Home பாலியல் பெண்கள் பயன்படுத்தம் மென்சஸ் கப் பற்றிய டாக்டர் சொல்லுவது என்ன?

பெண்கள் பயன்படுத்தம் மென்சஸ் கப் பற்றிய டாக்டர் சொல்லுவது என்ன?

96

மென்சஸ் கப் என்பது என்ன?

மென்சஸ் கப் என்பது பெண்கள் மாதவிடாயின்போது சேனிட்டரி நாப்கீன், டேம்பன் போன்றவற்றுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கான ஒரு பொருளாகும். மென்சஸ் கப் என்பது சிறிய, நெகிழ் தன்மை கொண்ட, மணி வடிவம் கொண்ட ஓர் கோப்பையாகும். இது மருத்துவத் தரத்திலான சிலிக்கான் அல்லது லேட்டக்ஸ் இரப்பரால் தயாரிக்கப்படுகிறது. வளைவான வடிவம் மற்றும் நீண்ட கைப்பிடி போன்றவை இருப்பதால் இவை பார்ப்பதற்கு கொஞ்சம் வெட்டிய ஒயின் கிளாஸைப் போல இருக்கும்.

டேம்பன் அல்லது பேடுகள் மாதவிடாயின்போது வெளியேறுபவற்றை உறிஞ்சிக்கொள்ளும், ஆனால் இந்த மென்சஸ் கப் அவற்றைப் பிடித்து சேகரித்து வைத்துக்கொள்ளும். அவ்வப்போது அதை வெளியே அப்புறப்படுத்தி காலி செய்ய வேண்டும். சேனிட்டரி நாப்கீன்களையும் டேம்பன்களையும் பயன்படுத்திய பிறகு அப்புறப்படுத்திவிட வேண்டும். ஆனால் இந்த மென்சஸ் கப்புகளை பல முறை மீண்டும் பயன்படுத்தலாம். ஆகவே, ஒரு மென்சஸ் கப் பல நாப்கீன்கள்/டேம்பன்களுக்கு சமமாகும்.

மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவது எப்படி? (How to use a menstrual cup?)

மென்சஸ் கப் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அதனை எப்படிப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது மற்றும் தொற்றுநீக்குவது (டிஸ்-இன்ஃபெக்ட்) என்பதற்கான வழிமுறைகளை வழங்கும். சிறந்த பலன்களைப் பெற, நிறுவனம் வழங்கும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்.

மென்சஸ் கப்பைச் செருகுதல்

உங்கள் கைகளை சோப்பு போட்டு நீரால் நன்கு கழுவவும்.
சவுகரியமான நிலையில் உட்கார்ந்துகொள்ளவும். கால்களை விரித்து வைத்தபடி உட்கார்ந்துகொண்டோ, கால் முட்டிகளை அகட்டி வைத்தபடி குத்தவைத்து அமர்ந்தோ, ஒரு காலை தூக்கியபடி நின்றுகொண்டோ மென்சஸ் கப்பை செருகலாம்.
உடலைத் தளர்த்திக் கொண்டு ஆழமாக சுவாசிக்கவும்.
இரு கைகளையும் பயன்படுத்தி, கப்பின் இரண்டு பக்கங்களையும் விரித்து, அதனை மடிப்பதன் மூலம் “C” வடிவத்தில் கப்பை மடிக்கவும்.
வசதியான ஒரு கையால், மேல் விளிம்புக் கீழ்ப்பகுதியில் கப்பைப் பிடித்துக் கொள்ளவும்.
கால்களை அகட்டி வைத்துக்கொண்டு மற்றொரு கையால் பிறப்புறுப்பின் இதழ்களை (லேபியா) மெதுவாக விரிக்கவும்.
“C” வடிவ முனையை மேலே வைத்தபடி, 45 டிகிரி சாய்வாக, பிறப்புறுப்பின் திறப்புக்குள் கப்பை மெதுவாக செருகவும். கப்பின் கைப்பிடி வெளியில் தெரியாமல் போகும் வரை செருக வேண்டும்.
கப் சரியாக திறந்துகொண்டதை சரிபார்க்க, உங்கள் விரல்களைக் கொண்டு துழாவிப் பார்க்கலாம். கப் நன்கு இறுக்கமாகப் பொருந்தியுள்ளதா எனப் பார்க்க கப்பை லேசாக சுழற்றிப் பார்க்கலாம்.
கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.
உங்களுக்கு மாதவிடாயின்போது எந்த அளவுக்கு திரவம் வெளியேறும் என்பதைப் பொறுத்து, சுமார் 4 முதல் 12 மணி நேரம் வரை கப்பை அணிந்திருக்கலாம்.
உடலுறவின் போது மென்சஸ் கப்பை அணிய வேண்டாம்.
இதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், உங்கள் கப்பை வேறு யாரும் பயன்படுத்தக் கொடுக்கக்கூடாது.
மென்சஸ் கப்பை வெளியே எடுத்தல் (Removing the menstrual cup)

