தம்பதிகளின் நீடித்த சந்தோஷ வாழ்க்கைக்கு என்ன காரணங்கள் என்பதை அறிவியல் ஆராயப் புகுந்து அதிசயமான உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த உண்மைகளை அறிந்து கொண்டால் லட்சக் கணக்கான இளம் தம்பதியர் பயன் பெறலாம் இல்லையா!
கணவனோ மனைவியோ உடல் நலம் குன்றி இருக்கும் போதோ அல்லது சோகமாக இருக்கும் போதோ ஒருவருக்கொருவர் ஆதரவு தந்து வாழ்ந்தால் வாழ்க்கை சோபிக்கும் என்று நினைப்பவர்களுக்கு அறிவியல் உபயோகமான ஒரு அறிவுரையைத் தருகிறது. உண்மையில் கணவனோ மனைவியோ வெற்றியை அனுபவிக்கும் தருணங்களில் அவரைப் பாராட்டுங்கள் என்கிறது அது. மனைவிக்கு ஆபீஸில் ஒரு ப்ரமோஷன் என்று தகவலைப் பெறும் போது ஓஹோ என்ற ஒற்றை வார்த்தையில் அதை விட்டு விடாமல் அதை அடைய மனைவி என்ன கஷ்டப்பட்டார், அதில் உள்ளடங்கிய போராட்டங்கள் எவை அதை மீறி வெற்றி எப்படி பெறப்பட்டது என்றெல்லாம் நுணுக்கமாக அவரிடம் கேட்டு தன் மகிழ்ச்சியை ஒரு கணவன் சொன்னால் அங்கு நடப்பதே வேறு. மனைவியின் மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகும். தாம்பத்ய உறவு வெகு காலம் நீடிக்க ஆரம்பிக்கும். நல்ல நேரங்களில் உறுதுணையாக இருங்கள் என்கிறது அறிவியல்! சின்ன சின்ன சம்பவங்களிலும் கூட பாஸிடிவ் அணுகுமுறையை ஒருவருக்கொருவர் காண்பித்தால், அப்படிப்பட்ட சம்பவங்களை ஒரு சின்ன நடை மூலமோ சேர்ந்து ஒரு சினிமாவிற்கு செல்வதன் மூலமோ காண்பித்தால் கூடப் போதும் உணர்வு பூர்வமான தோழமை இறுகும் என்கிறது ஆய்வு முடிவுகள். உண்மையில் ஒரு நெகடிவ் நிகழ்ச்சிக்கு வாழ்க்கையில் மூன்று பாஸிடிவ் சம்பவங்கள் நடக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை!
இந்த மூன்றுக்கு ஒன்று என்ற விகிதம் தம்பதிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சம். எப்போதும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவோர் சின்னச் சின்ன எரிச்சல்களையும் வெறுப்புகளையும் சுலபமாகக் கடந்து செல்கின்றனர் என்கிறார் நார்தி கரோலினா சேபல் ஹில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் பார்பாரா எல். ப்ரட்ரிக்ஸன். இந்த பரந்த பார்வை சிக்கலான பிரச்சினைகளுக்குச் சுலபமான தீர்வுகளைத் தந்து விடுகிறது என்கிறார் அவர். ‘நீ’ நான் என்ற இரண்டு எல்லைகளைத் தகர்த்து ‘எப்போதும் நாம்’ என்ற உணர்வை ஏற்படுத்தி உணர்வு பூர்வமான நீடித்த ஒற்றுமையை ஏற்படுத்த பாஸிடிவ் எமோஷன்ஸ் எனப்படும் ஆக்கபூர்வமான உணர்வுகளை அடிக்கடி கொள்வதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? காதல் அன்பு போன்ற உணர்ச்சிகளை மேம்படுத்தி விடும் ஹோட்டல்களில் மனம் விட்டுப் பேசலாம். நல்ல நறுமணம் ஊட்டும் வாசனைகளைத் தெளித்த இடத்திலோ அல்லது இனிய இசை ஒலிக்கும் இடங்களிலோ உங்கள் வேலைகளைச் செய்யலாம். மேஜையின் மீது அல்லது படுக்கை அறையில் நல்ல போட்டோக்களின் ஆல்பங்களை அடுக்கி வைத்து அதைப் பார்த்து உத்வேகம் பெறலாம். நாள் முடிவில் மறக்காமல் நெருக்கமானவரை ஒரு சின்ன அரவணைப்பு செய்து அவர்களை குஷிப் படுத்தலாம்.
