Home பெண்கள் உடல் கட்டுப்பாடு சரியான சைஸ் பிரா அணிவது நல்லது..!

சரியான சைஸ் பிரா அணிவது நல்லது..!

51

பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம்.

இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.
பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.

எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள் என்று இந்த கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள்.

இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது. மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.

பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை.

மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது. பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர்.

எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.

மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.

பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம்.