உங்கள் கைகளை சோப்பு போட்டு நீரால் நன்கு கழுவவும்.
சவுகரியமான நிலையில் உட்கார்ந்துகொள்ளவும். குத்தவைத்து உட்கார்ந்துகொண்டால் வசதியாக இருக்கும்.
ஆழமாக சுவாசித்து, உடலைத் தளர்த்திக்கொள்ளவும்.
பிறப்புறுப்பின் திறப்பில் மென்சஸ் கப்பின் அடிப்பாகம் இருப்பதை உணரவும். அதனை சற்று கீழே கொண்டுவருவதற்கு கொஞ்சம் முக்க (கஷ்டப்பட்டு மலம் கழிக்கும்போது செய்வதைப் போல) வேண்டும்.
கப்பின் கைப்பிடியைப் பிடித்து மெதுவாக இழுக்கவும், கப்பின் அடிப்பகுதியை விரல்களால் அழுத்தவும், இதனால் ஒட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் சீலிங் திறக்கும். (கைப்பிடியைப் பிடித்து கப்பை வெளியே எடுக்க முயற்சி செய்ய வேண்டாம், இப்படிச் செய்தால் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுத்தம் இன்னும் அதிகரித்து வெளியே எடுப்பது மேலும் சிரமமாகிவிடலாம் அல்லது கைப்பிடி உடையலாம்.
கப் மெலிதாகும்படி அதனை மடிக்கவும், பிறகு மெதுவாக ஒரு பக்கத்தை முதலில் வெளியே இழுக்கவும், பிறகு மறு பக்கத்தை விடுவிக்க அதனை லேசாக வளைக்கவும்.
கப் வெளியே வந்ததும், மாதவிடாய் இரத்தம் கீழே சிந்தாமல் தடுக்க, கப்பை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்ளவும்.
அதில் உள்ளவற்றை கழிப்பறையில் கொட்டி அப்புறப்படுத்தவும்.
கப்பை சிங்க்கில் வைத்து, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சோப்பு போட்டு நன்கு கழுவவும்.
சிங்க் இல்லாவிட்டால், பாட்டிலில் இருந்து நீரை ஊற்றி கப்பை நன்கு கழுவவும். டாய்லெட் பேப்பரைக் கொண்டும் கப்பை சுத்தமாகத் துடைக்கலாம்.
மென்சஸ் கப்பை அலசிவிட்டு, கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவவும்.

மென்சஸ் கப்பை சுத்தம் செய்தல் (Cleaning the menstrual cup)

மென்சஸ் கப்பை சோப்பைக் கொண்டு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். கப்பில் ஏதேனும் ஒட்டியிருந்தால், பிரஷ் அல்லது மென்மையான துணியைக் கொண்டு அகற்றவும்.

கப்பின் மேல் பகுதியில் இருக்கும் சிறு துளைகள் அடைப்பின்றியும் சுத்தமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், ஏனெனில் அவை தான் இறுக்கமாக சீல் செய்தல் மற்றும் விடுவித்தல் ஆகிய வேலையைச் செய்கின்றன. துளைகளில் ஏதேனும் அடித்திருந்தால், நீரைப் பீய்ச்சி அடித்து அல்லது பல் குத்தும் குச்சி கொண்டு அகற்றி சுத்தம் செய்யலாம். கப்பைக் கழுவி தொற்றுநீக்கவும்.