பத்து முக்கியமான பாஸிடிவ் உணர்ச்சிகள் எவை எவை தெரியுமா என்று கேட்கும் உளவியலாளர் பார்பாரா எல். ப்ரட்ரிக்ஸன்,சந்தோஷம் நன்றி, அமைதி, ஆர்வம், நம்பிக்கை பெருமிதம், கேளிக்கை, உத்வேகம், ஆச்சரியம், அன்பு ஆகிய பத்து தான் அவை என்று பதில் கூறுகிறார். இந்த பத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பது நன்றி உணர்ச்சி தான்! ஏனெனில் அன்றாடம் அல்லது அவ்வப்பொழுது நன்றியை வெளிக்காட்டுவது பெரிய காரியத்தைச் சாதிக்கிறது. டின்னரின் போது மனைவி செய்த சிறிய டிஷ்ஷைப் பாராட்டினால் கூட அது மனைவிக்குப் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நன்றியை இருவரில் ஒருவர் வெளிப்படுத்தினாலும் கூட பயன் அடைவதோ எப்போதும் இருவரும் தான்!
ஒரு ஆய்வாளர் இப்படி நன்றி உணர்வு வெளிப்படுத்தப்பட்ட நாளுக்கு மறு நாள் எல்லா விஷயமும் சுமுகமாக வெற்றியுடன் நடைபெறுகிறது என்கிறார்.அது மட்டுமல்ல காதல் உணர்வையும் அது அதிகமாக்குகிறது என்பது ஆய்வின் முடிவு.இப்படி வெளிப்படையாக நன்றி உணர்வு ஒவ்வொரு முறையும் தெரிவிக்கப்படும் போது அது ஆறு மாதத்தில் முறியும் மணவாழ்க்கையை 50 சதவிகிதம் அடித்துத் துரத்தி விடுகிறது என்கிறது ஸயின்டிபிக் அமெரிக்கன் இதழில் வெளியான ‘ஹாப்பி கப்பிள்’ என்னும் கட்டுரை!
ஆரோக்கியமான காதல் உணர்வை வெளிப்படுத்துங்கள் என்பது அறிவியல் தரும் அறிவுரை. ஆரோக்கியமில்லாத காதல் உணர்வு எது என்று எதிர் கேள்வியைக் கேட்கலாம். க்யூபெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் ராபர்ட் வல்லெராண்ட், “வெறித்தனமான காதல் உணர்வு தான் ஆரோக்கியம் இல்லாத காதல் உணர்வு! அது செக்ஸிலும் திருப்தி தராது உறவையும் மேம்படுத்தாது” என்கிறார். ஆரோக்கியமான காதல் உணர்வோ நாம் நேசிக்கும் அல்லது மிகவும் மதிக்கும் ஒரு செயல் மீதோ அல்லது நேசிப்பவர் மீதோ தன்னிச்சையான இயல்பான தூண்டுதல் உணர்வு தான் ஆரோக்கியமான காதல் உணர்வு. இதில் நெருக்கம் அதிகரிக்கும்போதே இருவரின் தனிப்பட்ட நிலைகளும் காக்கப்படும். ஒரு சுலபமான எடுத்துக்காட்டு இது தான்: எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. செயலில் முதலாவதாக வந்ததாகக் காண்பிப்பது முக்கியம் இல்லை; உணர்வுகள் ஒன்றானதா என்பதே முக்கியம்! ஓடலாம்; ஆடலாம்; பாடலாம். செக்ஸிலும் ஈடுபடலாம்! வெற்றியைக் காண்பிக்க அல்ல; நேசத்தைக் காண்பிக்க மட்டுமே!
ஆக அறிவியல் சந்தோஷமான தம்பதியினரை இனம் கண்டு ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மைகள் நான்கு. நீடித்த தாம்பத்ய வாழ்க்கையை சந்தோஷத்துடன் கொண்டாடி வாழ்வதற்கு உதவும்அவை 1) சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் 2) எப்போதும் பாஸிடிவாக இருங்கள் 3) நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் 4) ஆரோக்கியமான காதல் உணர்வைக் கொண்டு வாழுங்கள்.