திருமணமான எந்தவொரு தம்பதியருக்கும் தேனிலவு என்பது வாழ்வில் என்றைக்கும் நினைத்து நினைத்து, மனதில் இன்பம் அடைகிற சுகமான அனுபவமாக அமையும்.
ஆனால் அதுவே கசப்பான அனுபவமாக அமைந்தால்? அப்படித்தான் டெல்லியை சேர்ந்த அனுப் சர்மாவுக்கு (தம்பதியர் பெயர் மாற்றி தரப்பட்டுள்ளது.) மனைவி தீப்தியுடனான அனுபவம் அமைந்து விட்டது.
இந்த தம்பதியருக்கு 2004-ம் ஆண்டு, ஜனவரி மாதம் திருமணமானது. திருமணமான மறுநாளே சிம்லாவுக்கு தேனிலவு சென்றார்கள். ஆனால் அந்த தேனிலவு அனுப் சர்மாவுக்கு இனிக்கவில்லை. காரணம், மனைவி அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவரை அவமதிக்கிற வகையில் மனைவி குற்றம் சாட்டி இருக்கிறார்.
தொடர்ந்து 3 மாத காலம் அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும்கூட, அது பிரச்சினைகளுடன்தான் நகர்ந்திருக்கிறது. 3 மாதங்கள் கழிந்த நிலையில், அந்த பெண், தனது கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து கணவர் மீதும், கணவர் குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் செய்தார். ஆனால் கணவர், நல்லிணக்கம் ஏற்படுத்தி, மீண்டும் அவருடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட மனைவியோடு இனி வாழ்ந்து பயன் இல்லை என அவர் முடிவு செய்து, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அந்த பெண் அதை எதிர்த்தார்.
இறுதியில், அந்த பெண்ணிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து அந்த பெண், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பிரதீப் நந்திரஜாக், பிரதீபா ராணி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாழான தேனிலவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி மனதளவில் கொடுமை செய்துள்ளதும் அந்த பெண்ணிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என்பதற்கு உகந்த காரணங்கள் ஆகி உள்ளன என தீர்ப்பு அளித்தது.
அந்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:-
இந்த வழக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு.
30 வயது கடந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் திருமண வாழ்க்கை, தொடங்கியதில் இருந்தே சரியாக அமையவில்லை. தேனிலவின்போது கணவர், திருமண வாழ்வின் பந்தத்தை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால் மனைவி எதிர்த்து நின்றிருக்கிறார். அதன்பின்னும் கணவருக்கு மனைவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் மீதும், அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீதும் அவமதிப்பு ஏற்படுத்தத்தக்க குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
ஒரு பெண்ணின் அத்தகைய நடத்தை, சித்ரவதைதான். அதையெல்லாம் ஒரு மனிதர் தாங்கிக்கொள்வது சாத்தியம் இல்லை.
திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனையோ அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு கணவர், மிகவும் பொறுமை காட்டி உள்ளார்.
கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அந்த பெண் சுமத்தியுள்ள வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை.
பெற்றோரால் நிச்சயித்து நடக்கிற திருமணங்களில், அதுவும் திருமணங்களில் இணைகிற மணமக்களின் வயது 30-ஐ கடந்து விடுகிறபோது, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்து கொள்ள ஏற்ற காலம், தேனிலவு காலம்தான். ஆனால் இந்த வழக்கு அதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. சிம்லாவுக்கு தேனிலவுக்கு சென்றவர்கள் கசப்பான நினைவுகளுடனும், பாழான தேனிலவு அனுபவங்களுடனும் திரும்பி உள்ளனர்.
எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.