Home சூடான செய்திகள் இந்தியாவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்

இந்தியாவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்

24

இந்தியாவில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலி செய்வது போன்ற தொந்தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும் போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம்.

இந்தியாவில் தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்களை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம் காணும் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழமைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. இது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்றும் சில முக்கியமான டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்.
உடைகளில் கவனமாய் இருக்கவும்
என்ன மாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப் பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவையில்லாத பார்வைகளைத் தவிர்க்கலாம். எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற்றும் குர்தா கூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அந்நியர்களுடனான உரையாடல்களைத் தவிர்க்கவும்
அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், தனியாகச் செல்லும் போது, அவ்வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவையில்லாத உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேலும் பயணிப்போர் யாரேனும், உரையாடல்களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது.

உடைமைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்
உடைமைகள் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து அகல கூடாது. ஏனெனில் இது இந்தியா! “வணக்கம்” என்று சொல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பணப்பையின் மேல் கவனம் கொள்ளவும்
பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

தைரியமாக இருக்கவும்
முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் முதன்முறையாக தனியாக பயணிக்கிறீர்கள் என்பது வெளியே தெரியும் படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண்டும்.

எதையும் கடன் வாங்க கூடாது
அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனிமையைத் தவிர்க்கவும்
இரயில்/பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதிக்கு உடனே செல்ல வேண்டும். அருகில் அமர்ந்திருக்கும் நபரினால் தர்மசங்கடமாக உணர்ந்தால், இருக்கையை மாற்றித் தரக் கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென்று அமரலாம்.

அதிக பாரமின்றி பயணிக்கவும்
ஏகப்பட்ட லக்கேஜ்களைத் தூக்கிச் செல்ல வேண்டாம். அவ்வளவையும் ஒருவரே கையாள வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். அதனால், எப்போதும் எடை குறைவாக, ஒரு தோள் பையோ அல்லது ஒரு ட்ராலி பையோ மட்டும் கொண்டு செல்வது நல்லது. அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வதும் நல்லதல்ல.