மென்சஸ் கப்பை தொற்றுநீக்குதல் (Disinfecting the menstrual cup)

மென்சஸ் கப்பை 3 முதல் 5 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைக்கவும்.

மென்சஸ் கப்பை சேகரித்து வைத்தல் (Storing the menstrual cup)

மென்சஸ் கப்பை கழுவி, உலர்த்திய பிறகு கப்புடன் வழங்கப்பட்ட பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.

மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதன் நன்மைகள் (Advantages of Menstrual cups)

வசதி

நீண்ட நேரம் பயன்படுத்தலாம்: வழக்கமான நாப்கீன் அல்லது டேம்பனை விட மென்சஸ் கப்பை 2 முதல் 3 மடங்கு அதிக நேரம் (சுமார் 12 மணிநேரம் வரை) பயன்படுத்தலாம். கழிப்பறை வசதிகள் இல்லாத சூழ்நிலைகளில், இரவில் நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.
உடலில் இறுக்கப் பிடித்துக்கொள்ளாது: சேனிட்டரி நாப்கீன்கள் உள்ளாடைகளைப் போல இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும், டேம்பன்களில் கயிறு இருக்கும், ஆனால் இந்த மென்சஸ் கப்பில் அது போன்று உடலில் பிடித்துக்கொள்ளும் பகுதிகள் எதுவும் இல்லை. ஓடுதல், யோகாசனங்கள், நீச்சல் போன்ற விளையாட்டுகள் மற்றும் பிற அதிக செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கும் இது மிக ஏற்றது.
பயணத்தின்போது எடுத்துச்செல்வது எளிது: பயணத்தின்போது டேம்பன் அல்லது நாப்கீன்களை வாங்குவதும் அப்புறப்படுத்துவதும் சிரமமான காரியமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு மென்சஸ் கப் மிகவும் வசதியானது. ஏனெனில் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், இதை வைக்க குறைந்த இடமே தேவை, அப்புறப்படுத்துவதிலும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
அதிகமாக உறிஞ்சும் தன்மை: டேம்பன் ஒன்று உறிஞ்சுவதை விட மென்சஸ் கப் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு திரவத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் திறனுடையது. இதனால் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு, கசிவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
எளிதாகக் கழுவலாம், தொற்றுநீக்குவதும் எளிது, துர்நாற்றம் வீசாது: மென்சஸ் கப், காற்று உள்ளே வந்து மாதவிடாய் இரத்தத்தில் படுவதைத் தடுப்பதால், துர்நாற்றம் ஏற்படுவதில்லை. இவற்றைச் சுத்தம் செய்வதும் தொற்றுநீக்குவதும் எளிது.
உடல்நலம் சார்ந்த நன்மைகள் (Health benefits)

இதில் இரசாயனங்களோ வாசனைப் பொருள்களோ இல்லை: நாப்கீன்களிலும் டேம்பன்களிலும் இருப்பதைப்போல, இரசாயனங்களோ வாசனைத் திரவியங்களோ உடலுக்குத் தீங்கு தரக்கூடிய வேறு பொருள்களோ மென்சஸ் கப்புகளில் இல்லை.
வறட்சியை ஏற்படுத்தாது: மென்சஸ் கப் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சிக்கொள்வதில்லை, ஆகவே உள்ளிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளாது. இதனால், பிறப்புறுப்பு வறட்சி அடையாமல் இருக்கும்.
TSS: டேம்பன்களில் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (TSS) ஏற்படும் அபாயமுள்ளது, ஆனால் மென்சஸ் கப்பில் இது கிடையாது.
ஒவ்வாமை (அலர்ஜி) குறைவானது: மருத்துவத் தரத்திலான சிலிக்கானால் தயாரிக்கப்படும் மென்சஸ் கப்புகள் எளிதில் பாதிப்படையும் சருமம் கொண்டவர்களுக்கும், லேட்டக்ஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கும், பிற தோல் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் மிக ஏற்றது.
சிக்கனமானது (Cost Benefits)

மென்சஸ் கப்பை முதலில் வாங்குவதற்கு அதிக செலவாகலாம், ஆனால் சில பிராண்டுகள் தகுந்த முறையில் சுத்தம் செய்து பராமரித்துப் பயன்படுத்தினால் இரண்டு மூன்று ஆண்டுகள் நன்கு உழைக்கின்றன. ஒரே ஒரு முறைதான் வாங்குகிறோம் என்பதால், ஒரே மாதத்தில் அடிக்கடி வாங்கும் நாப்கீன்கள் அல்லது டேம்பன்களுக்கு ஆகும் செலவை விட இது செலவு குறைந்ததாகவே உள்ளது.

சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் (Environmental Benefits)

ஒருமுறை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் சேனிட்டரி நாப்கீன், டேம்பன் போன்ற, பெண்களுக்கான சுகாதாரத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் கழிவுகள் உருவாகின்றன. நல்ல பிராண்டு மென்சஸ் கப்புகளை சில வருடங்கள் (2-3வருடங்கள்) தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படும் காலம் (தோராயமாக 30 வருடங்கள்) முழுவதற்கும் தேவைப்படும் கப்புகளின் எண்ணிக்கையானது (ஒரு கப்பை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம் என்று கொண்டால், 15 கப்புகள் தேவைப்படும்), அதே கால அளவிற்கு வாங்க வேண்டிய அப்புறப்படுத்தகூடிய தயாரிப்புகளின் எண்ணிக்கையைவிட (அதே கால அளவிற்கு அப்புறப்படுத்தக்கூடிய நாப்கீன் அல்லது டேம்பன் போன்ற தயாரிப்புகள் சுமார் 10,000 வாங்க வேண்டியிருக்கும்) மிகமிகக் குறைவே ஆகும். இது சுற்றுச்சூழலில் கழிவு சேர்வதை மிகவும் குறைக்கும்.

மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் (Disadvantages of menstrual cups)

பயிற்சி தேவை: நாப்கீன் அல்லது டேம்பன்களைப் பயன்படுத்துவது எளிது, ஆனால் மென்சஸ் கப்பைப் பயன்படுத்துவதற்கு சிறிது பயிற்சி தேவை.

செருகுவது கடினம்: பாலுறவில் ஈடுபடாத இளம்பெண்களுக்கு மென்சஸ் கப்பை பிறப்புறுப்பில் செருகுவது கடினமாக இருக்கலாம். கப்பைச் செருகும்போது கன்னித்திரை எனப்படும் சவ்வு கிழிய வாய்ப்புள்ளது. சில கலாச்சாரங்களில் இதுவே கன்னித்தன்மைக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது, இதனால் சில பெண்கள் மென்சஸ் கப்பைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

அருவருப்பு: இரத்தத்துடன் உள்ள கப்பை வெளியே எடுத்து, அதைக் காலி செய்வது அருவருப்பான காரியமாக இருக்கலாம். இரத்தம் நிரம்பிய கப்பை சுத்தம் செய்வது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம். குறிப்பாக, பொதுக் கழிப்பறைகளில் இதைச் செய்வது முடியாத காரியமாகலாம்.

பொருந்துவதில் சிக்கல்: ஒவ்வொருவரின் கருப்பையின் அமைப்பும் மாறுபடுவதால், சிலருக்கு மென்சஸ் கப் சரியாகப் பொருந்தாமல் போகலாம். உதாரணமாக, கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்டு) உள்ளவர்களுக்கும், கருப்பை கீழிறங்கியவர்களுக்கு (கருப்பை கீழிறங்கி பிறப்புறுப்புக்குள் தொங்கியபடி இருக்கும் நிலை) உள்ளவர்களுக்கும் மென்சஸ் கப்புகள் சரியாகப் பொருந்தாமல் போகலாம்.

முறையாகப் பராமரிக்க வேண்டும்: மென்சஸ் கப்பைப் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும் கொதிக்கும் நீர் அல்லது பால்புட்டிகளை கிருமிநீக்கப் பயன்படுத்தும் கிருமிநீக்கக் கரைசலைப் (ஸ்டெரிலைசிங் சொல்யூஷன்) பயன்படுத்தி கிருமிநீக்க வேண்டும்