ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய பிறகு, ஆரம்பத்தில் ஓரிரு வருடங்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரற்று இருப்பது பொதுவான ஒன்று, ஓரிரு வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு சுழற்சிக்கும் ஒரு கரு முட்டை வெளிவரும் நிகழ்வு சரியாக நடக்கத் தொடங்கிய பிறகே அவர்களின் மாதவிடாய் சுழற்சியும் சீராகும்.
சுமார் மூவாயிரம் பெண்களைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், அவர்களின் சராசரி முதல் மாதவிடாய் சுழற்சிக் காலம் 34 நாட்களாக இருந்தது தெரியவந்தது. அவர்களில் சுமார் 38% பெண்களுக்கு முதல் சுழற்சி 40 நாட்களுக்கும் அதிகமாக இருந்தது. 7% பெண்களுக்கு 20 நாட்களும் 10% பெண்களுக்கு 60 நாட்களும் இருந்தது. பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் முதல் மாதவிடாயின் போது 2-7 நாட்கள் இரத்தப்போக்கு இருந்துள்ளது.
பெண்ணின் ஆரம்ப வருடங்களில் கரு முட்டை வெளிவராது, மாதவிடாய் சுழற்சி மட்டும் நடைபெறும்.குறைந்த வயதிலேயே மாதவிடாய் தொடங்குபவர்களுக்கு கரு முட்டை வெளியீட்டுச் சுழற்சியும் (கருமுட்டை உருவாக்கி வெளியிடப்படும் காலச் சுழற்சி) சீக்கிரமே தொடங்குகிறது. 12-க்கும் குறைவான வயதில் மாதவிடாய் தொடங்கிய பெண்களுக்கு, முதல் வருடத்தின் மாதவிடாய் சுழற்சியில் 50% கருமுட்டை வெளியிடப்படுகிறது. தாமதமாக பூப்படையும் பெண்களுக்கு கருமுட்டை வெளியீட்டுச் சுழற்சியும் தாமதமாகத் தொடங்கலாம்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 13 முதல் 19 வயதுள்ள பெண்களில் 31.8% பேருக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பது தெரியவந்தது.
ஒரு சுழற்சிக்கான நாட்கள்
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது என்றாலும், வளர்ந்த இளம் பெண்களில் சுமார் 90% பேருக்கு ஒரு மாதவிடாய் சுழற்சிக் காலம் என்பது 21 முதல் 45 நாட்கள் கொண்டதாக உள்ளது. சிலருக்கு இந்தச் சுழற்சி 20 நாட்களுக்கும் குறைவாகவும் இன்னும் சிலருக்கு 45 நாட்களுக்கும் அதிகமாகவும் இருப்பதும் உண்டு.
மாதவிடாய் தொடங்கி மூன்று ஆண்டுகளில் சுமார் 60-80% பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சி 21-34 நாட்கள் என்ற வரம்பிற்கு வந்துவிடுகிறது. இது பெரியவர்களுக்கான இயல்பான நாட்கள் வரம்பு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
19 – 20 வயதுவாக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 21-34 நாட்கள் எனும் இயல்பான வரம்பை அடைந்து விடுகின்றனர்.
