நீர்கோவை நோயின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் போதும் முகத்தில் இருக்கிற கிருமி நோய்கள் போன்றவற்றுக்கும் பிரதிமர்சம் செய்யக்கூடாது.
ஜலதோஷம், இருமல், அசதி, தொண்டை வலி, மழைக்காலம், உணவுஉண்ட பின், குளித்த பிறகு, கர்ப்ப காலம், குழந்தை பிறந்த காலங்களில் மர்சன நஸ்யம் செய்யக்கூடாது.

இருமல், தலைவலி, மூச்சுமுட்டுதல், தீராத தும்மல், கழுத்துவலி, காய்ச்சல், மயக்க நிலை போன்றவை நஸ்யம் செய்தால் வரும் தொந்தரவுகள் ஆகும்.
மர்ச நஸ்யத்தை குறைந்தது 6 துளிகளும், அதிகமாக 10 துளிகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்தியமான அளவில் 8 துளிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தைலமோ, கிருதமோ பயன்படுத்தும் போது இந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். கஷாயத்தை வைத்து மர்ச நஸ்யம் செய்யும் போது எட்டு துளி, ஆறு துளி அல்லது நான்கு துளி மட்டும் பயன்படுத்தினால் போதும்.

கப நோய்களுக்கு காலை வேளையிலும், பித்த நோய்களுக்கு மதிய வேளையிலும், வாத நோய்களுக்கு மாலை அல்லது இரவு நேரத்திலும் நஸ்யம் செய்து கொள்ளலாம். சில நாள்பட்ட கடினமான வாத நோய்களுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் இதைச் செய்யலாம். வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் காலையில் நஸ்யம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் வெயில் அடிக்கும் மதிய வேளைகளில் செய்ய வேண்டும். வெயில் காலத்தில் மாலை வேளையில் செய்ய வேண்டும். மழைக் காலத்தில் பொதுவாக நஸ்யம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்ய வேண்டியது வந்தால் சூரிய ஒளி இருக்கிற நாளன்று பிரதி மர்சமாக செய்ய வேண்டும். மர்சமாக செய்யக்கூடாது.

நஸ்யம் செய்கிற போது நோயாளி மிகவும் பசியோடு இருக்கக்கூடாது. நஸ்யம் செய்வதற்கு முன்பு மருந்து பொருட்களால் செய்யப்பட்ட திரியினால் ஏற்படுத்தப்படும் புகையை மூக்கால் இழுத்து வாயினால் வெளியிட வேண்டும். பின்பு நோயாளியை ஒரு கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். அந்த அறை அதிகமான காற்றோட்டம் இல்லாததாக இருக்க வேண்டும். கழுத்தைச் சற்று பின்புறமாக நிமிர்த்தி வைக்க வேண்டும். கைகளை இரண்டு புறமும் நீட்டி வைக்க வேண்டும். தலையணை மூலம் காலை சற்று உயர்த்தி வைக்கலாம். நெற்றி, மூக்கின் இரண்டு துளைகள், கழுத்து, கை, மார்பகம் போன்ற பகுதிகளில் எண்ணையைச் சூடாக்கி தடவி நன்றாக ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பின்பு ஒரு மூக்கை அடைத்துக் கொண்டு மற்றொரு மூக்கின் வழியாக மருந்தை இடைவெளியில்லாமல் விட வேண்டும். இது போல அடுத்த மூக்கிலும் போட வேண்டும். இப்படி செய்யும் போது வாயில் வருகிற மருந்தை இடது புறமும், வலது புறமும் மாறி மாறி உமிழ வேண்டும். இந்த மருந்தை விழுங்கி விடக்கூடாது.

பின்பு நோயாளி இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அப்படி படுத்திருக்க வேண்டும். அதன்பிறகு எழுந்து உட்கார்ந்து, வறட்டு மஞ்சளை ஒரு பேப்பரில் சுற்றிக் கொளுத்தி அதில் வருகிற புகையை மூக்கினால் இழுத்து வாயால் விட வேண்டும். பின்பு சூடான நீரால் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்கிற போது வெளியில் வராமல் அடைபட்டு போயிருந்த கபதோஷம் நன்றாக உருகி வெளியே வர உதவியாக அமையும். சூரணங்களை மூக்கினுள்ளே செலுத்த வேண்டுமானால் ஆறு அங்குலம் அளவு உடைய, இருபுறமும் துளையுள்ள சிறிய எந்திரத்தினால் மூக்கினுள்ளே வைத்து ஊத வேண்டும்.

தும்மலுக்கு நிவாரணம்

நஸ்யம் சிகிச்சை மூலம் இயல்பாக சிரமம் இல்லாமல் மூச்சு விடுதல், சிறிய அளவில் தும்மல் உண்டாகுதல், புலன்களின் தெளிவு, நோயிலிருந்து விடுதலை, இரவு நேரத்தில் சுகமான தூக்கம், சுவையை உணரும் தன்மை போன்றவை கிடைக்கின்றன.