Home ஆரோக்கியம் ஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள்

58

நோய் வந்தபிறகு மருத்துவரைத் தேடிச் செல்வதும், சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது வரும்முன் காப்பது! அதற்கான வழிமுறைகள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் பலப்படும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. அப்படி சில வரும்முன் காக்கும் வழிகளைப் பற்றியும் பேசுகிறார்.

1. உங்களுடைய ஒவ்வொரு வேளை உணவிலும் ஆரோக்கியமான உணவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பசிக்கு சாப்பிட வேண்டுமே என இருப்பதை சாப்பிடாமல் காலை உணவு தொடங்கி மதியம், மாலை, இரவு என எப்போது சாப்பிட்டாலும் உங்கள் உணவில் சத்தான பொருட்கள் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலை உணவுடன் பழங்கள்… மதிய உணவுடன் கீரை மற்றும் காய்கறிகள்…மாலையில் சுண்டல்… இரவில் சூப் மற்றும் காய்கறிக் கலவை என இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதில்லை என்பதை உறுதியாகப் பின்பற்றுங்கள்.

2. எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யுங்கள். தூக்கத்தைத் தவிர. எக்காரணம் கொண்டும் தினமும் 6 மணி நேரம் முழுமையாகத் தூங்குவதைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

3. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு மருத்துவர் அல்லது ஒரே பிரச்னைக்கே ஒவ்வொரு முறையும் வேறு வேறு மருத்துவர் என மாற்றுவது தவறு. முதலில் உங்கள் உடல்நலனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மருத்துவரைக் கண்டுபிடியுங்கள். தொடர்ந்து சில முறை அவரிடம் சிகிச்சை பெற்றும் குணம் தெரியாவிட்டால் மட்டுமே வேறு மருத்துவரை மாற்றுங்கள். அப்படி மாற்றும்போது புதிதாகப் பார்க்கும் மருத்துவரிடம், உங்கள் முந்தைய மருத்துவக் குறிப்புகளை, நீங்கள் சிகிச்சை பெற்ற விவரங்களை மறைக்காமல் குறிப்பிடுங்கள்.

4. வெளியிடங்களில் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது அதிகபட்ச சுகாதாரத்தைக் கடைப்பிடியுங்கள். அதற்காக இயற்கை உபாதைகளை அடக்குவது சரியல்ல. அது வேறு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் துப்பட்டா, பர்ஸ், செல்போன், ஹேண்ட் பேக் போன்றவற்றை எங்கேயும் வைக்காதீர்கள். முடிந்தவரையில் அவற்றை உங்கள் கைகளிலேயே வைத்திருப்பது சிறந்தது. கழிவறைகளில் இருந்து பரவும் கிருமிகளின் தாக்கம் ரொம்பவே அதிகம். பொதுக்கழிவறைக்குள் பயன்படுத்தும் செருப்புகளைக் கழுவாமல்
வீட்டுக்குள் கொண்டு வராதீர்கள்.

5. பற்களை சுத்தமாக வைத்திருங்கள். சொத்தை எதுவும் இல்லையே என அலட்சியம் வேண்டாம். வருடம் ஒருமுறை பல் பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்ய வேண்டியதும் அவசியம். பல் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அடிக்கடி பற்களை ஃபிளாசிங் செய்து கொள்வது பற்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கும்.

6. வயதாக ஆக உணவில் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை என்றதும் நேரடியான சர்க்கரை மட்டுமல்ல. உணவில் மறைந்துள்ள மறைமுக சர்க்கரையும்தான். நீங்கள் உண்ணும் உணவுகளில் அதை கவனியுங்கள். செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்டுள்ளவற்றை சாப்பிடாதீர்கள்.

7. சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட உடனே மாத்திரை, மருந்துகள் சாப்பிடுவதைத் தவிருங்கள். அதற்காக எப்போதும் எந்தப் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்க வேண்டியதில்லை. சாதாரண தும்மல், தலைவலி போன்றவற்றுக்கு வீட்டிலேயே ஓய்வெடுப்பது தீர்வளிக்கும். அதிக மாத்திரை, மருந்துப் பழக்கம் ஆரோக்கியமானதில்லை.