வளரும் இளம் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி – உடல் சாராதகாரணங்கள்
ஆரம்ப வருடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் இயல்பாக உள்ள மாறுதல் சகஜம், ஆனால் சில காரணங்களால் இவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாகலாம் அல்லது மாதவிடாய் வராமல் தவறலாம், அவற்றில் சில:
கர்ப்பம்
நாளமில்லா சுரப்பிகள் சார்ந்த காரணங்கள்
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவுநோய் (டயபட்டிஸ் மெலிட்டஸ்)
சினைப்பை நீர்க்கட்டிகள் நோய்க்குறித் தொகுப்பு (PCOS) – ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக ஏற்படும் நோய் அறிகுறிகளின் தொகுப்பு, இது இனப்பெருக்க வயதுடைய பெண்கள் மற்றும் சிறுமியரைப் பாதிக்கிறது
கஷ்ஷிங் நோய் – கார்ட்டிசல் என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும் நோய்
தைராய்டு செயல்பாட்டில் கோளாறு
குறைந்த வயதில் சினைப்பை செயலிழத்தல் – 40 வயதை அடையும் முன்னரே பெண்களின் சினைப்பைகள் செயல்படுவதை நிறுத்திவிடுதல்
பிறப்பிலேயே இருந்து, பிற்காலத்தில் வெளிப்படுகின்ற அட்ரினல் செல் பெருக்கம் (ஹைப்பர்ப்ளேசியா) – இது அட்ரினல் சுரப்பிகளைப் பாதிகின்ற ஒரு கோளாறு, இதன் அறிகுறிகள் எந்த வயதிலும் வெளிப்படலாம்
பெறப்பட்ட சிக்கல்கள்
மன அழுத்தம் சார்ந்த ஹைப்போதலாமஸ் செயல் கோளாறு – மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் எனும் பகுதி செயல்பாட்டில் கோளாறு ஏற்படுதல்
மருந்துகள்
உடற்பயிற்சியால் தூண்டப்படும் மாதவிலக்கின்மை (அமெனோரியா) – கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதன் காரணமாக ஒருவருக்கு மாதந்தோறும் வர வேண்டிய மாதவிடாய் வராமல் போவது.
உணவு உட்கொள்ளுதல் சார்ந்த கோளாறுகள் (நாள்பட்ட பசியின்மை மற்றும் பெரும்பசி)
கட்டிகள்
சினைப்பைக் கட்டிகள் – சினைப்பையில் உருவாகும் கட்டிகள்
அட்ரினல் கட்டிகள் – அட்ரினல் சுரப்பிகளில் உருவாகும் கட்டிகள்
புரோலாக்டினோமாஸ் – புரோலேக்ட்டின் சுரப்பியை உற்பத்தி செய்யும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் வலியற்ற கட்டி
நோய் கண்டறிதல்
ஒரு பெண்ணுக்கு 6-மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருந்தால், அது இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை என அழைக்கப்படுகிறது. வளரும் இளம் பெண்களுக்கு 3 மாதங்கள் அல்லது 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருப்பது இயல்பல்ல. ஆகவே, ஆரம்ப வருடங்களில் தொடர்ந்து 90 நாட்களுக்கும் மேல் ஒருவரின் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக இருந்தால், அது சாதாரண விஷயமல்ல, அவர்கள் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
பெரும்பாலும், நீண்ட இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி ஏற்படக் காரணமாக இருப்பது சினைப்பை நீர்க்கட்டிகள் நோய்க்குறித் தொகுப்பு (PCOS) என்ற நிலையே ஆகும். இந்தப் பிரச்சனை உள்ள பெண்களுக்கு உடலில் அதிக அளவில் ஆண்ட்ரோஜென் ஹார்மோன் இருப்பதற்கான அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக அதிக முடி வளர்த்தல், அதிக உடல் எடை, முடி மெலிதல், தலையில் முடி உதிர்தல், எண்ணெய்ப்பிசுக்குள்ள சருமம் அல்லது முகப்பரு போன்றவை. உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகம் இருக்கும் 90% பெண்களுக்கு காரணமாக இருப்பது PCOS நோய்க்குறித் தொகுப்பே ஆகும். பொதுவாக இதனாலேயே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.
மூளையில் கொனடோடிராஃபின் வெளியிடும் ஹார்மோனைத் தூண்டும் துடிப்புகளில் கோளாறு ஏற்படுதல், அதீத எடை குறைவு, கடுமையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் அல்லது தூக்கப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க விதத்திலான மாற்றம் மற்றும் கடுமையான மன அழுத்தம் போன்ற காரணங்களால் சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.
நீண்டநாளாக கட்டுப்பாட்டில் வைக்காத நீரிழிவுநோய், தைராய்டு கோளாறு போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக இருக்கலாம்.
