தலைமுடி கருப்பாக இருப்பது தான் அழகு. செம்பட்டையாகவோ, நரைக்க ஆரம்பித்தாலோ தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர். நமது தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடி உறை அடியிலிருக்கும் மெலானோசைட்ஸ் நம்முடிக்கு நிறமளிக்கும் செல்கள்.இவை மெலானின் என்ற நிறமியை தயாரிக்கின்றன. மெலானின் அளவுப்படி தோல், முடி நிறங்கள் அமைகின்றன.வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து பின் நின்று விடும். வயதால் முடி நரைத்தால் அதற்கு மாற்று இல்லை.நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்ற வழி இல்லை. ஆனால் இளம் வயதிலேயே தலை நரைத்தால் அதை குணப்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இளநரையை தடுக்க
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் கலந்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசி குளித்தால் இளநரை முடி, கறுப்பாகும்.இதே போல கறிவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளை பயன்படுத்தலாம். மேற்சொன்ன கீரைகளுடன், கீழாநெல்லியையும் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு கைப்பிடி அளவு பச்சைத்துளசி இலையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு காய்ச்சி பின்னர் இந்த நீரை எடுத்து இளம் சூட்டோடு தலையில் உரசி முடி வேர்க்கால் முதல் நுனிவரை தினசரி தடவி வந்தால் நரை நீங்கும். முடி கறுமை நிறம் பெறும்.
ஊட்டச்சத்துணவுகள்
கறிவேப்பிலையை தினசரி உணவில், சாம்பார், ரசம் தாளிக்கையில், சட்னியாக, துவையலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து உபயோகித்தால் அதன் முழுப்பலன் கிடைக்கும். கறிவேப்பிலையை பச்சையாகவே பெறும் வயிற்றில், காலையில் சாப்பிட்டு வரலாம்.கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளும், முடி கருமையாக வளரவும், நரை வராமல் தடுக்கவும் செய்யும். இந்த மூன்று கீரைகளையும் இரண்டு மாதம் பயன்படுத்தினால் உடற்சூடு தணிந்து, கண்கள் குளிர்ந்து, முடியும் ஆரோக்கிய மடையும்.இஞ்சியை சீவி, தேனுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இதேபோல் வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் இதனால் இளநரையை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.