Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

20

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்… அந்தத் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆனால், பலராலும் அலட்சியப்படுத்தப்படுகிற பகுதி பாதங்கள். வெடிப்புகளோ, சுருக்கங்களோ, தடிப்புகளோ இல்லாத பாதங்கள் பார்வைக்கு மட்டும் அழகில்லை… உங்கள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பும்கூட!

‘‘ஆரம்பத்தில் பாதங்களைப் பராமரிக்கவென நேரம் ஒதுக்குவது சிரமமாகத் தோன்றலாம். பழகி விட்டாலோ, ஒருநாள்கூடப் பாத பராமரிப்பு இல்லாமல் உங்களால் இருக்க முடியாது’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா. பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எளிமையான டிப்ஸ் தருகிறார் அவர்.

1. பல் தேய்ப்பது, குளிப்பது மாதிரி கால்களுக்கான பராமரிப்பும் தினசரி பின்பற்றப்பட வேண்டும். டீ டிகாஷன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிளாக் டீயில் உள்ள டானிக் ஆசிட், மிகச்சிறந்த ஆன்டிபாக்டீரியலாக வேலை செய்து, பாதங்களைப் பாதுகாக்கும். கால்கள் நன்கு ஊறியதும், பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி, பாத சருமம் மென்மையாகும். பிறகு மாயிச்சரைசர் அடங்கிய ஸ்க்ரப் செய்து (பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தால் சிறப்பு) கால்களின் எல்லாப் பக்கங்களிலும் மென்மையாகத் தேய்க்கவும். பிறகு மறுபடி கால்களை நன்கு கழுவி விட்டு, கோகோ பட்டர் அடங்கிய ஃபுட் கிரீம் தடவி லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.

2. பாதங்களில் வெடிப்பு லேசாக ஆரம்பிக்கும் போதே அவற்றைச் சரி செய்ய வேண்டும். அப்படியே விட்டால், நாளடைவில் வெடிப்புகள் அதிகமாகி, பாதங்கள் முழுக்கப் பரவும். பாத வெடிப்பு இருப்பவர்கள், முதலில் சொன்னது மாதிரி கால்களை ஊற வைத்து, ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்த பிறகு, சாலிசிலிக் ஆசிட் கலந்த கிரீம்களைப் பாதங்களில் தடவிக் கொண்டு, மேலே காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கலாம். பகல் நேரங்களில் அடிக்கடி கால்களைக் கழுவி, லேசான ஈரம் இருக்கும்போதே மாயிச்சரைசர் தடவிக் கொள்வதன் மூலம் வெடிப்புகள் மறையும்.

3. சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அலுமினியம் குளோரைட் ஹெக்சாஹைட்ரேட் அடங்கிய மெடிக்கேட்டட் பவுடரை பாதங்களுக்கு உபயோகிப்பதன் மூலம் வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்.

4. சிலருக்குப் பாதங்கள் எப்போதும் வறண்டே இருக்கும். அவர்கள் ஆன்ட்டிஃபங்கல் லோஷன் உபயோகிக்கலாம்.

5. சன் ஸ்கிரீன் என்பது வெறும் முகம், கழுத்து, கைகளுக்கு மட்டுமில்லை… கால்களுக்கும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் உடலின் மற்றப் பகுதிகள் ஒரு நிறத்திலும், பாதம் மட்டும் வேறொரு நிறத்திலும் இருப்பது தவிர்க்கப்படும்.

6. தினசரி 2 வேளைகள் குளிப்பது எவ்வளவு அவசியமானதோ, அதே மாதிரிதான் கால்களைக் கழுவி சுத்தப்படுத்துவதும். குளிக்க ஆரம்பிக்கும்போதே கால்களுக்குச் சோப்பு போட்டுத் தேய்த்து, விரல் இடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்து ஊற விடவும். குளித்து முடித்த பிறகு கால்களை நிறையத் தண்ணீர் விட்டுக் கழுவி, நன்கு துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும்.

கால் வீக்கமா, களைப்பா?

வாரத்தின் எல்லா நாட்களும் நமக்கு ஒரே மாதிரி இருக்காது. சில நாட்கள் அசதி அதிகமிருக்கும். கால்கள் வீங்கி, வலிக்கும். அகலமான டப்பில் தண்ணீர் விட்டு, கைப்பிடியளவு ஐஸ் கியூப்ஸ் சேர்த்து, 6 துளிகள் டீ ட்ரீ ஆயிலும், ரோஸ்மெர்ரி ஆயிலும் விட்டு, ஒவ்வொரு காலையும் 1 நிமிடம் ஊற வைக்கவும். 1 நிமிடத்துக்குப் பிறகு காலை வெளியே எடுத்து சுத்தமான டவலால் அழுத்தித் துடைக்கவும். இன்னொரு காலுக்கும் அதே மாதிரி செய்யவும். கால்களின் வீக்கம் வடிகிற வரை இப்படியே மாறி மாறிச் செய்யவும். வீக்கம் வடிந்ததும் தண்ணீரை மாற்றி விட்டு, வேறு தண்ணீரில் கால் கப் பால் சேர்த்து இன்னும் சிறிது நேரம் இரண்டு பாதங்களையும் சேர்த்து ஊற வைத்து, பிறகு ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்து துடைக்கவும். இது கால்களில் உள்ள வலி, வீக்கத்தைக் குறைப்பதுடன், காலின் கருமையை நீக்கி, வழவழப்பாக்கவும் உதவும்.

தடித்த, வெடித்த சருமத்துக்கு…

சிலருக்குப் பாதங்களில் உள்ள சருமமானது தடித்து, வெடித்து, வறண்டு காணப்படும். இவர்கள் கட்டாயம் ஃபுட் கிரீம் உபயோகிக்க வேண்டும். பெட்ரோலேட்டம், கிளிசரின், ஹயால்யுரோனிக் ஆசிட், ஷியா பட்டர்… இவற்றில் ஏதேனும் ஒன்றை பிரதானமாகக் கொண்ட ஃபுட் கிரீம்தான் இவர்களுக்குச் சிறந்தது. யூரியா கலந்த லோஷன்களும் தடித்த தோல் பகுதியை மிருதுவாக்கும்.

வீட்டிலேயே செய்ய…

எலுமிச்சைச்சாறு 1 கப், பட்டை தூள் கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டேபிள்ஸ்பூன், பால் கால் கப்… இவை அனைத்தையும் 2 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, அகலமான டப்பில் விட்டு, கால்களை 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். பிறகு பயத்தம் மாவும், பாலோடும் கலந்த கலவையால் பாதங்களைத் தேய்த்துக் கழுவி விடவும். வாரம் ஒன்றிரண்டு முறை, நேரம் கிடைக்கிற போது இந்தச் சிகிச்சையைச் செய்து வந்தால், பாத சருமம் பட்டுப் போலாகும். பாதாம் ஆயில் 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன், வீட்ஜெர்ம் ஆயில் 1 டீஸ்பூன், 10 துளிகள் யூகலிப்டஸ் ஆயில்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதைப் பாதங்களுக்கான லோஷனாக உபயோகிக்கலாம்.