Home ஆரோக்கியம் தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்

தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்

32

இரவும் பகலும் சமமாக மாறிவருவதே தூக்கத்தின் இன்றியமையாமையை காட்டும். பகலில் உழைப்பும், இரவில் தூக்கமும் அப்போதுதான் சாத்தியமாகிறது. மனித உடல் மனம் இரண்டும் சமநிலையில் இருக்க இயற்கையின் இரவு பகல் அமைப்பு தேவையாகிறது.

நமது மூளையில் ‘பீனியல் சுரப்பி’ என்று ஒரு சுரப்பி, பட்டாணி அளவில் இருக்கிறது. இதை ‘biological clock on human body’ என்று சொல்கிறார்கள். இச்சுரப்பி ‘மெலடோனின்’ என்ற சுரப்பை சுரக்கிறது. வெளிச்சத்தில் இச்சுரப்பி வேலை செய்யாது; இரவில் சுரக்கும் இச்சுரப்பு இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவும். இச்சுரப்பே தூக்கத்தை தருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இரவில் கண்விழித்து வெளிச்சத்தில் வேலைபார்த்தால் இச்சுரப்பி வேலை செய்யாது. இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிவரை இரத்த ஓட்டம் கல்லீரலில் அதிகமாக இருக்கும். உடல் முழுவதும் இருக்கும் கழிவுகளை உடைத்து வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. தூங்காவிட்டால் கழிவு வெளியேறுவது நடக்காது. கழிவுகள் உடலில் தங்கி நோய்கள் வரத் தொடங்கும். தூக்கம் எவ்வளவு முக்கியமானது என்று இப்போது முழுமையாக தெரிகிறதல்லவா!

இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும்.

கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகம் தூக்கத்தை பற்றி நடத்திய ஓர் ஆய்வின்படி தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குபவர்கள் நோய்களில் இருந்து தப்பிக்கின்றனர். மரணத்தையும் தள்ளிப்போடுகின்றனர் என்று கண்டுள்ளனர். குறைவாக தூங்குபவர்களுக்கு ரத்த கொதிப்பு, நீரழிவு போன்ற நீண்ட நாள் உபாதைகள் வரும். நீண்ட நேரம் தூங்குபவர்கள் ஏகப்பட்ட உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இயல்பாக தூங்கினால் உடலும், மனமும் சுகம் பெறும். வலிமை பெறும். தாம்பத்ய உறவும், குழந்தை பெறும் திறனும் அதிகரிக்கும். அறிவு வளரும். ஆயுள் விருத்தியாகும்.

படுத்தவுடன் தூங்க

* உடல் அயரும் அளவு உழைப்பவர்கள் படுத்தவுடன் தூங்கி விடுகின்றனர்.

* மூளை சோர்வு அடையும் வரை வேலை செய்பவர்களும் படுத்தவுடன் தூங்கி விடுவர்.

* தினமும் காலை முதல் நடந்த விஷயங்களை நினைவு கூர வேண்டும்.

* கெட்ட விஷயங்களை நினைத்து மன உளைச்சலை அதிகமாக்கி கொள்ளாமல் நல்ல விஷயங்கள், சுகமான தருணங்களையே திரும்ப, திரும்ப நினைக்க வேண்டும்.

* இந்த மகிழ்ச்சியை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

* மருதாணி பூக்களை தலையணைக்கடியில் வைத்தால் நல்ல தூக்கம் வரும் அல்லது பிடித்த நறுமணத்தை நுகரலாம்.

* நல்ல சங்கீதம் கேட்டால் தூக்கம் வரும்.

* புழுங்கலரிசி சாதம், தயிர் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

* தலையில் எண்ணெய் தேய்த்து, சில நிமிடம் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் குளித்து பின் சூடாக பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்

* உடலில் உள்ள தோஷங்கள் தலைவழியே வெளியேறும் போதும், வாந்தி, பயம், குரோதம், படபடப்பு ஆகிய உணர்வுகள் இருக்கும்போதும், டி.வி. அதிகம் பார்க்கும்போதும், மன இறுக்கம் அதிகமாக இருக்கும்போதும் சீக்கிரம் தூக்கம் வராது. அந்தசமயத்தில் மேற்சொன்ன வழிகளில் ஒன்றை கடைபிடிக்கலாம்.

கூடாதவை எவை?

* சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. சாப்பிட்டு 1 1/2 மணிநேரம் கழித்தே தூங்க வேண்டும். அப்போது தான் செரிமான தொந்தரவு இருக்காது.

* தலைக்கடியில் கைகளை வைத்து கொண்டு தூங்குவது நல்லதல்ல; கழுத்து எலும்பு தேய்மானமும், கை மரமரப்பும் வரும்.

*படுக்கை மிகவும் இறுக்கமாகவோ, ரொம்ப மிருதுவாகவோ இருக்கக்கூடாது. ஓரளவு மிருதுவாக இருந்தால் போதும்.

* மிகவும் உயரமாகவோ, மிகவும் குறைவான உயரத்திலோ, தலையணை இருக்கக்கூடாது. அளவான உயரத்தில் இருக்க வேண்டும்.

தூங்குவதற்கான திசை

எந்தெந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என்று கூட வகுத்திருக்கிறார்கள்.
கிழக்கு – உத்தமம் – சலனமில்லாத ஆழ்ந்த உறக்கம்.
தெற்கு – மத்திமம் – உடல் களைப்பு நீங்குமளவுக்கு தூங்க முடியும்.
மேற்கு – சூலம் – கொடூரமான கனவுகள் வரும்.
குழப்பமாக இருக்கும். ஓய்வெடுத்தது போலவே இருக்காது.
வடக்கு – மரணம் – வடக்கு திசையில்தான் பூமியின் காந்தமண்டலம் இருக்கிறது. ஆகவே ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். தூங்கியதுபோலவே தோன்றாது.

கனவுகள்

* தூக்கத்தின் முக்கிய அம்சம் கனவு மூளையில் இருக்கும் வேண்டாத பதிவுகளை அகற்ற உதவுகிறது. விழிப்பில் சாதிக்க முடியாத விஷயங்கள், நிறைவேறாத ஆசைகள் ஆகியனவே கனவாக வருகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தைகள் அதிகம் கனவு காண்கின்றன. கருவிலிருக்கும் குழந்தைகள் கனவிலேயே ஆழ்ந்து கிடக்குமாம்.

வாதம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு நடப்பது, படிப்பது, ஓடுவது போல கனவு வரும். பித்தக்கோளாறு உள்ளவர்களுக்கு நெருப்பு அதிகம் வரும். கபத்தொல்லை இருப்பவர்களுக்கு, தண்ணீர் பற்றிய கனவுகள் அதிகம் வரும். இவ்வாறு இன்று அறிவியல் அறிஞர்கள், உளவியலாளர்கள் ஆராய்ந்து கூறும் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் கூற்றுக்களை அன்றே பகுத்து மனிதகுலம் வாழ வழிகாட்டி உள்ளனர் நம் முன்னோர்.