டர்னர் சின்ட்ரோம் மற்றும் சினைப்பைகள் இயல்புக்கு மாறாக வளரச் செய்யும் பிற கோளாறுகள் போன்ற மரபியல் மற்றும் பிறவிக் கோளாறுகளாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.
அரிதாக, சினைப்பைப் புற்றுநோய், அட்ரினல் புற்றுநோய் மற்றும் புரோலாக்டினோமாஸ் போன்ற பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.
வளர்ந்த பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி குறித்த பரிசோதனை
மாதவிடாய் தொடர்பான சில கோளாறுகளுக்கு மேலும் மருத்துவப் பரிசோதனைகள் செய்வது அவசியம்:
15 வயதாகியும் மாதவிடாய் தொடங்காவிட்டால்
மார்பகங்கள் வளர்ந்து 3 மூன்று வருடங்களுக்குள் மாதவிடாய் தொடங்காவிட்டால்
பெண்ணுக்கு 14 வயதாகியும், மாதவிடாய் வராமல் இருந்தால், அவர்களுக்கு உடலில் அதிக முடி இருந்தால்
பெண்ணுக்கு 14 வயதாகியும், மாதவிடாய் வராமல் இருந்தால், அவருக்கு உணவு உட்கொள்ளுதல் தொடர்பான கோளாறுகள் இருந்தால் அல்லது அவர் கடுமையான உடல் செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்.
21 நாட்களுக்கும் குறைவான இடைவெளியில் மாதவிடாய் வந்தால் அல்லது 45 நாட்களுக்கும் அதிகமான இடைவெளியில் வந்தால்
ஒருமுறையேனும், 90 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் மாதவிடாய் வராமல் இருந்தால்
ஏழு நாட்களுக்கும் மேல் மாதவிடாய் இரத்தப்போக்கு இருந்தால்
அடிக்கடி நாப்கீன் மாற்ற வேண்டி வந்தால் (அதாவது ஒன்றிரண்டு மணி நேரத்தில் ஒரு பேட் முழுதுமாக நனைந்துவிடுவது)
இரத்தப்போக்கு கடுமையாக இருந்தால் அது இரத்தப்போக்குக் கோளாறு ஏதேனும் இருந்தால் அல்லது எளிதாக சிராய்ப்புகள் ஏற்பட்டால் அல்லது குடும்பத்தில் யாருக்காவது இரத்தப்போக்குக் கோளாறுகள் இருந்திருந்தால்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சிக் காலம் எவ்வளவு என்பதே நிச்சயமாகத் தெரியாவிட்டால், மருத்துவர் அவருக்கு நாள்காட்டியுடன் கூடிய சார்ட் ஒன்றைக் கொடுத்து, அதில் அவருக்கு மாதவிடாய் வரும் நாட்களைக் குறித்துக்கொண்டு வருமாறு கேட்கலாம். இதைக் கொண்டு அவருக்கு மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை மருத்துவர் மதிப்பீடு செய்ய முடியும்.
உடலில் ஆண்ட்ரோஜென் அதிகமாகச் சுரப்பதன் அறிகுறிகள் உள்ளதா என்று மருத்துவர் பார்ப்பார், உதாரணமாக உடலில் அதிக ரோமங்கள் மற்றும் முகப்பரு.
இனப்பெருக்க உறுப்புகளில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான தன்மைகள் உள்ளதா என்றும் மருத்துவர் ஆய்வு செய்யலாம். வயிற்றில் ஏதேனும் கனமாக இருப்பது போன்ற உணர்வு இருந்தால், வயிற்றுப் பகுதி சோதனை செய்யப்படலாம்.
இனப்பெருக்க உறுப்புகளில் உடற்கூறு பற்றி தெரிந்துகொள்ளவும் சினைப்பையில் கட்டிகள் உள்ளதா என (PCOS) அறிந்துகொள்ளவும் அடிவயிறு மற்றும் கீழ் இடுப்புப் பகுதிகளில் அல்ட்ராசவுண்ட் சோதனைகள் செய்யப்படலாம்.
