Home பாலியல் எய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்

எய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்

54

நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவை மேற்கொள்கிறீர்களா! அப்போ இந்த நோய் உங்களை தாக்க வாய்ப்புள்ளது? கோனோரியா என்றால் என்ன? கோனோரியா உடலுறுவின் மூலம் பரவக் கூடிய ஒரு வகை நோய்.

இந்த நோயை நியஷரியா கோனோரியா என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது. இதுவும் கொடிய பாலியல் நோய்த் தாக்குதல்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

பரவும் இடங்கள் இது நமது உடலின் ஈரப்பதமான மற்றும் சூடான பகுதிகளில் தன் தாக்குதலை ஏற்படுத்துகிறது. சிறுநீர் வடிகுழாய், கண்கள், தொண்டை, பெண்ணின் பிறப்புறுப்பு, ஆசனவாய், பெண் இனப்பெருக்க உறுப்புகளான கருக்குழாய், கருப்பை வாய், கர்ப்பபை போன்றவற்றின் வழியாக பரவுகிறது.

பரவும் முறை இது ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு வாய் வழியாகவோ, குடல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவோ பரவுகிறது. நிறைய பேர்களுடன் ஆணுறை அணியாமல் உடலுறவில் ஈடுபடுதல், ஆல்கஹால், போதை மருந்துகள் மூலம் தவறாக செயல்படுதல் போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

தடுக்கும் முறைகள் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளுதல், ஒரே நபருடனான உடலுறவு, ஆணுறை அணிதல் போன்ற முறைகள் மூலம் இந்த தொற்றை தடுக்க இயலும். இப்போதெல்லாம் நம்மை தாக்கும் நோய்த்தொற்றுக்கள் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைவிட வேகமான ஆற்றலுடன் பரவுகிறது. அதற்கும் கூட நம்முடைய வாழ்க்கை முறைதான் காரணம் என்றே சொல்லலாம்.

அறிகுறிகள் இதன் அறிகுறிகள் 2-14 நாட்களுக்குள் வெளிப்படும். சில பேருக்கு இதன் அறிகுறிகள் தென்படாமல் கூட இருக்கும். எனவே இந்த மாதிரி அறிகுறிகள் தெரியாத நிலையில் எளிதாக மற்றவர்களுக்கு பரவி விடப்படுகின்றன. கொஞ்சம் அறிவியல் அறிவுடன் இருப்பவர்கள் இந்த அறிகுறிகளை மிக எளிதாகக் கண்டுகொள்கிறார்கள். சிலர் இது எப்போதும் இருக்கும் வழக்கமான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று எளிமையாக நினைத்துவிடுகிறார்கள்.

ஆண்களுக்கான அறிகுறிகள் பரவிய உடனே ஆண்களுக்கு எந்த வித அறிகுறியும் ஏற்படாது. ஏழு நாட்கள் கழித்து தான் ஒரு சில அறிகுறிகள் தென்படும். முதல் அறிகுறியாக சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் வலி உண்டாகும். அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்கும் எண்ணம், வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஆண்குறியில் திரவம் வெளிப்படுதல், ஆண்குறியின் திறப்பு பகுதியில் வீக்கம் மற்றும் சிவந்து காணப்படுதல், விரை வீக்கம், தொண்டை புண். இந்த அறிகுறிகள் அப்படியே உடல் முழுவதும் பரவி உங்கள் சிறுநீர் வடிகுழாய் மற்றும் மலக்குடலை பாதிப்படையச் செய்து விடும்.

பெண்களுக்கான அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படும் கோனோரியா அறிகுறிகளை சரிவர கண்டறிய இயலாது. மற்ற தொற்றுக்களை போலவே இதன் அறிகுறிகளும் இருப்பதால் கொஞ்சம் கண்டறிவது சிரமம். ஈஸ்ட் தொற்று மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற அறிகுறிகளை இது வெளிப்படுத்தும். நீர்ம மற்றும் க்ரீமி திரவம், பச்சை திரவம் யோனி பகுதியில் வெளிப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் வலி உண்டாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்தல், அதிக மாதவிடாய் இரத்த போக்கு, தொண்டை புண், உடலுறுவின் போது வலி, வயிற்றில் சுறுக் சுறுக்கென்று குத்தல், காய்ச்சல் போன்றவை தென்படும்.

