ஆரோக்கியமான ஒருவரின் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நாக்கில் ஆங்காங்கே வெண் புள்ளிகள் அல்லது வெண் திட்டுகள் இருந்தால் அதை வெள்ளை நாக்கு என்கிறோம்.
வாய் துர்நாற்றம், நாக்கில் கசப்பு சுவை போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு பொதுவான காரணமாக உள்ளது. நாக்கில் இருக்கும் நுண் காம்புகளுக்கு இடையில் உணவுத் துணுக்குகள், பாக்டீரியாக்கள், இரத்த வெள்ளையணுக்கள் போன்றவை படிந்து தங்கிவிடும்போது, நாக்கு வெள்ளையாகிறது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளாமை, நீர்ச்சத்து இழப்பு, நாக்கில் படிவுகளை அதிகமாக்கும் உணவு வகைகள் போன்ற காரணங்களால் நாக்கு வெள்ளையாகிறது.
வெள்ளை நாக்குப் பிரச்சனையைச் சரிசெய்ய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
உப்பு: உப்பின் உராய்வுத் தன்மை காரணமாக, நாக்கிலிருந்து உணவுத் துணுக்குகளையும் இறந்த செல்களையும் அகற்ற அது உதவுகிறது.மேலும், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. சிறிதளவு உப்பை நாக்கில் தூவிக்கொண்டு, ஒரு நிமிடம் வரை மென்மையான பிரஷால் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான நீரால் வாய்கொப்பளிக்கவும். நல்ல பலன் கிடைக்க, இதை ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்யவும்.
சமையல் சோடா: சமையல் சோடாவின் படர்ந்து பரவும் தன்மையின் காரணமாக, வெள்ளை நாக்குப் பிரச்சனையைச் சரி செய்ய சிறப்பாக உதவுகிறது. சமையல் சோடா அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் pH அளவையையும் சரியாக வைக்க உதவுகிறது. சிறிதளவு சமையல் சோடாவை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து பேஸ்ட் போலத் தயாரித்துக்கொள்ளவும், அதனை பேஸ்ட்டாகப் பயன்படுத்தி மென்மையான பிரஷ் கொண்டு நாக்கைத் துலக்கவும். நீரால் வாய் கொப்பளிக்கவும். விரும்பிய பலன் கிடைக்கும் வரை, இதே போல் தினமும் ஒரு முறை செய்யவும்.
கற்றாழை: கற்றாழையின் பாக்டீரிய எதிர்ப்புப் பண்பால், நாக்கை வெள்ளையாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு டேபிள்ஸ்பூன் கற்றாழைச் சாற்றை வாயில் வைத்துக்கொண்டு, ஒரு நிமிடம் வரை கொப்பளித்து பிறகு வெளியே உமிழவும், அதன் பின் ஒரு டேபிள்ஸ்பூன் கற்றாழைச் சாற்றை அருந்தவும். தினமும் இரண்டு முறை என்று இரண்டு வாரங்கள் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.
காய்கறி கிளிசரின்: வாய் வறட்சியின் காரணமாக நாக்கு வெள்ளையாகியிருந்தால், அதைச் சரிசெய்ய காய்கறி கிளிசரின் பயன்படும். வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் இது உதவும். நாக்கில் ஒரு சில துளிகள் காய்கறி கிளிசரினை விட்டு, மென்மையான பிரஷ் கொண்டு ஒரு நிமிடம் நாக்கையும் பல்லையும் துலக்கி, பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும். நாக்கின் நிறம் மீண்டும் இயல்புக்குத் திரும்பும் வரை இதே போல் தினமும் இருமுறை செய்யவும்.
எண்ணெயில் வாய்கொப்பளித்தல்: வாய் வெண்புண் காரணமாக நாக்கு வெள்ளையாகியிருந்தால், எண்ணெயால் வாய் கொப்பளிப்பது மிகுந்த பலன் தரும். வாய் வெண்புண்களில் இருந்து யீஸ்ட்டை அகற்றவும் இது உதவும். காலையில் பல் துலக்கும் முன்பு, உயர் தர தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு வாயில் ஊற்றிக்கொள்ளவும். தேங்காய் எண்ணெய் வெள்ளையாகும் வரை வாயில் வைத்துக் கொப்பளிக்கவும். பிறகு எண்ணெயை வெளியே உமிழ்ந்துவிட்டு வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்பளிக்கவும். சிங்க்கில் உமிழ்ந்தால் அது நீரை அடைத்துவிடக்கூடும் என்பதால் சிங்க்கில் உமிழ வேண்டாம்.
ப்ரோபயாட்டிக் தயாரிப்புகள்: லாக்டோபேசில்லஸ் அசிடோஃபிலஸ் கல்ச்சர்கள் போன்ற ப்ரோபயாட்டிக் தயாரிப்புகள் வாயில் பாக்டீரியாக்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு ப்ரோபயாட்டிக் காப்சூலை நீரில் கலந்துகொண்டு, வழக்கம் போல பல்துலக்கிவிட்டு, பிறகு இந்தக் கரைசலை வைத்து வாய்கொப்பளித்துவிட்டு அதை விழுங்கிவிடவும். இதற்குப் பிறகு ஒரு டம்ளர் நீர் அருந்தவும். ஒரு வாரம் வரை இதை தினமும் செய்யவும். நாளொன்றுக்கு குறைந்தது மூன்று முறை ப்ரோபயாட்டிக் சத்து மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.