Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வரும் மூலநோய்க்கு காரணம்

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வரும் மூலநோய்க்கு காரணம்

27

தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ஒரு கருவை உருவாக்கிப் பிரசவிக்கும் அந்த இயக்கத்தின்போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். எனவே கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்சனைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம்.

கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும். இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

கர்ப்ப காலத்தில் தாய்க்கு ரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூல நோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.

எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும்.