பரிசோதனைகள் சோதனை 1: முதல் பரிசோதனைப்படி பாதிக்கப்பட்ட நபரின் பெண்ணின் பிறப்புறுப்பு அல்லது ஆணுறுப்பு பகுதியில் இருந்து திரவ மாதிரியையும் எடுத்து, அவர்களிடமிருந்து இரத்த மாதிரியையும் எடுத்து இரண்டையும் ஒரு கண்ணாடி தட்டில் வைத்து நுண்ணோக்கி மூலம் பரிசோதிப்பர். இந்த முறையில் துல்லியமான முடிவுகள் கிடைக்காவிட்டாலும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

சோதனை 2: இந்த முறையில் அதே மாதிரி மாதிரிகளை சேகரித்து ஒரு சிறப்பு கண்ணாடி தட்டில் வைத்து இன்குபேட்டரில் வைத்து சாதகமான சூழ்நிலையில் வைத்து சில நாட்களுக்கு அதை வளரச் செய்வர். பாக்டீரியாக்கள் பல்கி பெருகின பிறகு அதை பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்வை காண்பார்கள். இதில் முதல் நிலை பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திலும் இறுதி முடிவுகள் 3 நாட்களுக்கு அப்புறமாகவும் கொடுக்கப்படும். விளைவுகள் பெண்கள் இந்த பாக்டீரியா தொற்றிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அப்படியே பரவி பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளான கருக்குழாய், கருப்பை வாய், கருப்பை போன்றவற்றை முழுவதுமாக பாதித்து விடும். மேலும் கருக்குழாய் அடைப்பு, குழந்தையின்மை, கருக்குழாயில் கருவளர்தல், இடுப்பு அழற்சி நோய், கருவில் வளரும் குழந்தைக்கு பரவுதல் போன்ற அபாயத்தையும் உண்டு பண்ணி விடுகிறது.

ஆண்கள் ஆண்களுக்கு ஆண்குறியை பாதித்து ஆண்மையின்மை பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களின் சிறுநீர் குழாயையும் பாதித்து விடும். இருபாலருக்கும் இதில் பாதிப்பு உண்டு. மேலும் இந்த பாக்டீரியா இரத்தத்தில் காலத்து ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஆர்த்ரிட்டீஸ், இதய வால்வு பாதிப்பு, தண்டுவடம் மற்றும் மூளையில் அலற்சி போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
ஆன்டிபயாடிக் செப்திராக்ஸோனின் ஆன்டிபயாடிக் ஊசி மூலமாகவோ, ஆன்டிபயாடிக் அசித்ரோமைசினின் மாத்திரைகள், மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதை குணப்படுத்தலாம். நீங்கள் இந்த நோயால் பாதிப்படைந்து இருந்தால் பொது சுகாதாரத் துறையில் இது குறித்து முறையிட வேண்டும். இதனால் உங்களுடன் உடலுறவு கொண்ட நபரும் இதனால் பாதிப்படைந்து உள்ளாரா இது இன்னும் யாருக்கெல்லாம் பரவி இருக்கிறதா என்று ஆராய உதவியாக இருக்கும். இதன் மூலம் கோனோரியா நோய் பரவுவதை தடுக்க இயலும். அவசர சிகச்சைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை ஏழு நாட்கள் தொடர்ந்து எடுத்து வருவதன் மூலம் இந்த நோய் தாக்குதலிருந்து விடுபடலாம்.

தடுப்பதற்கான முறைகள் தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பான உடலுறவு முறையை மேற்கொள்ளுங்கள். ஆணுறை அணிந்து செயல்படுங்கள் உங்கள் துணைக்கு இந்த பிரச்சினை இருக்கா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்கள் துணையை பற்றிய விவரங்களையும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். ஏனெனில் இதன் மூலம் பரவுவதை தடுக்கலாம்.

மருந்துகள் உங்களுக்கு தொற்று இருப்பதாக தெரிந்தால் உடனே மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் இதற்கு தீர்வளிக்கின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். இது பாக்டீரியல் பெருக்கத்தை அதிகரித்து விடும். உங்கள் துணைக்கு இருந்தால் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துங்கள். அதுவரை உடலுறவை தவிர்த்து விடுங்கள். எப்பொழுதும் பாதுகாப்பான உடலுறுவை மேற்கொண்டால் பாதுகாப்பாக வளமுடன் வாழலாம்.