Home பெண்கள் உணவு உடல் இயற்கையின் வயாகரா முருங்கை!

இயற்கையின் வயாகரா முருங்கை!

92

முருங்கைக் காயை’ யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள். காரணம், பாக்யராஜ் ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜ் அப்படி. ஆனால் அதிலும் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. முருங்கைக் காயில் ‘பவர்’ இருக்கிறதாம். ‘அது’ மட்டுமல்ல, வேறு சில சக்திகளும் கூடவே உள்ளன.
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை மரம் இலை, பூ, காய்களுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.

முருங்கை இலை

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

இலையின் சாறு விக்கல் போக்கும். அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.

பெண்களுக்கு வலி நிவாரணி

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

முருங்கைப் பூ

நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

இயற்கையின் வயகரா

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.

முருங்கைப் பிஞ்சு

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

முருங்கைக் காய்

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய் முருங்கைக் காய். அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. வேரின் சாறு பாலுடன் கலந்து சிறுநீர்ப் போக்கு தூண்டுவி.

ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.

விதை எண்ணெய்

இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம், சமையல் எண்ணெய் எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் , உள்ளிட்ட பல வித பயன்களை தருகிறது விதை எண்ணெய். விதையின் எண்ணெயுடன் சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது.

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.

இலைக்காம்பு

சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

முருங்கை வேர்

வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

சத்து நிறைந்த முருங்கை

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.