Home காமசூத்ரா நிங்கள் வாழும் தாம்பத்திய வாழ்க்கை வெற்றிகரமாக அமைய

நிங்கள் வாழும் தாம்பத்திய வாழ்க்கை வெற்றிகரமாக அமைய

277

இன்பமான வாழ்க்கைக்கு……:தேவை பாலியல் கல்வி

திருமண உறவின் இன்றியமையாத பட்டியலில் பாலுறவுக்கு முக்கிய இடமுண்டு. மணவாழ்க்கையில் காலடி வைக்கும் பெண், ஆணின் மனம் கோணாமல் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாள். ஆணோ காளையை அடக்கும் வீரனைப் போல அவளை அணுகுகிறான். விளைவு, இருவருக்கும் பொதுவான பால் இன்பத்தில் பெரும்பாலும் ஆண் மட்டுமே பசியாறுகிறான். பெண்ணின் தேவை பூர்த்தியானதா என்பதை ஆண் உணர்வதில்லை. ஆண் மையச் சமூகமும் நமக்கு அரைகுறையாகப் புகட்டப்படும் பாலியல் கல்வியும் அப்படித்தான் நம்மை வடிவமைத்திருக்கின்றன.

“திருமணத்துக்கு முன்புவரை பாலியல் குறித்து அறிந்துகொள்ள இங்கு வாய்ப்பில்லை. திருமணத்தின் பெயரால் தடாலென அந்த உறவுக்குள் தள்ளப்படும்போது ஆணும் பெண்ணும் தடுமாறிப்போகிறார்கள். பாலுறவில் உணர்ச்சியை உள்வாங்க, சிறுநீர் கழிக்க, இனப்பெருக்கத்துக்கு என மூன்றுக்குமாக ஆணுக்கு ஒரே உறுப்பு உள்ளது. பெண்ணுக்கோ இவை மூன்றும் தனித்தனியாக ஒரே இடத்தில் இருக்கின்றன. இந்தப் பாலியல் அடிப்படைகளை அறிந்த தம்பதியரால் மட்டுமே உறவில் உணர்வைப் பெருக்கி உச்சத்தை நோக்கிச் செல்ல முடியும். மற்றவர்கள் தடுமாறித் தவிப்பார்கள்” என்கிறார் பாலியல் சிறப்பு மருத்துவரான காமராஜ்.

மூளை உணரும் உச்சம்

“முயலுக்கு உறவு ஓரிரு நிமிடம்தான். ஒட்டகத்துக்கு மணிக்கணக்கில் அமையும். இரண்டிலும் இனத்தைப் பெருக்குவதற்கும் அப்பால், பாலுறவை முன்வைத்து அவை பெரிதாகக் கூடி மகிழ்ந்து குலாவு வதில்லை. இதுவே மனிதனின் முழுமையான உறவுக்கு முன்னேற் பாடுகளைக் கணக்கில்கொள்ளாமல் குறைந்தபட்சம் 14 நிமிட செயலாக்கமாவது அவசியம். இந்த உறவு இருவருக்கான திருப்தியையும் மகிழ்ச்சியையும் அடையாளம் காட்டும். இவை உடலெங்கும் தோன்றும் மின்காந்த அதிர்வு களாகவும் அதைத் தொடரும் பேரமைதியாகவும் திருப்தியாகவும் தளர்வுமாகவும் கலவையான உணர்வுகளைத் தரும். இதை உச்சம் என்பதாக மூளை உணரும்.

ஆணைப் பொறுத்தவரை விந்து வெளியேற்றத்தையே உச்சமாகக் கருதுகிறான். உண்மையில் ஆணின் உச்சம் என்பது அதற்கு முன்பாகவோ பின்பாகவோ ஒரு சேரவோ நிகழலாம். பெண்ணின் உச்சம் ஆணிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டது. பெண்ணுக்கு நேரும் உச்சமும் அதன் எண்ணிக்கையும் பல தம்பதியர் அறியாதது. பாலியல் கல்வியுடன் பெண் உணரும் சுதந்திரமும் ஆண் அதை மதிப்பதும் இந்த அறியாமைகளைப் போக்கி இல்லறத்தை முழுமையாக்க உதவும்” என்கிறார் காமராஜ்.

உச்சத்தில் வித்தியாசம்

உச்சத்தை நோக்கிய பயணத்தில் ஆண் – பெண் இடையே அடிப்படை வேறுபாடுகள் உண்டு. ஆணின் பயணம் தடாலடியானது. அவனது செங்குத்தான பயணத்தில் சிகரம் தொட்ட அதே வேகத்தில் சறுக்கித் தரையில் விழவும் செய்வான். மாறாக, பெண்ணின் பயணம் சற்றுக் கிடைமட்டமானது. சீராக ஏறி சிகரம் தொடுவதுடன் அங்கே கூடுதல் நிமிடங்கலாக சஞ்சரித்துவிட்டு, சாவகாசமாகத் தரைக்குத் திரும்புவாள்.

திரும்பும் வழியிலோ அதற்குப் பிறகோ மேலும் பல முகடுகளை அவள் சந்திக்கலாம். ஆணின் ஒற்றை உச்சம் சடுதியில் முடிந்துவிடும். பெண்ணுக்கு அது பல நிமிடங்களில் சாத்தியமாவதுடன் மீண்டும் மீண்டும் எனப் பன்முறை உச்சங்கள் பெற அவளால் இயலும். இப்படி இன்பத்தைத் துய்க்கும் இயல்பில் பெண் பாக்கியவதி. ஆனால், இதற்கு ஆணின் இசைவு அவசியம் என்ற வகையில் அவள் அபாக்கியசாலி. அனைத்தும் உணர்ந்த அன்பான கணவன் வாய்த்த பெண்களுக்கு மட்டுமே உச்சம் நிச்சயமாகும்.

