இரகசியகேள்வி-பதில்:எனக்கு வயது 31. என் கணவருக்கு 33. திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் கொடுத்தனுப்பிய ஒரு பொதியை என்னிடம் தருவதற்காக என் கணவரது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாருமில்லாததைப் பயன்படுத்திக்கொண்டு என்னிடம் தவறான முறையில் கதைக்க ஆரம்பித்தார். பயந்துபோன நான் அவரை திட்டி அனுப்பிவிட்டேன். இப்போது என் கணவர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. மகளிடம் மட்டும் கதைப்பார். நான் கதைக்க முயற்சித்தால் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிடுவார். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.
பதில்:
இன்னுமா புரியவில்லை?
தனக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பதிலாக உங்கள் கணவரது நண்பர் உங்கள் கணவரை பலிக்கடாவாக்கி உங்களைப் பழிவாங்கியிருக்கிறார். இதுதான் நடந்திருக்க வேண்டும்.
தன் நண்பனது மனைவியைத் தங்கையாகப் பார்க்கவேண்டிய அந்தக் கயவன், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உங்களைப் பற்றி உங்கள் கணவரிடம் அவதூறாகக் கூறியிருக்க வேண்டும். நீங்கள் அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவோ அல்லது உங்களுக்கும் வேறொருவருக்கும் தொடர்பிருப்பதை அவன் கண்ணால் கண்டதாகவோ உங்கள் கணவரிடம் பொய்யாகக் கூறியிருக்க வேண்டும்.
தொலைக்காட்சி நாடகங்களில் வில்லன் யார் என்பதைப் பார்வையாளர்கள் தெரிந்துகொண்டாலும் அந்தக் கதாபாத்திரம் அறிந்திருப்பதில்லை அல்லவா? அதுபோலத்தான் தன் நண்பர் சொன்னதை முழுமையாக நம்பியிருப்பார் உங்கள் கணவர்.
இதை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம் குறித்து நீங்கள் உங்கள் கணவரிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது. சரிதான்! இம்மாதிரியான சமாச்சாரங்களை கணவரிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு குழப்பம் பெண்களுக்குத் தோன்றுவது சகஜம்தான். ஆனால், அதுதான் அந்தக் கயவனுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.
இந்த நிலையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், இனியும் தாமதிக்காமல் இதுபற்றி உங்கள் கணவரிடம் கூறுவதே! எடுத்த எடுப்பில் நீங்கள் சொல்வதை உங்கள் கணவர் நம்ப மறுக்கலாம். உங்கள் தவறை மறைப்பதற்காகவே நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள் என்றும் அவர் சொல்லலாம். ஏனென்றால், இதையெல்லாம் அந்தக் கயவன் முன்கூட்டியே சிந்தித்து அதற்கேற்றபடியே உங்கள் கணவரிடம் திரித்துக் கூறியிருப்பான்.
எனவே, பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். அவர் நம்ப மறுத்தாலும் பரவாயில்லை. வேண்டுமானால், இந்தச் சம்பவம் குறித்து அந்தக் கயவனிடம் உங்கள் கணவரைக் கேட்கச் சொல்லுங்கள். அப்போது அவனது முகமே அவனைக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதையும் கூறுங்கள்.
நீங்கள் உங்கள் கணவரிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் பிரிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க உங்கள் கூற்றில் உள்ள உண்மையை உடனடியாக உங்கள் கணவர் புரிந்துகொள்ள மாட்டார். எனவே, எது நடந்தாலும் பொறுமையை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.
———————————————-
வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோதான் நாங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறோம். என் மனைவியை உற்சாகப்படுத்தி எப்படி இந்த இடைவெளியைக் குறைப்பது? குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது உறவில் ஈடுபடுவதற்கு அவளைத் தயார்படுத்துவது எப்படி?
திருமணமான புதிதில் ஒரு நாளைக்குப் பலமுறை, அதன் பிறகு ஒரு வாரத்துக்கு இரு முறை, குடும்பம் குட்டி என்றான பிறகு வாரத்துக்கு ஓரிரு முறை, குடும்பச் சுமைகள் கூடும்போது மாதத்துக்கு ஓரிருமுறை என்று தான் பெரும்பாலான தம்பதிகள் உறவுகொள்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொருவரது தாம்பத்திய வாழ்க்கையும் வித்தியாசமானது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உள்ள புரிதலைப் பொறுத்து நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடிக்கொள்ளலாம். இதை எல்லாம் வெளியாட்கள் வரையறை செய்ய முடியாது
——————————————–
கேள்வி
எனக்கு வயது 47. எனது கணவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் ஒரு 63 வயது நபர், தன்னுடைய பாலியல் பங்காளராக இருக்குமாறு என்னைக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், தற்போது அவருடைய விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் நான் கர்ப்பம் தரித்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது. எனக்குத் தகுந்த ஆலோசனையை வழங்கி உதவுங்கள்.
பதில்
உங்களுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படுகிறது என்றால், நிச்சயமாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஏன் இந்த விபரீத ஆசை என்று சற்று எண்ணிப் பாருங்கள்.
உங்களது பிரச்சினை பற்றிச் சொல்லியிருக்கும் நீங்கள், உங்கள் குடும்ப விபரம் எதையும் தெரிவிக்கவில்லை. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கினறனரா? நீங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்களா? உங்களைப் பற்றிய உங்கள் அயலவர்களின் எண்ணம் எவ்வாறிருக்கிறது என்பன பற்றிய விபரங்களை நீங்கள் தரவில்லை.
உடல் வேட்கையானது, ஓரிரு மணித்துளிகளுக்குள் அடங்கிவிடும். ஆனால், அது உண்டாக்கும் மனக் குழப்பம் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒருவேளை, உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் இதுபற்றி அறிந்துகொண்டால், அவர்கள் மனதில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சுற்றம் சூழ வாழ்ந்து வருகிறீர்கள் என்றால், இந்த விடயம் தெரியவரும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் உங்களை விலக்கியே வைப்பார்கள். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?
இளம் வயதில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் உள்ள தயக்கமே இன்னும் நம் சமூகத்தை விட்டு விலகாத சூழலில், இந்த வயதில், இப்படியொரு ஆசைக்கு நீங்கள் அடிமையாவது நிச்சயம் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் பல வழிகளில் பாதிக்கும்.
உங்களது ஆசை தவறானது என்று யாரும் சொல்லிவிட முடியாது; சொல்லவும் கூடாது. ஏனெனில், அது உங்களது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை உங்களுக்கு சாதகமாக நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், பாதுகாப்பான நாட்களில், பாதுகாப்பான முறைகளை பின்பற்றி அவருடன் பாலியல் உறவில் ஈடுபடலாம். இதனை நீங்கள் ஒரு முறை பரீட்சார்த்தமாக முயற்சித்து பாருங்கள் என்று பரிந்துரைக்கிறோம். ஆனால், நாம் இந்த சமுதாயத்தில் தனித்தனி மனிதர்களாக வாழவில்லை. ஒரு மக்கட்தொகுதியாக இணைந்தே வாழ்கிறோம். அப்படி வாழும்போது, அந்த மக்கட்தொகுதிக்கென்றான சில பண்புகளை நாம் விரும்பியோ, விரும்பாமலோ கடைப்பிடித்தே ஆகவேண்டும். அதில் தவறும் பட்சத்தில், பாதிப்புகள் பாரதூரமானவையாக இருக்கும்.
எனவே, நம்முடைய சமூகத்தில் தொடர்ந்தும் இணைந்து வாழ உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த விபரீத விளையாட்டைத் தவிர்ப்பதே நல்லது.