8. 5 நொடி ஹெல்த் செக்கப் செய்வது உங்கள் ஆரோக்கியத்துக்கான சுய பரிசோதனையாக இருக்கும்.மலம் கழித்த பிறகு அதில் ரத்தக்கசிவு ஏதேனும் தென்படுகிறதா என பாருங்கள். எப்போதோ ஒருநாள் அப்படி இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையுமோ அடிக்கடியோ அப்படி நடந்தால் எச்சரிக்கை தேவை. மூல நோயின் காரணமாக அப்படி நேர்கிறதா அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியா என்பதை சரியான மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.

9. படுக்கையில் விழுந்ததும் எத்தனை நிமிடங்களில் தூங்கப் போகிறீர்கள்? ஐந்து நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவீர்கள் என்றால் உங்களுக்குத் தூக்கம் போதவில்லை என அர்த்தம். அதிக உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கத்தைவிடவும் அரை மணி நேரம் அதிகமாகத் தூங்கிப் பாருங்கள். அப்போதும் இந்தப் பிரச்னை சரியாகவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

10. கொஞ்சமாக சாப்பிட்டாலும் உடனே வயிறும், உடலும் உப்பிக்கொள்கிற மாதிரி உணர்கிறீர்களா? 2 வாரங்களுக்கும் மேலாக இப்படி உணர்ந்தீர்களானால் மருத்துவப் பரிசோதனை முக்கியம். கர்ப்பவாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி மிகவும் சகஜமாகக் காணப்படுவதாகவும், ஆனாலும் பல பெண்களும் இதை அலட்சியப்படுத்துவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வயிறு மற்றும் உடல் உப்புசத்தை வாயுக்கோளாறு என நீங்களாகவே நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

11. சுவாரஸ்யமான இந்த சோதனை உங்கள் புத்தியைக் கூர்மையாக்கும். உங்கள் முன் உள்ள 5 பொருட்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 4 நிறங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் உணரும் 3 உணர்வுகளை (குளிர், வெப்பம் மாதிரி) நினைவில் கொள்ளுங்கள். 2 ஒலிகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சூழலில் உள்ள ஒரு வாசனையை நினைவில் கொள்ளுங்கள். இப்படி ஐம்புலன்களுடன் கட்டுப்பாட்டில் இருப்பதென்பது ஒருவகையான மனப்பயிற்சி என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். உண்மையாகவே பசிக்கிறதா என்பதில் தொடங்கி உங்கள் உணர்வுகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட இந்த சுயபரிசோதனை உங்களுக்கு உதவும். அடிக்கடி செய்து பார்க்கலாம்.

12. உடற்பயிற்சி செய்கிற வழக்கமுள்ளவரா? ரொம்ப நல்லது. அதேநேரம் உடற்பயிற்சிக்குப் பிறகு உங்கள் உடல் வலிகளை கவனிக்கவும், உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது கொடுக்கவும் தவறாதீர்கள். மென்மையான மசாஜ், நீராவிக்குளியல் என உடலை ரிலாக்ஸ் செய்ய ஏகப்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்குப் பொருந்திப் போகும் ஒன்றைப் பின்பற்றுங்கள்.

13. தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தியானமா? அதெல்லாம் நமக்கு சரியா வராது. ‘கண்ணை மூடி உட்கார்ந்தா கண்டதும் ஞாபகம் வருது’ என்பதுதானே உங்கள் வாதம்? தியானம் செய்ய ஆரம்பிக்கும்போது எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டுதான் இது. ஆனால், போகப்போக சரியாகி உங்கள் மனமும், உடலும் தியானத்துக்குப் பழகிவிடும். உங்களுக்குப் பிடித்த, அமைதியான இடத்தில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். உங்கள் கவனம் முழுவதும் உங்கள் சுவாசத்தில் இருக்க வேண்டும்.

14. உடையணிகிற விதம் மற்றும் ஹேர் ஸ்டைலை மாற்றுவதுகூட ஒருவகையில் உங்கள் மன அழுத்தம் விரட்டி, உங்களை உடலளவிலும் மனதளவிலும்
உற்சாகமாக வைக்கும்.

15. சிரிப்பை மறக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள். வாய்விட்டு சிரிப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வருகிறதாம். இதயம் நன்கு இயங்குகிறதாம். மன அழுத்தம் குறைகிறதாம்.

எனவே, மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் நிறைய நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது, அப்படிப்பட்ட சம்பவங்களை அசைபோடுவது, நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுடன் இருப்பது போன்றவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் ஹியூமர் கிளப்புகளில் சேர்ந்தும் உங்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.