ஒருசேரப் பயணித்தால்

அந்தரங்க உறவை இயக்கும் கருவியாகத் தன்னை நினைத்து ஆண் பெருமிதம் கொள்வதுண்டு. இந்தத் தாம்பத்திய பயணத்தில் தனது வேகத்தை மிதமாக்கி, பெண்ணையும் சேர்த்து கொண்டு இலக்கை ஒரு சேர அடைந்தால் மட்டுமே அந்தப் பெருமிதம் முழு அர்த்தம் பெறும். திருப்தியடையாத பெண் உடலளவிலும் மனதளவிலும் உளைச்சலுக்கு ஆளாவாள். சில வீடுகளில் இல்லத்தரசிகள் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். சில நேரம் அவசரமற்ற, அவசியமற்ற வேலைகளைக்கூட இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்; தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.

கவனிக்கப்படாத பெண்ணின் இந்த அமைதியின்மை வீட்டிலும் வீட்டுக்கு வெளியேயும் அபத்தங்களை விளைவிக்கும். மரபுக்கும் வளர்ப்புக்கும் கட்டுப்பட்டு, தனக்கு இழைக்கப்பட்ட அந்தரங்க அநீதியை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள் குமைந்துகொண்டு வேறுவிதங்களில் வெடித்தபடி அந்தப் பெண் பெயரளவுக்கு வாழ்ந்து முடித்துவிடுவாள். முந்தைய தலைமுறைகளின் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் கடந்தார்கள். விழிப்படைந்த புதிய தலைமுறையினர் விவாகரத்து வரைக்கும் தற்போது செல்கிறார்கள்.

பட்டெனக் காரணத்தை உடைக்கும் பெண்களும் உண்டு. ‘ஆண்மையற்று இருத்தல், பெண்ணைத் திருப்திபடுத்த முடியாதது’ போன்ற காரணங்களின் கீழும் விவகாரத்து பெற நம் சட்டத்தில் வழியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி அழைத்தால் ஆகாதா

அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கி வருவதன் மூலமோ சிறு கண்ணசைவிலோ ஆண் அழைப்பு விடுப்பதைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவனுடன் சேர்ந்து வாழும் சக உயிரியான மனைவிக்கு, அதுபோல தன் ஆசையை வெளிப் படுத்த, அழைப்பு விடுக்க வாய்ப்பு இருக்காது. உண்மையில் மனைவியை நேசிக்கும் ஆண்களுக்கு அவளின் ஒவ்வொரு துடிப்பும் அத்துப்படியாக வேண்டும்.

ஒவ்வொரு இழை மூச்சும் அவனுக்கான தனி மொழியாக இருக்க வேண்டும். “கணவன் – மனைவி இடையே ஈகோ இல்லாத ஆரோக்கியமான உரையாடல் அவசியம். அந்தரங்கத்தில் அவமானம், வெட்கம், பூடகம் தேவையில்லை. வெளிப்படையாகப் பேசலாம். விரும்பியதைக் கேட்டுப் பெறலாம். பெற்றது போலவே பகிர்ந்தும் மகிழலாம் என்ற அளவுக்கு அன்னியோன்யம் தழைத்திருப்பது அவசியம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

புறக்கணிப்பும் குறைபாடும்

“வளர்ந்த மேற்குலக நாடுகள் பெண்ணுக்கான உச்சத்தைப் போற்றிச் சிலாகிக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னும் பேசாப் பொருளாகவே உள்ளது. ஆணுறை நிறுவனமொன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவில் சுமார் 10 சதவீதப் பெண்களே உச்சம் என்பதை அறிந்திருப்பதாகத் தெரிவித்தனர். ஆணுக்குச் சாத்தியமாகும் உச்சம் பெண்ணுக்குப் புறக்கணிக்கப்படும்போது பலவகையிலும் அது குடும்ப நலனுக்குத் தீங்கு தருகிறது.

உச்சத்தை உணராதவர்களுக்குப் பாலியல் உந்து சக்தி குறைவதால் ஏற்படும் இனம்காட்டா மனநோய்கள் பலவும் இதில் அடங்கும். உச்சம் உடலையும் மனதையும் தளர்த்தி, அமைதியான ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். தம்பதியரிடையே பேரன்பைப் பெருக்கி, இணக்கத்தை வளர்த்து, சில்லறைப் பிரச்சினைகளைச் சிதறடிக்கும். ஆயுள் அதிகரிப்பு, சீரான நோய் எதிர்ப்பு ஆற்றல், புற்றுநோய் சாத்தியத்தைக் குறைப்பது என ஏராளமான பலன்களையும் உச்சம் தரும்.

இன்னொரு பக்கம் உச்சத்தை உணர வாய்ப்பில்லாத குறைபாடும் சில பெண்களைப் பாதிப்பதுண்டு. விருப்பம் இல்லாத, வெறுக்கத்தக்க உறவுக்கு ஆளாகும் பெண்கள் இதில் சேர்வார்கள். நீரிழிவு நோய், ஹார்மோன் குறைபாடு, தைராய்டு பாதிப்பு போன்ற பாதிப்புடைய பெண்களால் உச்சம் என்பதை முழுமையாக உணர முடியாது. இவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படும்