PCOS, தைராய்டு கோளாறுகள், நீரிழிவுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளதா எனக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படலாம்.
இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், இரத்தப்போக்கு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என அறிய அதற்கான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.
இளம் பெண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால், கற்பமாக உள்ளார்களா என்பதை அறிவதற்கான சோதனையும் செய்யப்படலாம்.
இளம் பெண்களின் சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கான சிகிச்சை
ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய் தொடங்கி, மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் நடக்கத் தொடங்க சில ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில் உடலின் ஹார்மோன்கள் மற்றும் பிற உடலியல் செயல்பாடுகள் முறையாக நடைபெறத் தொடங்க சிறிது காலம் ஆகலாம். ஆனால், வளர்ந்த பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், அதைக் கவனிக்காமல் இருக்கக்கூடாது, அது ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கான சாத்தியமுள்ள காரணங்கள் பற்றிய பரிசோதனைகளைச் செய்து முடித்த பிறகு, உங்கள் மருத்துவர் தகுந்த சிகிச்சையைத் தொடங்குவார். ஏதேனும் குறிப்பிட்ட பிரச்சனையால் இப்படி இருந்தால், அதற்கான சிகிச்சை வழங்கப்படும்.உதாரணமாக, தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏதேனும் இருந்தால், தைராய்டு ஹார்மோன் சிகிச்சை வழங்கப்படும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியைச் சரி செய்ய, ஹார்மோன் அல்லாத அல்லது ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
ஹார்மோன் அல்லாத சிகிச்சைகள்
இரும்புச்சத்து மருந்துகள் – இரத்த சோகை இருந்தால் அல்லது மீண்டும் மீண்டும் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அவர்களுக்கு இரும்புச்சத்து மருந்துகள் கொடுக்கப்படும்.
இரத்தப்போக்கைக் குறைப்பதற்கான மருந்துகள்
ஸ்டிராய்டல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (உதாரணம்: ஐபுபுரோஃபென், நாப்ராக்சென், மெஃபெனாமிக் ஆசிட்) கொடுக்கப்படலாம். மாதவிடாய்த் தொடங்கி முதல் 48 மணி நேரத்தின்போது இந்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொண்டால் இரத்தப்போக்கு 30% வரை குறையலாம்.
ஆன்டிஃபைப்ரினோலிட்டிக்ஸ் (ட்ரானெக்சமிக் ஆசிட்) – இரத்தப்போக்கைக் குறைக்க மருத்துவர் இந்த மருந்தைப் பரிந்துரைக்கலாம்.இது மாதவிடாய்க் கால அளவைக் குறைக்காது, ஆனால் இரத்தப்போக்கை 50% வரை குறைக்கும்.
ஹார்மோன் சிகிச்சை
ப்ரோஜெஸ்டெரோன் (உதாரணம்: நாரெத்திஸ்ட்ரோன், மேட்ராக்ஸிப்ரோஜெஸ்டெரோன் அசிட்டேட்) – ப்ரோஜெஸ்டெரோன் ஹார்மோன் குறைவால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் இருந்தால், அவ்வப்போது மாதவிடாய் வராமல் போகும் பிரச்சனையைச் சரி செய்ய மருத்துவர் இந்த மருந்தைக் கொடுக்கலாம்.
ஒருங்கிணைந்த ஈஸ்ட்ரோஜன் அல்லது ப்ரோஜெஸ்டெரோன் வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (உதாரணம்: எத்தினைலெஸ்ட்ரேடியால்/லீவனோர்ஜெஸ்ட்ரால் மாத்திரை) – கருமுட்டை உற்பத்தி ஆகாத பிரச்சனை அல்லது சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மருந்துகள் கொடுக்கப்படலாம். இவை இரத்தப்போக்கை 50% வரை குறைக்கலாம்.